Friday, May 17, 2024

கச்சி கலம்பகம் - என்ன கவலை ?

கச்சி கலம்பகம் - என்ன கவலை ?



கவலை வந்து விட்டால், அதை எப்படி போக்குவது என்று மண்டையை உடைத்துக் கொள்கிறோம். யாரைப் பார்க்கலாம், என்ன உதவி கேட்கலாம், என்ன செய்யலாம் என்று குழம்பித் தவிக்கிறோம். 


கச்சி கலம்பகம் ஒரு படி மேலே போய், கவலை ஏன் வருகிறது? அதை வரமாலேயே தடுக்க வழி இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு அதற்கு பதிலும் தருகிறது. 


"காஞ்சிபுரத்தில் உள்ள சிவனை வணங்க பல பாடல்கள் உண்டு, பாட முடியாவிட்டால் கூட மற்றவர்கள பாடுவதைக் கேட்க காது இருக்கிறது, பூக்களைப் பறித்து தூவி வழிபட பல பூக்கள் உண்டு, வணங்க தலை உண்டு, தோத்திரங்கள் சொல்ல நாக்கு உண்டு, இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு வாழ்த்த அவர் உண்டு, அது மட்டும் அல்ல அருள் செய்ய அவர் உண்டு, நமக்கு என்ன கவலை" 


பாடல்   


போற்றப்பல் பாவுண்டு கேட்கச் செவியுண்டு பூப்பறித்துத்

தூற்றக் கரமுண்டு தாழச் சிரமுண்டு தோத்திரங்கள்

ஆற்றச்செந் நாவுண்டு தென்கச்சி வாணருண் டல்லலெலா

மாற்ற அருளுண்டு நெஞ்சே! துயரெவன் மற்றெனக்கே. 


பொருள் 


போற்றப் = போற்றிப் பாட 


பல் = பல 


பாவுண்டு = பாக்கள், (பாடல்கள்) உண்டு 


கேட்கச் = கேட்க 


செவியுண்டு = காது இருக்கிறது 


பூப்பறித்துத் = பூக்களைப் பறித்து 


தூற்றக் = தூவ 


கரமுண்டு = கரங்கள் உண்டு 


 தாழச் = தாழ்த்தி வணங்க 


சிரமுண்டு = தலை உண்டு 


தோத்திரங்கள் = பக்திப் பாடல்கள் 


ஆற்றச் = பாட 


செந் நாவுண்டு  = சிவந்த நாக்கு உண்டு 


தென்கச்சி = காஞ்சி மாநகரில் தென் புறத்தில் உள்ள 


வாணருண்டு = வாணர் உண்டு. அந்தக் கடவுள் உண்டு. 


அல்லலெலா மாற்ற = அல்லல் எல்லாம் ஆற்ற = துயராகளை எல்லாம் போக்க 


அருளுண்டு நெஞ்சே! = அவருடைய அருள் உண்டு 


துயரெவன் மற்றெனக்கே = எனக்கு எப்படி துயரம் வரும்.


இதை எல்லாம் செய்து கொண்டிருந்தால் துயரம் வராது.  இதை விட்டுவிட்டு என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறோம். 


 


Thursday, May 16, 2024

திருக்குறள் - தவம் - தவம் என்றால் என்ன ?

 திருக்குறள் - தவம் - தவம் என்றால் என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2024/05/blog-post_16.html

தவம் என்றால் என்ன ? 


தச்சு வேலை என்றால் என்ன என்று கேட்டால் எப்படிச் சொல்வது? தச்சர் ஒருவர் வேலை செய்யும்போது, அதைக் காட்டி, தச்சு வேலை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று விளங்க வைக்கலாம். 


அதுபோல தவம் என்றால் என்ன என்று கேட்டால் தவம் செய்பவர்களைக் காட்டி அவர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் தவம் என்று புரிய வைக்கலாம். 


தவம் செய்பவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்?


தவம் செய்பவர்கள் இரண்டு வேலை செய்வார்கள். 


முதலாவது, தங்களுக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வார்கள். 


இரண்டாவது, மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள். 


தவம் என்றால் இந்த இரண்டும் தான். 


பாடல் 


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு


பொருள் 


உற்றநோய் = வந்த துன்பத்தை 


நோன்றல்  = பொறுத்துக் கொள்ளுதல் 


உயிர்க்குறுகண் = உயிர்க்கு + உறுகண் = உயிர்களுக்கு துன்பம் 


செய்யாமை = செய்யாமல் இருத்தல் 


அற்றே  = அதுவே 


தவத்திற்கு உரு = தவத்தின் அடையாளம், வடிவம். 


சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 


நமக்கு துன்பம் பல வழிகளில் வருகிறது. 


உடல் ஆரோக்கியம், பணத் தட்டுபாடு, உறவுகளில் சிக்கல், பிள்ளைகளால், கணவன்/மனைவி உறவில் பிரச்சனை, வேலை பார்க்கும் இடத்தில் வரும் துன்பங்கள், என்று எவ்வளவோ வழிகளில் துன்பம் வருகிறது. 


துன்பம் வந்தால் என்ன செய்கிறோம். 


வருந்துகிறோம், அதற்கு யார் காரணம் என்று அறிந்து அவர்கள் மேல் கோபம் கொள்கிறோம். வெறுப்பு வருகிறது. இது எப்படா முடியும் என்று ஒரு பதட்டம் வருகிறது. அமைதியாக இருக்க முடியவில்லை. 


வள்ளுவர் சொல்கிறார், "துன்பம் வந்தால், சரி வந்து விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். சீறி விழக் கூடாது. கோபப் படக்கூடாது. எரிச்சல் கொள்ளக் கூடாது. அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நடக்கட்டும். என்று அந்த துன்பத்தை ஏற்க பழக்கிக் கொள்ள வேண்டும். "


சரி, துன்பம் வந்தால் எப்படி அதை ஏற்றுக் கொள்வது. துன்பம் வந்தால், ஒன்று அதை எதிர்த்து நிற்போம், அல்லது ஓடிவிட முயல்வோம். ஏற்றுக் கொள்வது எப்படி?


அதற்குப் பழக்கம் வேண்டும். 


பழக பழக வந்து விடும். 


சரி, துன்பம் வந்தால் அதை ஏற்றுப் பழகலாம். வரவில்லை என்றால் எப்படிப் பழகுவது?


அதற்குத்தான் விரதம் என்று வைத்தார்கள். உண்ணா விரதம், மௌன விரதம், தூங்கா விரதம் என்று பல இருக்கின்றன. வலிந்து, சாப்பிடாமல் இருப்பது. பசி துன்பம்தான். அந்தத் துன்பத்தை ஏற்றுப் பழக்கம் பண்ணிக் கொண்டால், ஏனைய துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். 


தானே வலிய சென்று சில துன்பங்களை ஏற்றுப் பழகிக் கொண்டால், எதிர்பாராத துன்பங்கள் வரும் போது அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விடும். "நான் பார்க்காத துன்பமா" என்று என்று தோன்றும். 


பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது. 


நான் துன்பத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக மற்ற உயிர்களை துன்பப் படுத்தக் கூடாது. நான் விரதம் இருக்கலாம். அதற்காக வீட்டில் உள்ள எல்லோரையும் படுத்தக் கூடாது. 


வாழ்வில் எதைச் சாதிக்க வேண்டும் என்றால் துன்பம் வரத்தான் செய்யும். துன்பத்தை ஏற்கும் பக்குவம் இல்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது. சாதனை இல்லை என்றால் இன்பம் இல்லை. சாதனைகள் இன்பத்தைத் தரும். எனவே, தவம் இன்பத்தைத் தரும். 


படிப்பது துன்பம். 


வேலை பார்ப்பது துன்பம். 


துன்பத்தைக் கண்டு துவண்டுவிட்டால், சாதனை வராது. சாதனை இல்லாவிட்டால் வாழ்வு சிறக்காது. எனவே வாழ்வு சிறக்க வேண்டும் என்றால், சாதிக்க வேண்டும், அதற்கு துன்பத்தை சகித்துப் பழக வேண்டும். 


அதுதான் தவம். 


இன்றில் இருந்து நாலு மாடி ஏறுங்கள், சர்க்கரை போடாமல் காப்பி டீ குடித்துப் பாருங்கள், ஒரு வேளை உணவைக் குறையுங்கள், சில மணி நேரமாவது செல் போனை பார்ப்பது இல்லை என்று முடிவு எடுங்கள்,  சுவையான இனிப்பான சாப்பிடும் பொருள்களைத் தவிருங்கள். 


அதுதான் தவம். அதைச் செய்தால், நீங்களும் தவசீலர் தான். 




Tuesday, May 14, 2024

திருக்குறள் - தவம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - தவம் - ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/05/blog-post_14.html

துறவறத்தில் முதல் அதிகாரம் அருளுடைமை. இல்லறத்துக்கு எவ்வாறு அன்பு அடிப்படையோ, அது போல துறவறத்துக்கு அருள் அடிப்படை. அனைத்து உயிர்கள் மேலும் செலுத்தும் கருணை அருள் எனப்படும்.  


இரண்டாவது அதிகாரம் புலால் மறுத்தல்.  அனைத்து உயிர்கள் மேலும் கருணை இருந்தால், அவற்றை கொன்று தின்ன மனம் வராது. எனவே, புலால் மறுத்தலை இரண்டாவது அதிகாரமாக வைத்தார். 


அடுத்ததாக தவம் என்ற அதிகாரம். 


தவம் செய்தால் பெரிய பெரிய சக்திகள் வரும், மூன்று காலத்தையும் உணர முடியும், பணம், செல்வாக்கு, பதவி எல்லாம் கிடைக்கும் என்று பல நூல்கள் சொல்கின்றன. தவம் செய்து பெரிய பெரிய வரங்களைப் பெறலாம் என்று படித்து இருக்கிறோம். 


தவம் என்றால் என்ன?  


காட்டுக்குப் போய், புற்று மேலே வளரும் படி உண்ணாமல், உறங்காமல் இருப்பதா?  நீருக்குள் மூழ்கி, நெருப்புக்கு நடுவில் இருப்பதா தவம். அப்படி எல்லாம் செய்தால் யாருக்கு என்ன பயன்?  நீருக்குள் மூழ்கியே இருப்பது தவம் என்றால் தவளை, மீன் போன்றவை பெரிய தவசீலர்களாகி விடும். 


இந்த அதிகாரத்தில் தவம் என்றால் என்ன, அதை எப்படிச் செய்வது, அதனால் என்னென்ன பலன்கள், என்பது பற்றி சொல்ல இருக்கிறார். 


மிக முக்கியமான அதிகாரம். 


கவனமாக சிந்திப்போம். 



Thursday, May 9, 2024

திருக்குறள் - கைகூப்பித் தொழும்

 திருக்குறள் - கைகூப்பித் தொழும் 


மீன் பிடிப்பதற்கு என்றே சில கப்பல்கள் இருக்கின்றன. ஆழ்கடலில் சென்று பெரிய அளவில் மீன்களைப் பிடித்து, அவற்றை வெட்டி, சுத்தம் செய்து, தேவையான இரசாயானங்களைச் சேர்த்து டப்பாவில் அடைத்து கரைக்கு கொண்டு வந்து விற்பார்கள். கடலிலேயே எல்லாம் முடிந்து விடும். விற்பது மட்டும்தான் கரையில். 


அந்தக் கப்பலில் வேலை  செய்பவர்களைக் கேட்டால், "இத்தனை மீனையும் நானா தின்னப் போகிறேன்....யாரோ உண்ணப் போகிறார்கள். நான் என் கடமையைச் செய்கிறேன். நான் இல்லாவிட்டால் வேறு      ஒருவன் செய்வான். நான் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இது நடக்கத்தான் போகிறது....என் குற்றம் எதுவும் இல்லை..." என்பார்கள். 


அந்த மீனை உண்பவர்களைக் கேட்டால், "...நான் வாங்கும் போது, அந்த மீன் இறந்து பல நாட்கள் ஆகிவிட்டது. நான் அந்த மீனைப் பிடிக்கவும் இல்லை, கொல்லவும் இல்லை, பதப்படுத்தவும் இல்லை...டப்பாவில் இருந்தது, வாங்கி வந்தேன்...இறந்த மீனை உண்பது எப்படி பாவமாகும்? கொள்வதுதானே பாவம். மீன் இறந்த பின், நான் உண்ணாவிட்டாலும், வேறு யாரும் உண்ணாவிட்டாலும், அந்த மீன் மீண்டும் உயிரோடு வரப் போவது இல்லை...உண்டால் என்ன பாவம்" என்பார்கள். 


இது ஒரு ஓயாத சண்டை. 


பார்த்தார் வள்ளுவர்..."உயிர்களை கொல்லவும் கூடாது, கொன்றதை தின்பதும் கூடாது...ஒருவன் இரண்டையும் செய்யக் கூடாது" என்கிறார். 


பாடல் 


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்


பொருள் 


கொல்லான்  = உயிர்களை கொல்ல மாட்டான் 


புலாலை மறுத்தானைக் = மாமிசத்தை உண்ணமாட்டான் 


கைகூப்பி = (அவனை) கை கூப்பி 


எல்லா உயிரும் தொழும் = அனைத்து உயிர்களும் தொழும் 


மனிதன் நினைத்தால் எந்த உயிரையும் கொன்று தின்ன முடியும். அப்படி செய்யாமல் இருப்பவனைப் பார்த்து எல்லா உயிர்களும் தங்கள் மேல் கருணை கொண்டு கொல்லாமல் விட்டதை நன்றியோடு நினைத்து அவனை நோக்கி கை கூப்பித் தொழும் என்றார். 


இல்லை என்றால் என்ன ஆகும், "கொலைகாரன் வருகிறான் என்று உயிருக்கு பயந்து அவை ஓடும்" என்பது ஆயிற்று. 

Wednesday, May 8, 2024

தேம்பாவணி - ஊர் வர்ணனை

 தேம்பாவணி - ஊர் வர்ணனை 



தேம்பாவணி என்ற இந்த நூலை எழுதியவர் வீரமாமுனிவர் என்ற வெளிநாட்டவர். 


இயேசுவின் தந்தை பற்றிய ஒரு கிறித்துவ நூல். 1700-களில் எழுதப்பட்டது. 


தேன் + பா + அணி எனக் கொண்டால் தேன் போன்ற பாடல்களைக் கொண்ட நூல் என்று ஆகும். 


மிக மிக இனிமையான பாடல்களைக் கொண்டது. 


நாட்டு வளம் பற்றி கூற வந்த வீரமாமுனிவர், 


மக்கள் எப்போதும் அலைந்து கொண்டு இருப்பார்கள். படிப்பு, வேலை, தொழில்,  என்று ஏதேனும் ஒன்று பற்றி அலைந்து கொண்டே இருப்பார்கள். தெருவில் பார்த்தால் தெரியும். எவ்வளவு பேருந்துகள், இரயில், கார், பைக், ஆட்டோ என்று எவ்வளவு அலைச்சல். இயேசுவின் தந்தை பிறந்த அந்த ஊரில் நீர் மட்டும்தான் அலை அலையாக அடிக்கும் அல்லது வேறு ஒன்றும் அலைவது இல்லையாம். 


பொருள் சம்பாதிக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இருப்பார்கள். சண்டை, சச்சரவு, போர், என்று பொருள் வேண்டி ஆயிரம் சிக்கல்கள். அவர் காட்டும் நாட்டில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று பணக்காரர்கள் சண்டை போடுவார்களாம். நான் உதவி செய்வேன், நீ உதவி செய்வாய் என்று சண்டை போடுவார்களாம். அதைத் தவிர வேறு எந்த வித சண்டையும் கிடையாது. 


மழை பொழியும் மேகம் அல்லது வேறு எங்கும் கறை கிடையாது. நீர் மேகம் மட்டும் கறுத்து கறை படிந்து இருக்கும். 


அந்த நாட்டில் சிறைச்சாலைகளே கிடையாது. காவல் என்பது அற வழியில் மக்களே செலுத்துவதற்கே அன்றி குற்றம் புரிந்தவர்களை அடைக்கும் சிறை கிடையாது. 


பாடல் 



நீர் அல்லதும் அலை இல்லது; நிறை வான் பொருள் இடுவார்

போர் அல்லது பகை இல்லது; புரிவான் மழை பொழியும்

கார் அல்லது கறை இல்லது; கடி காவலும் அறனால்

சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர் இடையே 

 

பொருள் 




நீர் அல்லதும் = நீரைத் தவிர 


அலை இல்லது = வேறு எதுவும் அலைவது இல்லை 


நிறை = நிறைந்த 


வான் பொருள் = வான் வரை குவிந்து கிடக்கும் பொருள் கொண்டோர் 


இடுவார் = தானம் செய்வார்  


போர்   அல்லது = அதற்கு போட்டி போட்டு செய்யும் போர் அல்லது 


பகை இல்லது = வேறு எந்த பகையும் இல்லாத நாடு 


புரிவான் மழை பொழியும் = வானில் இருந்து பொழியும் 


கார் = கரிய மேகம் 


அல்லது = தவிர 


கறை இல்லது = வேறு எங்கும் கறை கிடையாது 


கடி காவலும் = சிறந்த காவலும் 


அறனால் = அற வழியில் 



சீர் = நெறி படுத்தல் 


அல்லது = தவிர 


சிறை இல்லது = சிறை என்பது கிடையாது 


திரு மா நகர் இடையே = அந்தத் திரு நகரில்