Thursday, April 28, 2016

பிரபந்தம் - வினையாட்டியேன் காதன்மையே.

பிரபந்தம் - வினையாட்டியேன் காதன்மையே.


பாடல் 

வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

நம்மாழ்வாரின் அருமையான பாசுரம்.

அது ஒரு அமைதியான கடற்கரை. எங்கு பார்த்தாலும் வெண் மணல். காதோரம் கவிதை பாடும் கடல் காற்று. சற்று தூரத்தில் , ஒரு அந்த கடலில் வந்து சேருகிறது. அங்கே நிறைய நாணல்களும், கோரை புற்களும் வளர்ந்து இருக்கின்றன. அவற்றில் சில குருகுகள் வாழ்கின்றன. அவை தினமும் இரை தேடி அங்கும் இங்கும் அலையும்.

அங்கே வருகிறாள் தலைவி. அவளுக்கோ அவன் நினைப்பு. அவனை பார்க்க வேண்டும், அவனோடு பேச வேண்டும் , அவனோடு இருக்க வேண்டும் என்று ஆசை. அவன் இருக்கும் இடமோ வேறு இடம். எப்படி போவது. வீட்டில் விட மாட்டார்கள். நிறைய வேலை வேறு இருக்கிறது.

தவிக்கிறாள்.

அங்கே வந்த குருகை தூது விட நினைக்கிறாள்.

ஏய் குருகே, என்னால் தான் அவன் இருக்கும் இடத்துக்கு வர முடியவில்லை. அவனால் இங்கே வர முடியும் அல்லவா. எனவே, நீ போய் என் காதலை அவனுக்குச் சொல்லிவிட்டு வா என்று குருகை தூது அனுப்புகிறாள்.


காதலனுக்கு குருகை தூது விடுவதாக அமைந்த பாசுரம்.

பொருள்


வைகல் = தினமும்.

இந்த வைகல் என்ற வார்த்தையை வைத்து நாலடியாரில் ஒரு இனிமையான பாடல் உண்டு.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


பூங் கழிவாய் = ஆறும் கடலும் சேரும் இடத்திற்கு கழிவாய் என்று பெயர். பூக்கள் நிறைந்த அந்த இடம். ஆறு வரும் வழியில் உள்ள மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்களை சுமது வருவதால் அது பூக்கள் நிறைந்த கழிவாய் .

வந்து மேயும் = இங்கேயே இருப்பது இல்ல. இங்கே வந்து மேயும்

குருகினங்காள் = குருகு இனத்தை சேர்ந்த பறவையே

செய்கொள் செந் நெல் உயர் =  செய்த, உற்பத்தி செய்த , கொள் கலங்கள் நிறைந்த நெல் உள்ள

திருவண் வண்டூர் = திருவண்  வண்டூர் என்ற திருத் தலத்தில்

உறையும் = வசிக்கும்

கைகொள் = கையில் கொண்ட

சக்கரத் = சக்கரம்

என் = என்னுடைய

கனி வாய் = கனிந்த வாய். ஆகு பெயராக புன் முறுவலைக் குறிக்கும்

பெருமானைக் கண்டு = பெருமானைக் கண்டு
,
கைகள் கூப்பிச் = கைகளை கூப்பி

சொல்லீர் = சொல்வீர்களாக

வினையாட்டியேன் = வினையால் ஆட்படுத்தப் பட்ட என்

காதன்மையே = காதல் தன்மையை

ஏதோ காதலனுக்கு காதலி அனுப்பிய தூது மாதிரி தான் இருக்கிறது.

நம்மாழ்வார் போன்ற பெரியவர்கள் ஏதோ சினிமாவுக்கு பாட்டு எழுதுவது மாதிரி எழுதிப் போபவர்கள் அல்ல.

என்ன சொல்ல வருகிறார் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

காலம் காலமாய் மனிதன் இறைவனை தேடிக் கொண்டிருக்கிறான். இறைவன் இருக்கிறானா இல்லையா என்று கூட இன்னும் அறிந்த பாடில்லை. சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

நிராகரிக்கவும் முடியவில்லை.

நமக்குத்தான் அவனைத் தெரியவில்லை. அவனுக்கு நம்மைத் தெரியும்தானே. அவன் விரும்பினால் தன்னை நமக்கு காட்டலாம்தானே ?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.

அவன் நமக்கு அருள் தரலாம் அல்லவா ?

சில மகான்கள், பெரியவர்கள் தோன்றி இறைவனைப் பற்றி சொல்கிறார்கள். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அவர்களிடம் கேட்டால் , அவர்கள் நினைத்தால் இறைவனை காண வேண்டும் என்ற நம் ஆர்வத்தை இறைவனிடம் போய் சொல்ல முடியும் அல்லவா ?

அதைத்தான் ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் கூறுகிறார்.


இறைவனைப் பற்றி ஏதோ கொஞ்சம் அங்கும் இங்கும் படித்து தெரிந்து வைத்து இருக்கிறோம். (சக்கரம், செங்கனி வாய்). அது முழுமையான வடிவம் இல்ல. யார் நேர்ல பார்த்தது.

குருகு என்பது ஆச்சாரியனுக்கு உவமை.

குருவைப் பற்றினால் இறைவனை அடையலாம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார் அருணகிரி.

அந்த குருவருள் உங்களுக்கும் சித்திக்கட்டும் .

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/04/blog-post.html )

Thursday, April 21, 2016

இராமாயணம் - வாலி வதம்

இராமாயணம் - வாலி வதம்


வாலி வதம்   முடிந்து விட்டது. வாலி இறந்து கிடக்கிறான். அங்கே , வாலியின் மகன் அங்கதன் வருகிறான். அங்கதனை இராமனிடம் அடைக்கலமாக கொடுத்த பின், வாலி விண்ணுலகுக்கு அப்பால் ஏகினான்.

வாலியை இராமன் மறைந்து இருந்து கொன்றான். அது சரியா தவறா என்ற வாதம் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது. 

அந்த வாதத்திற்கு ஒரு வதம் இன்று !

மற்றவர்கள் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்...இராமன் என்ன நினைத்தான் ? மறைந்து இருந்து கொன்றது தவறு என்று இராமன் நினைத்தானா ? அது பற்றி அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்ததா ? அல்லது தான் செய்தது சரி என்று அவன் நினைத்தானா ? 

இராமனுக்கு அவன் செய்ததில் ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. தான் , தன் கடமையை செய்ததாகவே அவன் நினைக்கிறான். 

எப்படி ?

வாலி அடிபட்டுக் கிடக்கிறான், உயிர் எந்த நிமிடமும் பிரியலாம், அந்த நிலையில் வாலியின் மகனை தனது மெய் காப்பாளனாக இராமன் நியமிக்கிறான். தான் வாலியை கொன்றது சரி இல்லை என்று இராமன் நினைத்திருந்தால், அங்கதனை தன் மெய் காப்பாளனாக நியமித்து இருப்பானா ? ஒரு வேளை , அங்கதன் தன்னை சரியான சமயத்தில் பழி வாங்கிவிட்டால் என்ற என்ன பய உணர்ச்சி இராமனிடம் இல்லை. தான் செய்தது சரி இல்லை என்று இராமன் நினைத்து இருந்தால், அங்கதனை தன் அருகிலேயே வர விட்டிருக்க மாட்டான் அல்லவா ? 



தன்னுடைய பொன்னாலான  வாளை அங்கதனிடம் தந்து, இந்த துக்கத்தை நீ பொறுத்துக் கொள் என்று சொல்கிறான். 


பாடல் 

தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்திஎன்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.

பொருள் 

தன் அடி தாழ்தலோடும் = தன் அடியில் வீழ்ந்து வணங்கிய அங்கதனை 

தாமரைத் தடங்கணானும், = தாமரை போன்ற பெரிய கண்களை கொண்ட இராமனும் 

பொன் உடை வாளை நீட்டி, = தன்னுடைய பொன்னாலான வாளை தந்து 

‘நீ இது பொறுத்தி ‘என்றான் = நீ இந்த துக்கத்தை பொறுத்துக் கொள் என்றான் 

என்னலும் = அப்படி சொன்ன பின் 

உலகம் ஏழும் ஏத்தின; = இராமனை உலகம் எழும் போற்றியது 

இறந்து, வாலி, = வாலி இறந்து 

அந் நிலை துறந்து, = அந்த நிலையை துறந்து 

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். = வானுக்கு அப்புறம் உள்ள உலகத்துக்குச் சென்றான் 


அரசர்கள் தங்கள் வாளை அவர்களுடைய மெய் காப்பாளர்களுக்குத்தான் தருவார்கள். அது மிக மிக நம்பிக்கைக்கு உரிய பதவி. இராமன், தன் உடைவாளை இலக்குவனிடம் கூட தரவில்லை. அதற்கு இலக்குவனிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்ல. இலக்குவனுக்கு இணையாக, இன்னும் சொல்லப் போனால் அதை விட ஒரு படி மேலான இடத்தை, நெருக்கமான இடத்தை அங்கதனுக்குத் தருகிறான் இராமன்.

அதுவும் எப்போது ? 

யுத்தம் முடிந்து, பொது குழு, செயற் குழு எல்லாம் கூட்டி, ஆலோசனை செய்து முடிவு எடுக்கவில்லை. போர் முடிந்த அந்தக் கணமே முடிவு எடுக்கிறான். யாரையும் கேட்கவில்லை. 

தான் செய்தது தவறு என்று இராமன் நினைத்து இருந்தால், அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பானா ?

சரி. இராமன் மனதில் களங்கம் இல்லை. அங்கதனுக்காவது இராமன் செய்தது தவறு என்று  எப்போதாவது தெரிந்ததா ? இராமனுக்கு அருகில் எந்நேரமும் இருக்கிறான். உடை வாளோடு. இராமன் , தன்னுடைய தந்தையை அநியாயமாகக் கொன்று விட்டான் என்று அங்கதன் நினைத்திருந்தால் , இராமன் தனியாக இருக்கும் நேரத்தில் ஏதேனும் செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் , அந்த மெய் காப்பாளன் பதவியையாவது வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். 

இல்லை. அங்கதன் அதை ஏற்றுக் கொள்கிறான். 

சரி, இது ஏதோ இராமன் அங்கதனை சமாதனம் செய்ய எடுத்த ஒரு இராஜதந்திர முடிவு என்று  நினைக்கலாமா என்றால், முடியாது. 

ஏன் முடியாது ?

வெறும் அலங்கார பதவி இல்லை இராமன் கொடுத்தது. 

இராவணனிடம் தூது போக அங்கதனை அனுப்புகிறான். 

இலக்குவனை அனுப்பி இருக்கலாம். அனுமனை அனுப்பி இருக்கலாம். அனுமன் இலங்கை பற்றி நன்கு அறிந்தவன். அங்கதனை விட அறிவில், ஆற்றலில் , அனுபவத்தில் உயர்ந்தவன். அனுமனை அனுப்பவில்லை. அங்கதனை அனுப்புகிறான். 


அங்கதனை அவன் எவ்வளவு தூரம் நம்பி இருந்தால் அந்த வேலையை அவனிடம் ஒப்படைத்து இருப்பான்  !

சரி அதோடு முடிந்ததா என்றால்  இல்லை. 

இராவண வதம் முடிந்தது. எல்லோரும் அயோத்தி வந்து விட்டார்கள். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள். 

அங்கும் அங்கதன் உடை வாளை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறான். 

பாடல் 

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி

பொருள் 

அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன் தாங்க 

அங்கதன் உடை வாள் ஏந்த = அங்கதன் உடை வாளை ஏந்த 

பரதன் வெண் குடை கவிக்க = பரதன் வெண்கொற்றக் குடை பிடிக்க 

 இருவரும் கவரி பற்ற = இலக்குவனும் சத்ருக்கணும் கவரி வீச 

விரை செறி குழலி ஓங்க = சீதை சிறப்புடன் நிற்க 

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = சடையப்ப வள்ளலின் 

மரபுளோர் கொடுக்க = மரபில் வந்தவர்கள் கொடுக்க 

வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி = வசிட்டனே இரமானுக்கு முடி சூட்டினான் 

இராவண யுத்தம் முடிந்தவுடன் அங்கதனை இராமன் விட்டு விடவில்லை. தன்னோடு அயோத்திக்கு அழைத்து வந்து விடுகிறான். குகன் வருகிறேன் என்று சொன்ன போது   வேண்டாம் என்று மறுத்தான். வீடணனை இலங்கையில்  தங்க வைத்து விட்டான். ஆனால், அங்கதனை மட்டும் தன்னோடு கொண்டு நடக்கிறான் இராமன். 

வாலியை கொன்றதில் ஒரு  குற்ற உணர்வு இருந்திருந்தால், அங்கதனை தவிர்த்து இருப்பான்  இராமன். இராமன் செய்தது தவறு என்று நினைத்து இருந்தால் அந்தப் பதவியை ஏற்று இருக்க மாட்டான் அங்கதன். 

இது இரண்டுமே நடக்கவில்லை. 

தன்னிடம் அடைக்கலம் என்று வாலி தந்த பின், அங்கதனை தன் பிள்ளை போலவே நடத்தி இருக்கிறான் இராமன். 

தன் உயிருக்கு பாதுகாவலனாக அவனை நம்பி இருக்கிறான் இராமன்.

இராமன் தவறு செய்தான் என்று வாலி நினைக்கவில்லை.

அவன் மகன் அங்கதன் நினைக்கவில்லை. 

இராமனும் நினைக்கவில்லை. 

நாம் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் ?


Sunday, April 17, 2016

இராமாயணம் - வினையின் வழி

இராமாயணம் - வினையின் வழி 


இராமன் பிறக்கப் போகும் அயோத்தி நகரைப் பற்றி கம்பன் வர்ணித்துக் கொண்டே செல்கிறான். முதலில் மழை வளம் பற்றிப் பாடுகிறான். அந்த மேகம் எப்படி சிவனைப் போல சென்று திருமாலைப் போல கறுத்து வந்தது என்று கூறியதைப் பார்த்தோம்.

அந்த மழை மலையின் மேல் பொழிந்து ஆறாக பெருகி வருகிறது.

எப்படி வருகிறது என்று சொல்கிறான் கம்பன் இந்தப் பாடலில்.

அதற்கு முன்.....


நம் வாழ்க்கை ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது ? இப்போது எப்படி இருக்கிறது. இப்படி இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்த்தோமா ?

நினைக்காததை எல்லாம் விதி நடத்திவிட்டுப் போய் விடுகிறது.

நல்லதும் நடந்திருக்கும், அல்லாததும் நடந்திருக்கும்.

இன்னும் பத்து பதினைந்து வருடத்தில் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியுமா ? விதி எதை எப்படி மாத்துமோ யாருக்குத் தெரியும் ?

விதியை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், சரயு நதி போகும் வழியில் உள்ள இடத்தை எல்லாம் தலை கீழாக மாற்றி போட்டுவிட்டுப் போய் விடுகிறது.

விதி, வாழ்கையை மாற்றுவதைப் போல.

பாடல்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
    மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
    பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள்
    எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
    வினை எனச் சென்றது அன்றே.

பொருள்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி = முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கி
மருதத்தை முல்லை ஆக்கிப் = மருத நிலத்தை முல்லை நிலமாக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் = மென்மையான நெய்தல் நிலத்தை
பொரு அரு மருதம் ஆக்கி = உயர்ந்த மருத நிலமாகச் செய்து
எல்லை இல் பொருள்கள் = எல்லை இல்லாத பொருள்கள்
எல்லாம் = எல்லாம்
இடை தடுமாறும் நீரால் =  இடத்தை விட்டு தடுமாறி நீரால்
செல் உறு கதியில் செல்லும் = செல்கின்றன கதியில் செல்லும்
வினை எனச் சென்றது அன்றே = வினையைப் போலச் சென்றது


முல்லையை குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலமாக்குகிறது. நெய்தல் நிலத்தை மருதமாக்குகிறது. 


வேலை கிடைக்காது என்று நினைத்திருப்போம். கிடைத்து விடும். கிடைத்த வேலை  நிலைக்கும் என்று நினைத்திருப்போம், ஏதோ காரணத்தால் கை விட்டுப் போய் விடும். திருமணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு, துணையின் உடல் நலம், உடன் பிறப்புகளின் நிறம் மாற்றம் என்று விதி எப்படியெல்லாம்  வாழ்கையை மாற்றிப் போடுகிறது. 

பாடலின் உள் அர்த்தத்தை பார்பதற்கு முன்னால் , அது என்ன முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம்....என்று பார்ப்போம்.

தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை பிரித்தார்கள். 

எப்படி பிரித்தார்கள் தெரியுமா ?

ஆற்றின் கரையில் தான் நாகரிகம் பிறக்கிறது. 

ஆறு எங்க தொடங்குகிறதோ அங்கிருந்து தொடங்கி அதன் போக்கிலேயே போய்  நிலத்தை பிரித்தார்கள். 

ஆறுகள் பொதுவாக மலையில் தான் பிறக்கும் - எனவே முதல் நிலம் குறிஞ்சி. மலையும் மலை சார்ந்த இடமும்.

பின் ஆறு மலையில் இருந்து இறங்கி கரடு முரடான  காட்டின் வழி வரும். எனவே அடுத்த இடம்  முல்லை - காடும் காடு சார்ந்த இடமும். 

பின் அது வேகம் குறைந்து நிதானமாக நிலத்தில் ஓடத் தொடங்கும்.  அது மருதம். வயலும் வயல் சார்ந்த இடமும். 

பின் ஓடிப் போய் கடலில் சேரும். அது நெய்தல். கடலும், கடல் சார்ந்த இடமும். 

இப்படி ஆற்றின் ஓட்டத்தின் கூடவே தாங்கள் வாழும் நிலத்தைப் பிரித்தார்கள். 

சரி, பாலை ஒன்று ஒரு நிலம் உண்டே, அது எங்கே ?

பாலை என்பது ஒரு தனி  இடம் இல்லை. 

குறிஞ்சியும் முல்லையும்  தம்முள் திரிந்து  பாலை என்றோர் படிவம் கொள்ளும்  என்றார்கள். 

அது ஏன் குறிஞ்சியும் முல்லையும் மட்டும் பாழ் பட்டு பாலை என்றோர் படிவம் கொள்ள வேண்டும் ?  ஏன் மருதமும் நெய்தலும் பாழ் பட்டு பாலையாகக் கூடாதா என்றால் .....

மருத நிலத்தில் விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய நீரை ஏரி , குளம் என்று தேக்கி வைப்பார்கள்.  எனவே அது பாலையாக மாறாது. 

அதே போல நெய்தல் நிலத்தில் கடல் செடிகள் - நாணல், கடல் பாசி போன்ற தாவரங்கள் வளரும்  எனவே அவையும் பாலையாக மாறாது. 

எவ்வளவு நுணுக்கமாக  ஆராய்ந்து நிலத்தை பிரித்திருக்கிறார்கள் !

சரி, இந்த பாடலில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது ?

மழை பொழிந்தது. ஆற்றில் நீர் வந்தது என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே.

இதை அதாக  மாற்றியது,இதை இதாக மாற்றியது என்று ஏன் இந்தப் பீடிகை ?


பின்னால் இராமனின் வாழ்க்கையில் இப்படி எல்லாம் சம்பவங்கள் நிகழப் போகின்றன.


இரவில், சும்மா இருந்தவனைக் கூப்பிட்டு , சகரவர்த்தி பட்டத்தை ஏற்றுக் கொள் என்று சொன்ன  தசரதன், மறு நாள் காலையில் மாண்டு போய் விட்டான். சக்ரவர்த்தியாக வேண்டிய இராமன் கானகம் போனான். எங்கோஇருந்த  பரதன், சக்ரவர்த்தியாக்கப்பட்டான்.  அவனும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இராமனின் பாதுகைகள் முடி சூட்டிக் கொண்டன. 

யார் நினைத்திருப்பார்கள் இப்படி எல்லாம் நடக்கும் என்று. 

விதி  விளையாடிப் விட்டுப் போய் விட்டது. 

வரும் வாழ்க்கைக்கு கட்டியம் கூறுகிறான் கம்பன். 

விதியை யாரே மாற்ற வல்லார் ?


( மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/04/blog-post_17.html )