Thursday, April 21, 2016

இராமாயணம் - வாலி வதம்

இராமாயணம் - வாலி வதம்


வாலி வதம்   முடிந்து விட்டது. வாலி இறந்து கிடக்கிறான். அங்கே , வாலியின் மகன் அங்கதன் வருகிறான். அங்கதனை இராமனிடம் அடைக்கலமாக கொடுத்த பின், வாலி விண்ணுலகுக்கு அப்பால் ஏகினான்.

வாலியை இராமன் மறைந்து இருந்து கொன்றான். அது சரியா தவறா என்ற வாதம் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது. 

அந்த வாதத்திற்கு ஒரு வதம் இன்று !

மற்றவர்கள் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்...இராமன் என்ன நினைத்தான் ? மறைந்து இருந்து கொன்றது தவறு என்று இராமன் நினைத்தானா ? அது பற்றி அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்ததா ? அல்லது தான் செய்தது சரி என்று அவன் நினைத்தானா ? 

இராமனுக்கு அவன் செய்ததில் ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. தான் , தன் கடமையை செய்ததாகவே அவன் நினைக்கிறான். 

எப்படி ?

வாலி அடிபட்டுக் கிடக்கிறான், உயிர் எந்த நிமிடமும் பிரியலாம், அந்த நிலையில் வாலியின் மகனை தனது மெய் காப்பாளனாக இராமன் நியமிக்கிறான். தான் வாலியை கொன்றது சரி இல்லை என்று இராமன் நினைத்திருந்தால், அங்கதனை தன் மெய் காப்பாளனாக நியமித்து இருப்பானா ? ஒரு வேளை , அங்கதன் தன்னை சரியான சமயத்தில் பழி வாங்கிவிட்டால் என்ற என்ன பய உணர்ச்சி இராமனிடம் இல்லை. தான் செய்தது சரி இல்லை என்று இராமன் நினைத்து இருந்தால், அங்கதனை தன் அருகிலேயே வர விட்டிருக்க மாட்டான் அல்லவா ? 



தன்னுடைய பொன்னாலான  வாளை அங்கதனிடம் தந்து, இந்த துக்கத்தை நீ பொறுத்துக் கொள் என்று சொல்கிறான். 


பாடல் 

தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்திஎன்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.

பொருள் 

தன் அடி தாழ்தலோடும் = தன் அடியில் வீழ்ந்து வணங்கிய அங்கதனை 

தாமரைத் தடங்கணானும், = தாமரை போன்ற பெரிய கண்களை கொண்ட இராமனும் 

பொன் உடை வாளை நீட்டி, = தன்னுடைய பொன்னாலான வாளை தந்து 

‘நீ இது பொறுத்தி ‘என்றான் = நீ இந்த துக்கத்தை பொறுத்துக் கொள் என்றான் 

என்னலும் = அப்படி சொன்ன பின் 

உலகம் ஏழும் ஏத்தின; = இராமனை உலகம் எழும் போற்றியது 

இறந்து, வாலி, = வாலி இறந்து 

அந் நிலை துறந்து, = அந்த நிலையை துறந்து 

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். = வானுக்கு அப்புறம் உள்ள உலகத்துக்குச் சென்றான் 


அரசர்கள் தங்கள் வாளை அவர்களுடைய மெய் காப்பாளர்களுக்குத்தான் தருவார்கள். அது மிக மிக நம்பிக்கைக்கு உரிய பதவி. இராமன், தன் உடைவாளை இலக்குவனிடம் கூட தரவில்லை. அதற்கு இலக்குவனிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்ல. இலக்குவனுக்கு இணையாக, இன்னும் சொல்லப் போனால் அதை விட ஒரு படி மேலான இடத்தை, நெருக்கமான இடத்தை அங்கதனுக்குத் தருகிறான் இராமன்.

அதுவும் எப்போது ? 

யுத்தம் முடிந்து, பொது குழு, செயற் குழு எல்லாம் கூட்டி, ஆலோசனை செய்து முடிவு எடுக்கவில்லை. போர் முடிந்த அந்தக் கணமே முடிவு எடுக்கிறான். யாரையும் கேட்கவில்லை. 

தான் செய்தது தவறு என்று இராமன் நினைத்து இருந்தால், அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பானா ?

சரி. இராமன் மனதில் களங்கம் இல்லை. அங்கதனுக்காவது இராமன் செய்தது தவறு என்று  எப்போதாவது தெரிந்ததா ? இராமனுக்கு அருகில் எந்நேரமும் இருக்கிறான். உடை வாளோடு. இராமன் , தன்னுடைய தந்தையை அநியாயமாகக் கொன்று விட்டான் என்று அங்கதன் நினைத்திருந்தால் , இராமன் தனியாக இருக்கும் நேரத்தில் ஏதேனும் செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் , அந்த மெய் காப்பாளன் பதவியையாவது வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். 

இல்லை. அங்கதன் அதை ஏற்றுக் கொள்கிறான். 

சரி, இது ஏதோ இராமன் அங்கதனை சமாதனம் செய்ய எடுத்த ஒரு இராஜதந்திர முடிவு என்று  நினைக்கலாமா என்றால், முடியாது. 

ஏன் முடியாது ?

வெறும் அலங்கார பதவி இல்லை இராமன் கொடுத்தது. 

இராவணனிடம் தூது போக அங்கதனை அனுப்புகிறான். 

இலக்குவனை அனுப்பி இருக்கலாம். அனுமனை அனுப்பி இருக்கலாம். அனுமன் இலங்கை பற்றி நன்கு அறிந்தவன். அங்கதனை விட அறிவில், ஆற்றலில் , அனுபவத்தில் உயர்ந்தவன். அனுமனை அனுப்பவில்லை. அங்கதனை அனுப்புகிறான். 


அங்கதனை அவன் எவ்வளவு தூரம் நம்பி இருந்தால் அந்த வேலையை அவனிடம் ஒப்படைத்து இருப்பான்  !

சரி அதோடு முடிந்ததா என்றால்  இல்லை. 

இராவண வதம் முடிந்தது. எல்லோரும் அயோத்தி வந்து விட்டார்கள். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள். 

அங்கும் அங்கதன் உடை வாளை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறான். 

பாடல் 

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி

பொருள் 

அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன் தாங்க 

அங்கதன் உடை வாள் ஏந்த = அங்கதன் உடை வாளை ஏந்த 

பரதன் வெண் குடை கவிக்க = பரதன் வெண்கொற்றக் குடை பிடிக்க 

 இருவரும் கவரி பற்ற = இலக்குவனும் சத்ருக்கணும் கவரி வீச 

விரை செறி குழலி ஓங்க = சீதை சிறப்புடன் நிற்க 

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = சடையப்ப வள்ளலின் 

மரபுளோர் கொடுக்க = மரபில் வந்தவர்கள் கொடுக்க 

வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி = வசிட்டனே இரமானுக்கு முடி சூட்டினான் 

இராவண யுத்தம் முடிந்தவுடன் அங்கதனை இராமன் விட்டு விடவில்லை. தன்னோடு அயோத்திக்கு அழைத்து வந்து விடுகிறான். குகன் வருகிறேன் என்று சொன்ன போது   வேண்டாம் என்று மறுத்தான். வீடணனை இலங்கையில்  தங்க வைத்து விட்டான். ஆனால், அங்கதனை மட்டும் தன்னோடு கொண்டு நடக்கிறான் இராமன். 

வாலியை கொன்றதில் ஒரு  குற்ற உணர்வு இருந்திருந்தால், அங்கதனை தவிர்த்து இருப்பான்  இராமன். இராமன் செய்தது தவறு என்று நினைத்து இருந்தால் அந்தப் பதவியை ஏற்று இருக்க மாட்டான் அங்கதன். 

இது இரண்டுமே நடக்கவில்லை. 

தன்னிடம் அடைக்கலம் என்று வாலி தந்த பின், அங்கதனை தன் பிள்ளை போலவே நடத்தி இருக்கிறான் இராமன். 

தன் உயிருக்கு பாதுகாவலனாக அவனை நம்பி இருக்கிறான் இராமன்.

இராமன் தவறு செய்தான் என்று வாலி நினைக்கவில்லை.

அவன் மகன் அங்கதன் நினைக்கவில்லை. 

இராமனும் நினைக்கவில்லை. 

நாம் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் ?


2 comments:

  1. அற்புதமான கட்டுரை. படிக்க இனிமையாக இருந்தது.

    ReplyDelete
  2. அரும் பெரும் பாத்திரம் அங்கதனின் வாழ்க்கை முறை

    ReplyDelete