Showing posts with label கம்ப இராமாயணம். Show all posts
Showing posts with label கம்ப இராமாயணம். Show all posts

Wednesday, June 11, 2025

கம்ப இராமாயணம் - மாரீசன் - இராவணன் அறிமுகம்

 கம்ப இராமாயணம் - மாரீசன் - இராவணன் அறிமுகம் 



இந்தக் காலத்துத் திரைப்படங்களில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது பயங்கர build up இருக்கும். அவருடைய காலைக் காட்டி, அவர் வரும் காரைக் காட்டி, அவர் இருக்கும் பெரிய வீட்டைக் காட்டி, ஒரு பிரமாண்டத்தை மனதில் ஏற்படுத்துவார்கள். 


கதாநயாகன் பெரிய ஆள் என்று காட்டும் உத்திகள். 


இதெல்லாம் கம்பனின் முன் தூசு. 


கதாநாயகனை விடுங்கள். வில்லன் இராவணனை, கம்பன் அறிமுகப் படுத்தும் விதத்தைப் பார்த்தால் அசந்து போவோம். 


அப்பேற்பட்ட பெரிய வில்லனை பின்னாளில் கதாநயாகன் வீழ்த்தினான் என்றால் கதாநாயகனாகிய இராமனின் பெருமை எவ்வளவு என்று சொல்லாமலேயே விளங்கும். 


இராமன் ஏதோ ஏப்பை சாப்பையான ஒரு மெலிந்த நலிந்த ஒருவனை வெற்றி கொள்ளவில்லை என்று காட்டவும் அது உதவும். 


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை இலங்கைக்குள் நுழைகிறாள். இராவணனைப் பார்த்து அவனிடம் முறையிட வேண்டும். சூர்பனகையின் எண்ணம் எல்லாம் இராமனை அடைவது. அதற்கு சீதை தடையாக இருக்கிறாள் என்று சூர்பனகை எண்ணினாள். சீதையை இராமனிடம் இருந்து பிரித்து விட்டால், இராமன் தன்னிடம் காதல் கொள்வான் என்பது சூர்பனகையின் எண்ணம். 


எனவே, இராவணனிடம், சீதையின் மேல் காதல் கொள்ளச் செய்து அவளை இராவணன் தூக்கி வந்து விட்டால், பின் இராமன் தனியனாவான், தன் மேல் காதல் கொள்வான் என்ற எண்ணத்தோடு வருகிறாள். 


சூர்பனகை இலங்கைக்குள் வருகிறாள்....கம்பனின் கவிதைகள் மடை திறந்த வெள்ளம் போல் வர இருக்கிறது. 


பாடல் 


இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை

     மறந்தனள், போர் இராமன் துங்க

வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை

     மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,

திரைப் பரவைப் பேர் அகழித் திண்

     நகரில் கடிது ஓடி, 'சீதை தன்மை

உரைப்பென்' எனச் சூர்ப்பணகை வர, இருந்தான்

     இருந்த பரிசு உரைத்தும் மன்னோ.


பொருள் 



இரைத்த = ஆராவரம் செய்யும்


நெடும் படை = பெரிய படை 


அரக்கர் = அந்தப் படையில் உள்ள அரக்கர்கள் 


 இறந்ததனை = இராமனோடு சண்டையிட்டு இறந்ததை (கரன் முதலிய வீரர்கள். அது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம்) 

 

மறந்தனள் = சூர்பனகை மறந்து விட்டாள் 


போர் இராமன் = போரில் வல்ல இராமனின் 


துங்க வரைப் = பெரிய மலை போன்ற 


புயத்தினிடைக் = தோள்களுக்கு இடையே 


கிடந்த பேர் ஆசை = அணைத்து கிடக்கும் பேராசையால் 


மனம் கவற்ற = மனம் வருந்தி (அது முடியாமல் போனதால்) 


ஆற்றாள் ஆகி = அந்த வருத்தத்தை பொறுக்க முடியாமல் 


திரைப் = அலைகளை எழுப்பும் 


 பரவைப் = கடல் 


பேர் அகழித் = பெரிய அரணாகக் கொண்ட 


திண் நகரில்  = சிறந்த நகரில் (இலங்கையில்) 


கடிது ஓடி = வேகமாக ஓடி 


'சீதை தன்மை உரைப்பென்' = சீதையின் அழகை சொல்லுவேன் 


எனச் = என்று 


சூர்ப்பணகை வர = சூர்பனகை எதிரில் வர 


இருந்தான் = இராவணன் இருந்தான் 


இருந்த பரிசு = அவன் இருந்த நிலையை 


உரைத்தும் = சொல்லுவோம் 


மன்னோ = அசைச் சொல் 


காமம் தலைக்கு ஏறினால் என்ன ஆகும் என்று இந்தப் பகுதியில் கம்பன் வெகு விரிவாக சொல்ல இருக்கின்றான். 


சூர்பனகைக்கு, இராமன் மேல் காதல். அவனை அடைய சீதை தடை என்று அவள் நினைத்தாள். எனவே சீதையை இராவணன் கொண்டு வந்து விட்டால் தான் இராமனை அடையலாம் என்பது அவள் கணக்கு. 


இதில் சில நுண்ணிய விடயங்களை நாம் சிந்திக்கலாம். 


மாற்றான் மனைவியை நினைப்பது, கவர்வது அறம் அற்ற செயல் என்று நாம் படித்து இருக்கிறோம். முதன் முதலாக, மாற்றாள் கணவனை நினைக்கும் ஒரு பெண் பாத்திரத்தை சந்திக்கிறோம். 


இராவணன் செய்த தவறுக்கு மூல காரணம் சீதையின் கணவனை சூர்பனகை விரும்பியது. 


இரண்டாவது, வைணவ சம்ப்ரதாயத்தில் பெருமாளையும், பெருமாட்டியையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்ற மரபு இருக்கிறது. சூர்பனகை, பெருமாட்டியான சீதையை, பெருமானான இராமனிடம் இருந்து பிரிக்க முயல்கிறாள். அது பாவம். அதன் விளைவு என்ன என்று அறிவோம். 


மேலும், கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது. அதில் மூன்றாவது மனிதருக்கு வேலை இல்லை. சூர்பனகை அந்த உறவுக்குள் மூக்கை நுழைத்தாள். இழந்தாள். 


இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. காப்பியத்தின் ஓட்டத்தோடு அவற்றை சிந்திப்போம். 


(மிக நீண்ட பகுதி. எதையும் விட மனமில்லை. வாசிக்க உங்களுக்குப் பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை. சோர்வடைந்தால் சொல்லுங்கள்).  



Thursday, September 5, 2024

கம்ப இராமாயணம் - பெண்கள் காட்டிய வழி

 கம்ப இராமாயணம் - பெண்கள் காட்டிய வழி


இராமாயணம் என்றால் இராமன் காட்டிய வழி. அல்லது இராமனின் வழி என்று சொல்லலாம். 


உண்மையிலேயே இராமாயணம் முழுவதும் பெண்களால் நடத்தப்பட்ட ஒரு காப்பியமாகவே தெரிகிறது. 


எப்படி என்று பார்ப்போம். 


முதல் காய் நகர்த்தல் கூனி என்ற பெண்ணால் நிகழ்கிறது. அதுவரை ஆற்றோட்டமாக சென்று கொண்டிருந்த கதை கூனியால் மடை மாற்றம் செய்யப்படுகிறது. நமக்குத் தெரியும் கூனியின் பேச்சு சாதுரியம், அவள் எப்படி கைகேயின் மனதை மாற்றினாள் என்று. 


அடுத்த நகர்வு, கைகேயி என்ற பெண். கூனியால் மனம் மாற்றம் செய்யப்பட்ட கைகேயி ஒரு படி மேலே போய் தசரதனின் மனதை மாற்றுகிறாள். இராமனை காட்டுக்கு அனுப்பி, பரதனை முடி சூட வைக்கிறாள். 


சரி. இராமன் கானகம் போனான். போன இடத்தில் என்ன நடந்தது?


சூர்பனகை என்ற பெண்ணால் பகை மூண்டது. அவள் இராமன் மற்றும் இலக்குவர்கள் மேல் ஆசைப்பட்டது, மூக்கு அறுபட்டது வரை சரி. காப்பியம் அங்கேயே நின்றிருக்கும். ஆனால், சூர்பனகை , அவளுடைய அண்ணனான இராவணனிடம் சென்று அவனுக்கு சீதை மேல் ஆசையை ஏற்றுகிறாள். இராவணன் தடுமாறுகிறான். கதையை மேலே நகர்த்துகிறாள் சூர்பனகை. 


சரி, அப்புறம் என்ன நடந்தது? இராவணன் நேரே வந்து இராமனிடம் சண்டை போட்டானா என்றால் இல்லை. பொன் மான் வந்தது. அங்கே சீதை என்ற பெண் காப்பியத்தை நகர்த்துகிறாள். "நீயே எனக்கு அந்த பொன் மானை பிடித்துத் தர மாட்டாயா" என்று கொஞ்சுகிறாள். இராமன் மான் பின் போகிறான். இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போகிறான். 


இராமன் நேரே வாலியைப் பார்த்து அவன் உதவியை நாடி இருந்தால், வாலியின் பலத்துக்கு பயந்து இராவணன் சீதையை விடுவித்து இருக்கலாம். அதற்கு முன் சபரி என்ற பெண் வருகிறாள். அவள், இராமனை சுக்ரீவன் பால் போ என்று இராமனின் போக்கை மாற்றுகிறாள். 


இராமன், சுக்ரீவனை பார்த்து, நட்பு கொண்டு, சீதையைத் தேடத் தொடங்குகிறான். 


அசோகவனத்தில் சீதை தனிமையில் வாடுகிறாள். அவள் மனம் சோர்ந்த போதெல்லாம் அவளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி அவளை திரிசடை என்ற பெண் தேற்றுகிறாள். அவள் இல்லை என்றால் சீதையின் கதி என்ன என்று அனுமானிப்பது கடினம். 


அனுமன் இலங்கைக்கு வருகிறான். இலங்கையை இலங்கினி என்ற பெண் பாதுகாவல் செய்கிறாள். அனுமன் அவளை சண்டையில் வெல்கிறான். அவள் அவனுக்கு வழி விடுகிறாள். 


சண்டை நடக்கிறது, இராமன் வென்று சீதையை சிறை மீட்கிறான். 


இந்த மொத்த காப்பியத்தில் தோற்றுப் போன பெண் என்று சொல்லுவது என்றால் வாலியின் மனைவி தாரையைச் சொல்லலாம். வாலி சண்டைக்கு செல்வதை தடுக்க நினைத்து தோல்வியுருகிறாள்.


அவளைத் தவிர்த்து, இராமாணயம் முழுக்க முழுக்க பெண்களாலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. 


இராமனின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனை முன்னோக்கி செலுத்தியதில் ஒரு பெண்ணின் பங்கு இருந்து இருக்கிறது. 


கதையின் நாயகன், திருமாலின் அவதாரம், சக்ரவர்த்தித் திருமகன் ...பெண் சொல்லி நான் கேட்பதா என்று சொல்லாமல், ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்களால் நடத்தப்படுவதை அனுமதிக்கிறான் இராமன். 


அவன் நினைத்து இருந்தால் கைகேயி சொன்னதை கேட்க மாட்டேன் என்று சொல்லி இருக்கலாம். சீதை பொன் மான் வேண்டும் என்றபோது, அதெல்லாம் முடியாது என்று மறுத்து இருக்கலாம். 


தாய், தாரம், பக்தை என்ற அனைத்து பெண்களின் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கிறான். அதனால் துன்பம் வரும், சிக்கல் வரும் என்று தெரிந்து இருந்தாலும் அவர்கள் கருத்தை அவன் உதாசீனம் செய்யவில்லை. 




  

Tuesday, June 28, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - திருஇலி வலிக்கு

    

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  திருஇலி வலிக்கு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு நான்முகனிடம் போனார். பிரமனும் தன்னால் முடியாது என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு பாற்கடல் சென்றனர், திருமாலிடம் முறையிட. 


"பத்துத் தலையும், இருபது கரங்களும் உள்ள அந்த அருள் இல்லாத இராவணனின் கொடுமையை எங்களால் தடுக்க முடியவில்லை. கருணைக் கடலான திருமாலே, நீர் அவனோடு சண்டையிட்டு எங்களை காத்தால் உண்டு" என்று திருமாலிடம் சரண் அடைந்தார்கள். 


பாடல் 



‘இருபது கரம். தலை ஈர்-ஐந்து. என்னும் அத்

திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.

கரு முகில் என வளர் கருணைஅம் கடல்

பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_28.html


(pl click the above link to continue reading)




‘இருபது கரம் = இருபது கரங்கள் 


தலை ஈர்-ஐந்து = பத்துத் தலைகள் 


என்னும் = என்று இருக்கும் 


அத் திருஇலி  = அருள் இல்லதா, கருணை இல்லாத 


வலிக்கு = வலிமை மிக்க இராவணனை அடக்க 


ஒரு செயல் இன்று  = ஒரு செயலையும் செய்ய முடியவில்லை 


எங்களால். = தேவர்களாகிய எங்களால் 


கரு முகில் = கரிய மேகம் 


என  = போல 


வளர் கருணைஅம் கடல் = நாளும் வளரும் கருணைக் கடலே 


பொருது = அவனோடு சண்டையிட்டு 


இடர் தணிக்கின் உண்டு = எங்கள் துன்பத்தை தணித்தால் தான் உண்டு 


எனும் புணர்ப்பினால். = என்ற கருதினால். அந்தக் கருத்தைச் சொன்னார்கள் 


இராவணன் உட்பட எல்லா அரக்கர்களுக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. 


மிக மிக கடுமையாக தவம் செய்வார்கள். இறைவனே நேரில் வருவான். கேட்கின்ற வரத்தை எல்லாம் தருவான். நீண்ட ஆயுள், செல்வம், புகழ், பெருமை, வீரம், அனைத்து வித இன்பங்களும் கிடைக்கும். 


வேறு என்ன வேண்டும்? அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டியதுதானே? 


ஆணவம் இருக்க விடுவதில்லை. 


தேவர்களை அடிமைப் படுத்தத் தூண்டும். சரி, அவர்களை வென்று சிறையில் அடைத்து விட்டால் அது அடங்குமா என்றால் இல்லை. அவர்களை துன்புறுத்த வேண்டும். அல்லது தான் தான் கடவுள், தன்னைத் தான் எல்லோரும் வணங்க வேண்டும் என்று ஆணவம் தலை தூக்கும். 


தேவர்களை துன்பப்படுத்தினால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? 


அது அரக்கர்களின் சிக்கல் மட்டும் அல்ல. 


நம் சிக்கலும் தான்.


எவ்வளவோ இருக்கிறது. இருக்கிறதை வைத்துக் கொண்டு இன்பமாக இருக்கத் தெரிவதில்லை. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் அலைவது. பின் முட்டி மோதி அழிவது. இருப்பதையும் அனுபவிக்காமல், ஓடி ஆடி சம்பாதித்தையும் அனுபவிக்காமல், வாழ்வை இழந்து நிற்பது. 


இராவணன் அடுத்தவன் மனைவியை ஆசைப்பட்டான். 


நாம் அடுத்தவன் வைத்திருக்கும் காருக்கு, அவன் போல் பெரிய வீட்டுக்கு, அவன் செல்வத்திற்கு, புகழுக்கு ஆசைப் படுகிறோம். 


இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித்தான் கூறும். அடிப்படை என்ன என்றால், இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழத் தெரியாதவன், மேலும் கொஞ்சம் வந்து விட்டால் மட்டும் இன்பமாக வாழ்ந்து விடுவானா? 


ஒருக்காலும் முடியாது. 


இராவணனின் அழிவு எங்கே ஆரம்பிக்கிறது என்று இராமாயணம் காட்டுகிறது. 


இராம அவதாரம் நிகழவில்லை. சீதை இன்னும் பிறக்கவில்லை. ஆனால், அவனின் அழிவு தீர்மானிக்கப் பட்டு விட்டது. 


எங்கே அறம் பிறழ ஆரம்பிக்கிறதோ, அன்றே அழிவின் விதை ஊன்றப் பட்டுவிட்டது என்று அர்த்தம். விதை வளரும். 


அதை நீங்கள் கடவுள் என்று நம்பினாலும் சரி, இயற்கை என்று கொண்டாலும் சரி, விதி என்று நினைத்தாலும் சரி, எப்படி என்றாலும் அறம் பிறழத் தலைப்பட்டால் அழிவின் தொடக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


அறம் ஒன்றும் அவசரப்படாது.  நின்று, நிதானமாக வேலை செய்யும். நமக்குத்தான் என்பது வருடம், நூறு வருடம் என்று ஆயுள் கணக்கு இருக்கிறது. அறத்திற்கு காலம் ஒரு பொருட்டு அல்ல. அது என்றும் நிலைத்து நிற்பது. அது தன் பாட்டுக்கு தன் வேலையைத் தொடரும். 






Thursday, June 23, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - யான் இனி அடுகிலேன்

   

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  யான் இனி அடுகிலேன்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு 



பாடல்  


சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.

கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.

படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி

அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


(pl click the above link to continue reading)


சுடு தொழில் = தீய தொழில்களை செய்யக் கூடிய 


அரக்கரால் = அரக்கர்களால் 


தொலைந்து = வாழ்வை தொலைத்து 


வான் உளோர். = வானில் உள்ள தேவர்கள் 


கடு = கசப்பு, நஞ்சு 


அமர் = அமர்ந்த, இருந்த, தங்கிய 


களன் = கழுத்து (நஞ்சு கழுத்தில் தங்கிய = சிவன்) 


 அடி கலந்து கூறலும் = திருவடிகளை பணிந்து கூறிய பின் 


படு பொருள் = இனி வரப் போவதை 


 உணர்ந்த = உணர்ந்த 


அப் பரமன் = அப்பரமன், பெரிய கடவுள் 


 ‘யான் இனி = நான் இனி 


அடுகிலேன்’ = (அரக்கர்களோடு) போர் புரிய மாட்டேன்  (தந்த வரம் காரணமாக) 


என மறுத்து = என்று மறுத்து 


அவரொடு ஏகினான் = அவர்களை (தேவர்களை) கூட்டிக் கொண்டு போனான் 


எங்கே போனான் என்பதை அடுத்த பாட்டில் சொல்கிறார் கம்பர். 


இதெல்லாம் திருமால் இராமன் என்ற மானுட அவதாரம் எடுப்பதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள். 


இராமாயணம் எப்படி உருவானது, அதன் கதைக் கரு எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வோம்.  

Wednesday, June 22, 2022

கம்ப இராமாயணம் - இராம அவதாரம் - 4 - கொடுமை தீர்ப்பேன்

  

கம்ப  இராமாயணம் - இராம அவதாரம்  - 4 - கொடுமை தீர்ப்பேன் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

)

 இனித் தொடர்வோம். 


தன் குல குருவான வசிட்டரிடம் சென்று தயரதன் "எனக்கு பின் இந்த மக்களைக் காக்க ஒரு வாரிசு இல்லையே" என்று கூறியவுடன் வசிட்டன் தன் ஞானக் கண்ணால் நோக்குகிறான். 


அவருடைய கண்ணுக்கு பாற்கடல் தெரிகிறது. என்றோ நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது தெரிகிறது. 


"பாற்கடல் மேல் திருமால் ஆதி சேஷன் என்ற பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். அப்போது தேவர்கள் எல்லோரும் வந்து அரக்கர்கள் பற்றி முறையிடுகிறார்கள். அரக்கர்களின் கொடுமையை நான் தீர்ப்பேன் என்று திருமால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்"


அந்தக் காட்சி அவர் கண் முன் தோன்றுகிறது. 


பாடல்  


அலைகடல் நடுவண் ஓர்     அனந்தன் மீமிசை

மலை என விழி துயில்   வளரும் மா முகில்,

‘கொலை தொழில் அரக்கர் தம்  கொடுமை தீர்ப்பென்‘ என்று,

உலைவு உறும் அமரருக்கு   உரைத்த வாய்மையை.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html


(pl click the above link to continue reading)


அலைகடல் = அலை வீசும் கடல் (இங்கே பாற்கடல்) 


நடுவண்  = நடுவில் 


ஓர் = ஒரு 


அனந்தன் = அனந்தாழ்வான் என்று சொல்லப்படும் ஆதிசேடன் என்ற பாம்பின் 


 மீமிசை = மேலே 


மலை என = கரிய மலை போல 


விழி துயில்  வளரும் = கண்கள் தூங்கும் 


 மா முகில், = பெரிய மழை மேகத்தைப் போல 


‘கொலை தொழில் = கொலையை தங்கள் தொழிலாகக் கொண்ட 


அரக்கர் தம் = அரக்கர்களின் 


கொடுமை தீர்ப்பென்‘ என்று, = கொடுமைகளை தீர்ப்பேன் என்று 


உலைவு உறும் அமரருக்கு = அமைதி இன்றி அலையும் தேவர்களுக்கு 


உரைத்த வாய்மையை. = கொடுத்த வாக்கை 


தயரதன் கேட்டது ஒரு வாரிசை. வசிட்டர் கண்டதோ பாற்கடலில் நடந்த ஒரு நிகழ்வை. 


இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? 


அங்குதான் கதை ஆரம்பமாகிறது. 


இராமாயணத்தின் முதல் முடிச்சு அங்கே இருந்து தொடங்குகிறது.