Wednesday, May 25, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 2

 

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 2 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

)

 இனித் தொடர்வோம். 


இராம அவதாரம் நிகழ்வதற்கு முன் என்ன நடந்தது? எப்படி இராம அவதாரம் நிகழ்ந்தது, ஏன் அது நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?


ஒரு நாள், தசரதன் அவருடைய குல குருவான வசிட்டரை அணுகி, "குருவே, உங்களுடைய துணையால் அறுபதினாயிரம் ஆண்டுகள் பகைவர்களை அடக்கி இந்த உலகை காப்பாற்றி வந்து விட்டேன். ஒரு குறையும் இல்லை. ஆனால், எனக்குப் பின்னால் இந்த அரசை, இந்த குடிகளை யார் காப்பாற்றப் போகிறார்களோ என்ற மனதில் கவலையாக இருக்கிறது" என்றான். 


அதுதான் இராம அவதாரத்துக்கு போட்ட பிள்ளையார் சுழி. 


எனக்குப் பின் என் மகன் ஆள வேண்டும். எனக்கு மகன் இல்லை. இனி இந்த அரசை யார் ஆளப் போகிறார்களோ என்ற கவலையாக இருக்கிறது என்கிறான். 


பாடல்  


‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற

உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;

பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html


(pl click the above link to continue reading)


‘அறுபதினாயிரம் ஆண்டு  = அறுபதினாயிரம் ஆண்டுகள் 


மாண்டு உற = மாட்சி பெற 


உறு பகை ஒடுக்கி = பெரிய பகைவர்களை அடக்கி 


 இவ் உலகை = இந்த உலகத்தை 


ஓம்பினேன் = காப்பாற்றினேன், அரசாண்டேன் 


பிறிது ஒரு குறை இலை = வேறு ஒரு குறையும் இல்லை 


என் பின் = என் காலத்திற்கு பிறகு 


வையகம்  = இந்த உலகம் 


மறுகுறும் = கலக்கம் அடையும் 


என்பது = என்று 


ஓர் மறுக்கம் உண்டு = ஒரு கலக்கம், கவலை எனக்கு இருக்கிறது 


அரோ. = அசைச் சொல் 


தனக்கு பிள்ளை இல்லையே என்று அவன் வருந்தவில்லை. அப்படி என்றால் அறுபதினாயிரம் ஆண்டுகள் கவலைப் பட்டுக் கொண்டே தான் இருந்திருக்க வேண்டும். இத்தனை வருடம் கழித்து ஏன் கவலைப் பட வேண்டும்? இத்தனை வருடம் பிள்ளை இல்லாமல் இருந்தாகி விட்டது. இனியும் அப்படியே இருந்து விடலாம்தானே. 


அவன் கவலை பிள்ளை இல்லையே என்பது அல்ல. 


தனக்குப் பின் இந்த அரசு, மக்கள் என்ன அவார்களோ என்ற கவலை. 


ஒரு நல்ல தலைவன் தனக்கு பின் என்ன நடக்கப் போகிறது என்று கவலைப் படுவான். 


வீடாக இருக்கட்டும், நிறுவனமாக இருக்கட்டும், நாடாக இருக்கட்டும்...தான் போன பின் அது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையான தலைவன். எனக்குப் பிறகு எக்கேடும் கேட்டு போகட்டும் என்று நினைப்பவன் நல்ல தலைவன் இல்லை. 


காப்பிய போக்கோடு கம்பன் சொல்லித் தரும் நல்ல குணங்கள். 


இராமன் பிறந்தான், இராவணன் அழிந்தான் என்பது கதை. அதை கதையாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உயர்ந்த கருத்துகளையும் நாம் பெற்றுக் கொண்டால் இரட்டிப்பு நன்மை நமக்கு. 


படிக்கிற காலத்தில், Succession Planning, என்று ஒரு தத்துவம் சொல்லித் தந்தார்கள். ஒரு நிறுவனம் தடையின்றி நடக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு பதவிக்கும், அதில் உள்ளவர் ஏதோ ஒரு காரணத்தால் விலக நேர்ந்தால் அந்த இடத்துக்கு யார் வர வேண்டும் என்று தீர்மானம் செய்து அடுத்த நபரை தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். 


அடடா மேற்கிந்திய சிந்தனை எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். 


அவர்களுக்கு எவ்வளவோ காலத்துக்கு முன் நம்மவர்கள் அவற்றை சிந்தித்து, அதை கதை வடிவில் தந்தும் இருக்கிறார்கள். .


அதை எல்லாம் படிக்க நமக்கு நேரம் இல்லாமல் போய் விட்டது. 


படிப்போம். 





1 comment:

  1. What you have said in the penultimate para is 100% true
    Parthasarathi

    ReplyDelete