Monday, May 9, 2022

இராமானுசர் நூற்றந்தாதி - ஒன்றத் திரித்து

 இராமானுசர் நூற்றந்தாதி - ஒன்றத் திரித்து 


ஒரு விளக்கை ஏற்ற வேண்டும் என்றால் எண்ணெய் விட்டு, திரி போட்டு அதை ஏற்ற வேண்டும். 


திரி என்றால் திரிப்பது. ஒரு பருமனான நூலைப் போட்டால் அது சீக்கிரம் எரிந்து கருகி விடும். இரண்டு அல்லது மூன்று நூலை சேர்த்துத் திரித்து போட்டால் அந்த தீபம் நின்று எரியும். அதற்கு அறிவியல் கோட்பாடு இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று நூல்களை சேர்த்துத் திரித்தால், அதற்கு இடையே உள்ள இடைவெளி ஒரு குழாய் போல் செயல் பட்டு எண்ணெயை மேலே கொண்டு வரும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இருள் போக்க விளக்கை ஏற்றுகிறோம். விளக்குக்குத் திரி வேண்டும். 

ஆழ்வார்கள் பாசுரங்கள் நம் அறியாமை இருளை போக்க வந்தவை. அந்த பாசுரங்கள் அறிவு ஒளி தரும் விளக்கு என்றால் அதன் திரியாக எதாவது இரண்டு நூல் வேண்டுமே? அவை என்னென்ன?


வேதங்கள் ஒரு நூல், தமிழ் ஒரு நூல். இந்த இரண்டு நூலையும் திரித்து, ஞான விளக்கு ஏற்றினார்களாம். 


வேதம் யாருக்குப் புரியப் போகிறது? அதை படித்து உணர்வது கடினம். எனவே அதன் சாரத்தை எடுத்து, அதை இனிய தமிழில் நமக்குத் தந்தார் பொய்கை ஆழ்வார். அப்படி அவர் ஏற்றிய திருவிளக்கை தன் மனத்துள் இருத்திய இராமானுசன் எம் இறைவன் என்கிறார் ஆரவமுதனார். 


பாடல் 


வருத்தும் புறவிருள் மாற்ற,*  எம் பொய்கைப்பிரான் மறையின்- 

குருத்தின் பொருளையும்*  செந்தமிழ் தன்னையும் கூட்டி*  ஒன்றத்- 

திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ள‌த்தே* 

இருத்தும் பரமன்*  இராமானுசன் எம் இறையவனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_91.html


(Please click the above link to continue reading)



வருத்தும் = வருத்தம் தரும், துன்பம் தரும் 


புறவிருள் மாற்ற = புற இருளைப் போக்க 


எம் = எம்முடைய 


பொய்கைப்பிரான் = பொய்கை ஆழ்வார் 


மறையின் = வேதங்களின் 


குருத்தின் பொருளையும் = ஆழமான பொருளையும் 


செந்தமிழ் தன்னையும் = செந்தமிழையும் 


கூட்டி =சேர்த்து 


ஒன்றத் = ஒன்றாக 


திரித்தன்று = திரித்து அன்று 


எரித்த = ஏற்றிய 


 திருவிளக்கைத்  = ஒளி பொருந்திய விளக்கை 


தன் திருவுள்ள‌த்தே = தன்னுடைய உள்ளத்தில் 


இருத்தும் பரமன் = கொண்ட பரமன் 


இராமானுசன் = இராமானுசன் 


எம் இறையவனே = எங்களுக்கு இறைவன் 


வேதம் படிக்க முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். பிரபந்தம் என்பது வேதத்தின் சாரம். நமக்குத் தெரிந்த மொழியில், இனிமையாக அதன் சாரத்தை நமக்கு அருளிச் செய்து இருக்கிறார்கள். 


பழச் சாறு போல. 


அள்ளி அள்ளி பருக வேண்டியதுதான் பாக்கி. 




No comments:

Post a Comment