Monday, May 30, 2022

திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும் - பாகம் 1

 திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும்  - பாகம் 1 


ஒரு சொல்லில் ஓராயிரம் அர்த்தம் கொண்டு வரும் கலை வள்ளுவருக்கே உரியது.  எப்படித்தான் அந்த சொல் வந்து விழுகிறதோ அந்த இடத்தில் என்று பிரமிப்பை ஏற்படுத்தும். 


அப்படி ஒரு சொல்லைக் கொண்ட குறள் தான் நாம் இன்று பார்க்கப் போவது. 


"நன்மைக்கு வித்தாகும் நல்ல ஒழுக்கம். தீய ஒழுக்கம் என்றும் துன்பத்தைத் தரும்."


இது தான் மேலோட்டமான கருத்து. ஆழமான பல செய்திகள் உண்டு. 


பாடல் 


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_30.html



(pl click the above link to continue reading)


நன்றிக்கு  = நன்மைக்கு 


வித்தாகும் = விதையாகும் 


நல்லொழுக்கம் = நல்ல ஒழுக்கம் 


தீயொழுக்கம் = தீய ஒழுக்கம் 


என்றும் இடும்பை தரும் = எப்போதும் துன்பத்தைத் தரும். 


படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்று. 


முயற்சிக்கிறேன். 


முதலில், அது என்ன தீய ஒழுக்கம்? ஒழுக்கத்தில் நல்ல ஒழுக்கம் , தீய ஒழுக்கம் என்று இருக்கிறதா? அப்படி என்றால் என்ன?  


ஒழுக்கம் என்றால் ஒழுகுவது. எதையும் முறையாக கடைபிடிப்பது ஒழுக்கம். அது நல்ல விடயமா அல்லது தீய விடயமா என்பது வேறு செய்தி. உதாரணமாக, காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி முகம் , கை கால் கழுவி பின் தான் காப்பி குடிப்பேன் என்பது ஒரு ஒழுக்கம். இல்லை, படுக்கையிலேயே காப்பி குடிப்பேன். அப்புறம் தான் பல் துலக்குவேன் என்பது இன்னொரு ஒழுக்கம். என்ன ஆனாலும் சரி, காப்பி குடிக்காமல் படுக்கையை விட்டு எழுந்திரிப்பது இல்லை என்று இருந்தால் அதுவும் ஒரு ஒழுக்கம் தான். முறையாக, தவறாமல் செய்வதால் அதுவும் ஒரு ஒழுக்கம் தான். 


நல்ல ஒழுக்கமா, தீய ஒழுக்கமா என்பது வேறு விடயம். 


காப்பி குடிப்பதே ஒரு தீமை என்று சொல்பவர்களுக்கும் இருக்கிறார்கள். அதில் என்ன குளித்துவிட்டு குடிப்பது, குளிக்கும் முன் குடிப்பது  என்று வாதம் செய்யலாம் அல்லவா? 


எனவே முறையாகச் செய்யும் எதுவும் ஒழுக்கம் தான். 


இரண்டாவது, நன்மைக்கு வித்தாகும் நல்லொழுக்கம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? நல்ல ஒழுக்கம் இல்லாவிட்டால் நன்மை விளையாது. நன்மை விளையாவிட்டால்? தீமை விளையும் என்று அர்த்தம். 


மூன்றாவது, நான் முன் சொன்ன ஒரு வார்த்தை. ஒரு சொல். அது "வித்து" என்ற சொல். வித்து என்றால் விதை. 


நன்மைக்கு விதை நல்ல ஒழுக்கம். 


விதை என்று ஏன் சொல்ல வேண்டும்? 


விதையில் இருந்து செடி வரும், மரமாக வளரும், கிளை பரப்பி, நிழல் தந்து, காய், கனி என்று மிகுந்த பலன்களைத் தரும்.  அதுவும் எப்படி? ஏதோ ஒருவருடம் நிழல், காய், கனி எல்லாம் தந்துவிட்டு நின்று விடாது. ஒவ்வொரு வருடமும் தரும் அல்லவா? அதன் ஆயுள் உள்ள வரை அதில் இருந்து நமக்கு நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும். 


சற்று பொறுங்கள், ஆயுள் உள்ள வரை மட்டுமா? 


அந்த மரத்தில் இருந்து வரும் கனியின் உள்ளே விதை இருக்கும். அந்த விதை முளைத்து இன்னும் பல மரங்கள் வரும். அந்த மரங்களில் இருந்து எவ்வளவு பலன்கள் கிடைக்கும். 


என்றோ போட்ட ஒரு விதை எவ்வளவு காலத்துக்கு எவ்வளவு பலன் தருகிறது. 


அது மட்டுமா?


ஒரு விதை, ஒரு மரமாக ஆகிறது. 


ஒரு மரம், பல்லாயிரக் கணக்கான பழங்களை தருகிறது. அவற்றில் இருந்து எவ்வளவு விதைகள் வருகின்றன? அவை அனைத்தும் மரமானால் எவ்வளவு பலன் கிடைக்கும்? 


அது மட்டும் அல்ல. விதை வளர்ந்து விதை நட்டவனுக்கு மட்டுமா பலன் தருகிறது?


மரத்தில் எத்தனையோ பறவைகள் கூடு கட்டுகின்றன. தேனீக்கள் கூட கூடு கட்டலாம். 


மரம், மண் அரிப்பை தடுக்கிறது. அதனால பல நன்மைகள். 


மரம், மழையை கொண்டு வருகிறது. அதனால் எவ்வளவு நன்மைகள். 


இப்படி கணக்கு சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு விதையில் இருந்து எவ்வளவு நன்மை? எவ்வளவு காலத்துக்கு நன்மை.


மரத்தின் கிளையை அறுத்து பெட்டி செய்யலாம், பீரோ செய்யலாம். அது எத்தனை காலம் வரும். மரம் இறந்த பின்னும், அதன் பலன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


அது போல ஒரு நல்ல ஒழுக்கம் இருந்தால், அது ஒரு விதை போல இருந்து பல நன்மைகள் செய்யும். 


உதாரணமாக .....



(பதிவு சற்றே நீண்டு விட்டதால், இதை அடுத்த பாகத்தில் தொடர்வோம்)


1 comment:

  1. அற்புதம் ! நன்றிகள் பல ! 🙏🏽

    ReplyDelete