Friday, May 6, 2022

சேத்திரத் திருவெண்பா - திருச்சிராப்பள்ளி

சேத்திரத் திருவெண்பா - திருச்சிராப்பள்ளி 


நல்லன அல்லாதன செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. நல்லது செய்ய நேரமே இருப்பது இல்லை. 


"தினம் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்...எங்க நேரம் இருக்கு. ஏதாவது ஒரு வேலை வந்துருதுனு" சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


"எனக்கு காப்பி குடிக்கவே நேரம் இல்லை, இந்த whatsapp பாக்க நேரம் இல்லை, புகை பிடிக்க நேரமே இல்லை" என்று யாராவது சொல்லக் கேட்டு இருக்கிறோமா? அதுக்கு மட்டும் எப்படியோ நேரம் கிடைத்து விடுகிறது. 


நல்ல விடயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். காரணம், நமக்கு அளவற்ற வாழ்நாள் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். 


மரணம் என்ற சொல்லை எடுத்தாலே "சே...என்ன அபசகுனம் பிடித்த மாதிரி அதை எல்லாம் பேசிக் கொண்டு...நாளும் கிழமையுமா அமங்கலமா பேசிக்கிட்டு..." என்று அதை பேசுவதைக் கூட தவிர்த்து விடுகிறோம். 


வாழ்கை என்று எழுத்து மரணம் என்ற கரும் பலகையில் எழுதப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பார் ஓஷோ. மரணம் என்ற ஒன்று இருப்பதால் தான் எல்லாமே அழகாக இருக்கிறது. மரணம் இருப்பதால் தான் வாழ்வின் மேல் பற்று வருகிறது. உறவுகள் மேல் பிடிப்பு வருகிறது. 


ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சொல்கிறார் 


"நாட்கள் எல்லாம் ஓடி விட்டன. மரணம் வந்து விட்டது. உடல் கட்டு தளர்ந்து விட்டது. உடம்பில் இருந்து துர் நாற்றம் வீசத் தொடங்கி விட்டது. இனி வைத்து இருக்கக் கூடாது. எடுத்தற வேண்டியதுதான் என்று உறவினர்கள் எல்லாம் சொல்லுவார்கள். அப்படி ஒரு நாள் வரும். அந்த நாள் வருவதற்கு முன்னே திருச்சிராப்பளியில் உள்ள அவன் பாதமே சேர்"


என்கிறார். 


பாடல் 



கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி

ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது

இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே

சிராமலையான் பாதமே சேர் .


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_6.html



(Pl click the above link to continue reading)



கழிந்தது = முடிந்தது 


நென்னற்றுக் = நென்னல் என்றால் நேற்று. அதாவது முன் காலம். 


கட்டுவிட்டு = உறுதியான உடல் கட்டு குலைந்து 


நாறி = நாற்றம் எடுத்து 


ஒழிந்த துடல் = உயிர் ஒழிந்த பின் உடல் 


இரா வண்ணம் அழிந்தது = இருக்க முடியாமல் அழிந்தது 


இராமலையா = இராமல் + ஐயா. வைத்து இரமால் ஐயா 


கொண்டுபோ  = கொண்டு போய் விடுங்கள் (சுடுகாட்டுக்கு) 


என்னாமுன்  = என்று மற்றவர்கள் சொல்லுவதற்கு முன்னமேயே 


நெஞ்சே  = என் மனமே 


சிராமலையான் = திருச்சிராப்பள்ளி மலையில் இருப்பவன் 


பாதமே சேர் . = திருவடிகளை சென்று அடை 


இந்த உடம்புக்கு சரீரம் என்று பெயர். சரியும் என்பதால். 


ரொம்ப நாள் ஒன்றும் இல்லை என்கிறார். 


இது புரியும். ஆனால் உணர்வது கடினம். 


No comments:

Post a Comment