Saturday, May 21, 2022

திருக்குறள் - ஒழுக்கமும் ,இழுக்கமும்

 திருக்குறள் - ஒழுக்கமும் ,இழுக்கமும் 


திருக்குறள் எவ்வளவோ காலம் கடந்து வந்து இன்றும் நம் வாழ்க்கைக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. 


ஆனாலும், சில குறள்கள் நமக்கு மயக்கம் தருவனவாய் இருக்கின்றன. வள்ளுவர் அப்படி சொல்லி இருப்பாரா? இது இந்தக் காலத்துக்கு பொருந்துமா? இது இன்றைய நிலைக்கு பொருந்தாது, எனவே இந்தக் குறளை நாம் புறம் தள்ளி விடலாமா என்ற எண்ணம் வரும். அல்லது ஒரு வேளை இது ஒரு இடைச் செருகலாக இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம். அல்லது சிலர் சொல்லுவது போல ஓலைச் சுவடிகளை கண்டு பிடித்து அச்சில் ஏற்றும் போது தெரிந்தோ, தெரியாமலோ செய்த பிழையாக இருக்கலாம் என்றெலாம் தோன்றும். 


சிக்கல் என்ன என்றால், ஒரு குறளை நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக மறுதலித்தால், அதே போல் மற்றொரு குறளையும் மறுதலித்தால் என்ன என்று தோன்றும். ஒரு குறள் தவறு அல்லது ஏற்புடையது இல்லை என்றால் மற்ற குறள் மேலும் சந்தேகம் வரும். 


எனவே, இவ்வளவு ஆழமாக, நுட்பமாக சிந்தித்து எழுதிய வள்ளுவர் குறளில் தவறு இருக்க வழி இல்லை. நாம் தான் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம் என்று நாம் மேலும் ஆராயத் தலைப்படுகிறோம். 


அப்படிப்பட்ட குறள்களில் இன்று நாம் பார்க்கப் போகும் குறளும் ஒன்று. 


மக்களை வருணம், குலம் என்ற இரண்டு பிரிவாக வள்ளுவர் பார்கிறார். 


வர்ணம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணங்கள். (இப்போதே சிலர் முகம் சுழிப்பது தெரிகிறது)


இந்த ஒவ்வொரு வர்ணதுக்குள்ளும் குலப் பிரிவு இருக்கிறது. 


எப்படி என்று ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.


வியாபாரம் செய்பவர் வைசியர் என்ற வர்ணத்தை சார்தவர் என்று தெரியும். 


வியாபாரத்தில் பல விதம் உண்டு. மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என்று. 


தங்கம் விற்பவர், காய் கறி விற்பவர், கார் விற்பவர், என்று பல பிரிவுகள் உண்டு அல்லவா?


அதே போல் பிராமணர்களிலும் உட்பிரிவுகள் உண்டு என்று நாம் அறிகிறோம். 


அந்த உட்பிரிவுகளை குலம் என்கிறார். 


இனி குறளுக்கு செல்வோம். 


பாடல் 


ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_21.html


(pl click the above link to continue reading)



ஒழுக்கம் உடைமை = ஒழுக்கம் உடையவனாக இருத்தல் 


குடிமை = குலமாகும் 


இழுக்கம் = அந்த ஒழுக்கத்தில் இருந்து தவறினால் 


இழிந்த பிறப்பாய் விடும் = தாழ்ந்த பிறப்பாகி விடும் 


இங்கே குடிமை, பிறப்பு என்ற இரண்டு சொற்கள் இருக்கின்றன. 


இதற்கு பரிமேலழகர் எப்படி உரை சொல்கிறார் என்று பார்ப்போம். 


"ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , 


இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.


(பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். "


ஒருவர் பிறப்பது ஒரு குறிப்பிட்ட வர்ணத்தில். அதை "பிறப்பு" என்கிறார் வள்ளுவர். 


ஒரு வர்ணத்தில், ஒரு குலத்தில் பிறந்தாலும், நல்ல ஒழுக்கம் உடையவனாக இருந்தால், அந்த வர்ணத்துக்குள் உயர்ந்த குலத்தவனாக கருதப் படுவான். 


மாறாக, ஒருவன் ஒழுக்கக் குறைவாக நடந்தால், வர்ணத்துக்குள் கீழே உள்ள குலத்தவனாக அல்ல, கீழே உள்ள வர்ணத்துக்குப் போய் விடுவான். என்கிறார். 


ஒழுக்கமாய் இருந்தால் வர்ணம் மாறாது. குலம் மாறும். 


ஒழுக்கம் குறைந்தால், வர்ணத்தில் கீழே போய் விடுவான். .


நமக்கு பிரச்னை என்ன என்றால், உயர்ந்த வர்ணம், தாழ்ந்த வர்ணம், உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்று எப்படி வள்ளுவரும், பரிமேலழகரும் சொல்லலாம் என்பது தான். 


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவர் இப்படிச் சொல்வாரா என்ற சந்தேகம் வருகிறது. .


ஜீரணிக்க சற்று கடினமான குறள் தான். 


பரிமேலழகரை தவிர்த்து வேறு சில உரை ஆசிரியர்கள் இதற்கு சற்று வேறு விதமாக உரை செய்து இருக்கிறார்கள். 


ஒழுக்கம் உயர்ந்த நிலையைத் தரும், இழுக்கம் மனிதரிலும் கீழான விலங்கு நிலைக்கு ஒருவனை தள்ளிவிடும் என்று உரை செய்கிறார்கள். 


"மனுஷனா அவன், மிருகம்" என்று மோசமான குணம் உள்ளவர்களை திட்டுவதை நாம் கேட்டு இருக்கிறோம். ஒழுக்கம் தவறினால் மனிதன் தன்னிலும் கீழான விலங்கைப் போல் நடத்படுவதை நான் கண் கூடாக காண்கிறோம். 


குற்றம் செய்தவனை கையில் விலங்கு போட்டு தெருவில் இழுத்துச் செல்கிறார்கள், (கைதிக்) கூண்டில் அடைத்து வைக்கிறார்கள். ஏனைய மனிதர்களோடு வாழத் தகுதி அற்றவன் என்று அவனை தனிமைச் சிறையில் போடுகிறார்கள். 


அப்படியும் உரை சொல்ல வழி இருக்கிறது. 


எது எப்படியோ, ஒழுக்கம் உயர்வு தரும், இழுக்கம் தாழ்வைத் தரும் என்று புரிந்து கொள்வோம். 





No comments:

Post a Comment