Wednesday, May 11, 2022

திருக்குறள் - கற்றடங்கல்

 திருக்குறள் - கற்றடங்கல் 


முதலில் மெய் அடக்கம் சொன்னார். 


பின், நாவடக்கம் சொன்னார்.


இறுதியாக, மனவடக்கம் பற்றி கூறுகிறார். 


கோபத்தை காத்து, கற்று, அடங்கியவனை சென்று சேர அறக் கடவுள் எந்த வழியில் செல்லலாம் என்று காத்துக் கிடக்கும் என்கிறார். 


பாடல் 



கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_11.html


(Please click the above link to continue reading)


கதம்காத்துக் = கோபத்தை அடக்கி 


கற்றடங்கல் = கற்று, பின் அடங்கி 


ஆற்றுவான் = வழியில் 


செவ்வி = காலம் 


அறம்பார்க்கும் = அறக் கடவுள் பார்த்துக் கொண்டே இருப்பார் 


ஆற்றின் நுழைந்து = எந்த வழியில் சென்று அவனை அடையலாம் என்று 


அவன் போய் அறக் கடவுளை அடைய வேண்டாம். அறக் கடவுள் இவன் வரும் வழி பார்த்து நிற்பாராம். அறத்தின் உச்சம் இது. அடக்கத்தின் உச்சபட்ச பலன். 


கதம் என்றால் சூடு, கோபம். கத கதப்பாக இருக்கிறது என்கிறோம் அல்லவா? கோபத்தை காக்க வேண்டும். காவல் செய்யாவிட்டால் அது ஓடிவிடும். 


'கற்றடங்கல்' - கற்கவும் வேண்டும், ஆனால் நிறைய படித்து விட்டோம் என்ற திமிர் இல்லாமல் அடக்கமாகவும் இருக்க வேண்டும். பல பேருக்கு கல்வி அறிவு இல்லாமலேயே நிறைய கற்று விட்டதைப் போல ஒரு திமிர் வந்து விடுகிறது. 


செவ்வி - இதற்கு பரிமேலழகர் செய்யும் உரை அற்புதம். இந்தக் குறளில் மன அடக்கம் எங்கே சொல்லப் பட்டிருகிறது? சரியான காலத்தில் அறக் கடவுள் அவனை சென்று சேர்வார் என்றுதானே இருக்கிறது.  பரிமேலழகர் தன் உரையில்  சொல்கிறார் 


ஒருவன் அடக்கம் இல்லாதவனாக இருந்தால் அது ஏதோ ஒரு வழியில் வெளிப்படும். உடலால், வாக்கால், மனதால் எப்படியாவது அது வெளிப்படும். அப்படி இந்த மூன்றாலும் வெளிப்படாமல் இனிய முகம் உடையாவனாக இருக்கும் "காலம்" என்று செவ்வி என்ற வார்த்தைக்கு பொருள் சொல்கிறார். 


அடக்கம் மட்டும் இருந்தால் போதாது. அடக்கமாக இருக்கிறேன் என்று முகத்தை எப்போதும் 'உர்' என்று வைத்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்? என்ன படித்து என்ன பலன், யாரிடமும் வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் இப்படி அடக்கமாக இருக்க வேண்டி இருக்கிறதே என்று வருந்திய முகத்தோடு இருந்தால் அறக் கடவுள் வரமாட்டார். அடக்கமும் இருக்க வேண்டும், முகமும் இனிமையாக இருக்க வேண்டும்.  அப்படி இருக்கும் 'காலத்தில்' அறக் கடவுள் வருவார் என்று சொல்வதன் மூலம் 'மன அடக்கத்தை' இந்த குறளுக்குள் கொண்டு வருகிறார். 


அப்படி இருப்பவன் வழி பார்த்து அறக் கடவுள் காத்து இருப்பாராம்.


இது இந்த அதிகாரத்தில் பத்தாவது குறள். இறுதிக் குறள். 


அடக்கம் உடைமை பற்றி படித்து விட்டோம். 


அடுத்து என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு இருங்கள். 


நாளை, இந்த அதிகாரத்தின் தொகுப்புரை பார்த்துவிட்டு பின் அடுத்த அதிகாரத்துக்குள் செல்வோம். 


எப்படி போகிறது? நன்றாக இருக்கிறதா? எளிமையாக இருக்கிறதா?  தெளிவாக இருக்கிறதா.  நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. இருப்பதை கொஞ்சம் எளிமை படுத்திச் சொல்கிறேன். அவ்வளவுதான். 


இந்த வேகத்தில் போனால், முழுவதும் படிக்க நிறைய நாள் ஆகும். மூல நூலை தேடித் பிடித்து வேகமாக வாசித்து விடுங்கள். இணைய தளத்தில் ஆயிரம் உரைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் என்று படித்தால் கூட மூன்று நான்கு மாதங்களில் முழு நூலையும் வாசித்து விடலாம். 


ஏன் காத்திருக்க வேண்டும்?





1 comment:

  1. தங்கள் தமிழ் சேவைகள் வளர்க வாழ்க

    ReplyDelete