Wednesday, May 4, 2022

திருக்குறள் - எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

 திருக்குறள் - எல்லார்க்கும் நன்றாம் பணிதல்


அடக்கம் உடைமை நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆணவம் கூடாது என்பதும் தெரியும். இருந்தும் பணிவு வருவது இல்லை. அப்பப்ப மண்டைக் கணம் வந்து விடுகிறது. 'என்னைப் போல்' யார் என்ற கர்வம் தலை தூக்குகிறது. அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து அதை எப்படி சரி செய்யலாம் என்று வள்ளுவரும் பர்மேலழகரும் நமக்குச் சொல்கிறார்கள். 


பாடல் 


எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_4.html



(please click the above link to continue reading)



எல்லார்க்கும் = அனைவருக்கும் 


நன்றாம் = நல்லதாம் 


பணிதல் = அடக்கமுடைமை 


அவருள்ளும் = அந்த அனைவருக்குள்ளும் 


செல்வர்க்கே = செல்வம் உடையவர்களுக்கே 


செல்வம் தகைத்து = மேலும் ஒரு செல்வம் சேர்ந்தது போல் 


இதில் எங்கே அராய்ச்சி, அதன் முடிவு எல்லாம் இருக்கிறது என்று நாம் வியப்போம். பரிமேலழகர் செய்யும் உரை நுட்பம் இருக்கிறதே....மேலே வாசியுங்கள் உங்களுக்கே புரியும். 


இரண்டு  தொகுதியாக மக்களைப் பிரிக்கிறார். 


ஒன்று "எல்லார்க்கும்" இன்னொன்று "செல்வர்".


செல்வர் என்பது எல்லார்க்கும் என்பதில் அடங்கும்.  சரிதானே?


அப்படி என்றால் இந்த "எல்லார்க்கும்" என்றதில் செல்வர்கள் இல்லாதவர்கள் என்று ஒரு பகுதி இருக்கும் அல்லவா? அது யார் என்று பரிமேலழகர் யோசிக்கிறார். 


"நன்றாம் பணிதல்" என்று சொன்னதனால் அவர்களிடம் ஏதோ பெருமைப் படத்தக்க ஒன்று இருக்க வேண்டும். ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் பணிவதில் என்ன பெருமை இருக்க முடியும். எனவே, ஏதோ ஒரு சிறப்பு உள்ளவர்கள் என்று புரிகிறது. 


அது என்ன சிறப்பு என்று யோசிக்கிறார். 


செல்வம் ஒரு சிறப்பு என்று வெளிப்படையாகவே வள்ளுவர் சொல்லி விட்டார். எனவே வேறு என்னென்ன சிறப்புகள் இருக்க முடியும் என்று சிந்திக்கிறார். 


சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகிறார். மற்ற சிறப்புகள் "கல்வி" மற்றும் "குலம்" என்று முடிவு செய்கிறார். 


உலகில் உள்ள அனைவருக்கும் பெருமை மூன்று காரணங்களால் வரும் - கல்வி, குலம், செல்வம் என்று பிரித்துக் கொள்கிறார். நீங்கள் எப்படி யோசித்துப் பார்த்தாலும் பெருமை இந்த மூன்றுக்குள் அடங்கிவிடும். 


சரி, அதில் ஏன் செல்வரை மட்டும் தனித்துக் கூறுகிறார்? படித்தவனிடம் ஆணவம், திமிர் இருக்காதா? அவன் பணிந்தால் அது இன்னொரு டிகிரி மாதிரி என்று ஏன் சொல்லவில்லை?


ஒருவன் நிறைய கற்றால், அந்த கல்வி அறிவே அவனுக்கு அடக்கத்தைத் தரும். ஒவ்வொரு புது விடயம் படிக்கும் போதும், 'அட, இது தெரியாமல் இத்தனை நாள் இருந்து விட்டேனே' என்று நினைப்பான். அது மட்டும் அல்ல, இது போல் இன்னும் எவ்வளவு இருக்கிறதோ எனக்குத் தெரியாதது. நமக்குத் தெரிந்தது ஒன்றும் பெரிது அல்ல. தெரியாதது கடல் போல் இருக்கிறது என்று அந்தக் கல்வி அறிவே அவனுக்கு அடக்கத்தைத் தரும். 


குலம். நல்ல குலத்தில் பிறந்த ஒருவனுக்கு அவன் குலமே அடக்கத்தைப் போதிக்கும். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆணவம் கூடாது என்று சிறு வயது முதலே சொல்லித் தருவார்கள். அவர்கள் பெருமை எங்கோ நிற்கும். சிறுவயதில் அவர்களின் பெருமையை பார்த்து வளர்ந்த ஒருவனுக்கு தானும் அப்படி வர வேண்டும் என்று தோன்றுமே அல்லாமல் நான் எல்லாம் படித்துவிட்டேன், எல்லாம் அறிந்து விட்டேன் என்ற ஆணவம் வராது. 


கல்வியும், குலமும் ஒருவனுக்கு அடக்கத்தை அவைகளே தரும் என்பதால் அந்தப் பெருமை உள்ளவன் அடக்கமாய் இருப்பதில் ஒரு பெரிய பெருமை இல்லை என்கிறார். 


ஆனால், இந்த செல்வம் இருக்கிறதே...அது ஒரு விதத்திலும் அடக்கத்தைத் தராது. மாறாக மேலும் மேலும் ஆணவத்தைக் கூட்டும். எப்படி?


செல்வம் உள்ள ஒருவனை அவனை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.அவனிடம் இருந்து ஆதாயம் பெற அவன் செய்த தவறுகளைக் கூட பெரிய சாதனைப் போல காட்டுவார்கள். ஆதாயம் பெற சிலர் என்றால், அவன் செல்வத்தின் தன்மை கண்டு பயந்து போய் சிலர் அவனுக்கு பணிந்து போய் அவன் கர்வத்தை மேலும் வளர்ப்பார்கள். 


எனவே, செல்வம் இருப்பவன் அடங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. ஒருவேளை அவன் அடங்கினால் அது அவனுக்கு "அடக்கம்" என்ற இன்னொரு செல்வம் சேர்ந்த மாதிரி என்கிறார். 


அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லையே. எங்கே சொல்லி இருக்கிறது என்று கேட்கிறீர்களா?


"செல்வர்'கே' செல்வம் தகைத்து' என்பதில் உள்ள ஏகாரம் அதைச் சொல்கிறது. 


'செல்வர்க்கு செல்வம் தகைத்து' என்று சொல்லி இருக்கலாம். 


செல்வர்கே என்று சொன்னதன் மூலம் செல்வர்கள் அடங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. அப்படி அவர்கள் அடங்கினால் அது அவர்களுக்கு இன்னொரு செல்வம் போல என்று கூறுகிறார். 


படித்தவன் ஏன் அடங்குவது இல்லை? அவன் சரியாக படிக்காததால். ஆழ்ந்து படித்தால் அறிவின் ஆழம், நீளம், அகலம் தெரியும். பணிவு தானே வரும். கம்பர் சொல்வார் "நாய் நக்கிய பாற்கடல் போல" என்பார். அறிவு கடல் போல் கிடக்கிறது. நான் ஒரு நாய் போல் அதை நக்கிக் குடிக்கிறேன். ஒரு நாய் எவ்வளவு குடித்து விட முடியும். அந்தப் பணிவு அறிவின் அளவு தெரிந்ததால் வரும் பணிவு. 


இப்படிப் பட்ட குறள்களை படிக்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு அடக்கம் வருகிறது அல்லவா? அடேயப்பா என்ன ஒரு நுணுக்கம், என்ன ஒரு செறிவு, ஆழம் என்ற மலைப்பு வருகிறது அல்லவா? அது கல்வி தரும் பணிவு. 


எவ்வளவு தூரம் சிந்தித்து இருக்கிறார்கள் பாருங்கள். 


1 comment:

  1. பரிமேல் அழகர் உரையை தாங்கள் எளிமையாக விளக்கி சொல்வதால் தான் எனக்கு புரிகிறது. மிக அருமையான, சிந்திக்க வைக்கும் குறள் விளக்கம்! மிக்க ந‌ன்றி!

    ReplyDelete