Showing posts with label திருவாசகம். Show all posts
Showing posts with label திருவாசகம். Show all posts

Saturday, May 17, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து

 திருவாசகம் - அதிசயப் பத்து 




நாம் ஒரு சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கே வரும் ஒருவர், "இந்தப் பக்கம் எங்க போறீங்க?" என்று நம்மிடம் விசாரிக்கிறார். 


நாம் "இன்ன இடம் என்று குறிப்பாக இல்லீங்க...சும்மா இப்படியே போய்க் கொண்டிருக்கிறேன்.." என்கிறோம். நமக்கே அந்தப் பதில் ஒரு மாதிரியாக இருக்கிறது. 


அவர்: "என்னங்க இப்படிச் சொல்றீங்க...போகிற இடம் எதுவென்று தெரியாமல் கால் போன போக்கிலே போனால் என்னங்க அர்த்தம்"


நாம்: அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. இந்தச் சாலையில் நல்ல நல்ல உணவு விடுதிகள் இருக்கின்றன, சினிமா கொட்டகைகள் இருக்கின்றன, ஐஸ் கிரீம், இன்னிப்பு வகையாறக்கள் நிறைய கிடைக்கும். அங்கங்கே தெருவோரம் வடை, பஜ்ஜி எல்லாம் சுடச் சுட தருவார்கள். இந்த சாலைக்கு என்ன குறை...இதில் போனால் என்ன ...என்று கேட்கிறோம். 


அவர்: சரிங்க...போற இடமும் தெரியாது, போற வழியும் சரியில்ல...இத்தனையும் சாப்பிட்டால் உடம்பு என்ன ஆகும்?  அது மட்டும் அல்ல, இந்த சாலையில் பிக் பாக்கெட் அடிப்பவர்கள், ப்ளேடு போடுபவர்கள், அந்த மாதிரி பெண்கள் எல்லாம் இருப்பாங்க...இது சரியான வழி இல்லை...நான் உங்களுக்கு போகும் இடமும் நல்ல வழியும் சொல்லியும் தருகிறேன் என்கிறார். 


நாம்: ஐயா, நல்ல வேளை சரியான சமயத்தில் வந்து எனக்கு நல்ல ஒரு வழியை காட்டினீங்க...ஆமா நீங்க யாரு ?


அவர்: நானா, இந்த ஊர் தான்...எனக்கு எல்லா வழியும் தெரியும்...


அதிசயமாக இல்லை?  கால் போன பாதையில், குறி ஒன்றும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்த நம்மை தடுத்து, போகும் இடம் காட்டி, போகும் வழியும் காட்டும் ஒருவர் வந்தால் அது எப்படி இருக்கும்?


பாடல் 


இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப்

பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை

தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ

அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!


பொருள் 


இருள் திணிந்து = அறியாமை என்ற இருள் நிறைந்து 


எழுந்திட்டது = புறப்பட்டது 


ஓர் வல்வினைச் = வஞ்சனையை செய்யும் வினைகள் 


சிறு குடில், இது: = வாழும் ஒரு சிறு குடில் இது (இந்த உடல்) 


இத்தைப் = இதைப் போய் 


பொருள் எனக் களித்து = ஏதோ பெரிய விஷயம் என்று கருதி 


அரு = கொடுமையான 


நரகத்திடை = நரகத்தில் போய் 


விழப் புகுகின்றேனை = விழ இருந்த என்னை 


தெருளும் = தெளிவாகத் தெரியும் 


மும்மதில் =  = மூன்று சுவர்களைக் கொண்ட அந்த அரக்கர்களின் உலகத்தை 


நொடி வரை = ஒரு நொடியில் 


 இடிதர = இடித்துச் தள்ளி 


சினப் பதத்தொடு = சினம் கொண்டு 


செம் தீ = நெற்றிக் கண் அனலை 


அருளும் = அருள் செய்யும் 


மெய்ந்நெறி = மெய்யே வடிவாகக் கொண்ட ஈசன் 


பொய்ந்நெறி நீக்கிய = என்னுடைய பொய்யான வாழ்க்கை முறைகளை நீக்கிய 


அதிசயம் கண்டாமே! 


அவன் தான் வழி. அவன் தான் இலக்கு.


அதிசயப் பத்து நிறைவு பெற்றது.



Monday, May 5, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்

 திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்


 


ஒரு குழந்தை வீட்டில் உள்ள ஏதோ ஒரு விலை உயர்ந்த பொருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். "...குடுத்திருமா...நல்ல பிள்ளையில்ல .." என்று கெஞ்சி கேட்டாலும் "மாட்டேன் போ..இது என்னுது" என்று அடம் பிடிக்கும். அடித்தும் வாங்க முடியாது. 


என்ன செய்யலாம். கீழே போட்டு உடைத்து விட்டால் பெரிய நட்டம். 


அந்தக் குழந்தையிடம் "...இந்தா உனக்கு பிடிச்ச சாக்கேலேட் .." என்று ஒரு இனிப்பைக் கொடுத்தால் அது அந்த விலை உயர்ந்த பொருளை கீழே போட்டு விட்டு சாக்கலேட்டைப் பற்றிக் கொள்ளும். 


அதற்கு அந்தப் பொருளின் விலை தெரியாது. மதிப்புத் தெரியாது. 


அது போல

நாமும் இந்த வாழ்வில், பெரிய பெரிய விடயங்களை விட்டு விட்டு நமது சாக்கலேட்டின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். 


கணவன்,மனைவி, பிள்ளைகள், பணம், அதிகாரம், செல்வாக்கு, புகழ், வீடு, வாசல், வங்கிக் கணக்கு, பட்டம், பதவி, ஜாதி, மதம், என்று எத்தனையோ சாக்கேலேட்டுகள். 


சாக்கேலேட்டு இனிப்பாக இருக்கும். சுவையாக இருக்கும். யார் இல்லை என்று சொன்னது. எனவே அதை பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டால் வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பில் அதிலேயே ஆழ்ந்து விடுகிறோம். சிற்சில சமயம் மற்ற நினைப்பு வந்தாலும், மனம் மீண்டும் சாக்கலேட்டின் பின்னே போய் விடுகிறது. 


மணிவாசகர் சொல்கிறார், 


"இந்த உறவுகள், பொருள்கள் எல்லாம் அனுபவிக்கவே இருக்கின்றன. மகிழ்ச்சியாக அனுபவிப்போம் என்று பல பித்தர்கள் சொன்னதைக் கேட்டு நானும் அவற்றின் பின்னால் போனேன். இறைவா, பூவின் நறுமணம் வருகிறது என்றால், பூ எங்கோ இருக்கிறது என்று தானே அர்த்தம். அந்தப் பூவை தேடிக் கண்டு பிடித்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும். அதை விட்டு விட்டு எங்கெங்கோ 


அது ஒரு புறம் இருக்கட்டும்....


தெருவில் நடந்து போகிறோம். ஏதோ ஒரு கடையில் வடை சுடும் வாசம் மூக்கைத் துளைக்கிறது. அடடா, சூடா ஒரு வடை சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று அந்த வாசம் வரும் உணவு விடுதி நோக்கிப் போகிறோம். 


விடுதிக்குப் போய் விடுகிறோம். அங்குள்ள உணவு பரிமாறுபவரிடம், "ஒரு plate வடை" என்று ஆர்டர் செய்கிறோம். வடை வந்து விடுகிறது. நல்ல மொரு மொரு என்று இருக்கிறது. எண்ணெய் லேசாக மின்னுகிறது. ஆவி பறக்கிறது. 


"இறைவா, உன் கருணை, மலரின் வாசம் போல் எங்கும் விரிந்து கிடக்கிறது. அந்த வாசனையை பற்றிக் கொண்டே போனால், மலரைக் காணலாம். அது போல் உன் கருணையை பற்றிக் கொண்டே போனால், உன்னைக் கண்டு விடலாம். அதை விட்டு விட்டு, இந்த உலக இன்பங்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என்னையும் தடுத்தாட்கொண்டு, உன் அடியவர்களில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது " என்று வியக்கிறார் அடிகளார். 



பாடல் 


உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல்,

பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே,

பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே,

அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள் 



உற்ற ஆக்கையின் = கிடைத்த இந்த உடம்பின் 


உறு பொருள் = பெரி பொருள், அர்த்தம் 


நறு மலர் = வாசமிகு மலர் 


எழுதரு நாற்றம் போல் = எழுந்து வரும் வாசம் போல 


பற்றல் ஆவது = பற்றிக் கொள்ளக் கூடியது 


ஓர் நிலை  இலாப் = என்று ஒரு நிலை இல்லாத 


 பரம் பொருள்: = உயர்ந்த பொருள் (இறைவன்) 


அப் பொருள் பாராதே = அதைக் கவனிக்காமல் 


பெற்றவா = இந்த உடம்பை பெற்று 


 பெற்ற பயன் = பெற்றதின் பயன் புலன் இன்பங்களை அனுபவிப்பது தான் என்று 


அது நுகர்ந்திடும் = அவற்றை அனுபவிக்கும் 


பித்தர் சொல் = பித்தர்களின் சொல்லைக் கேட்டு 


தெளியாமே, = அறிவு தெளிவு அடையாமல் 


அத்தன் = தலைவன் 


 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரில் = தன்னுடைய அடியவர் கூட்டத்தில் 


 கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே! = அதிசயத்தை என்னவென்று சொல்லுவேன் 


மிகவும் சிக்கலான பாடல். வேறு பொருளும் இருக்கலாம். தேடணும்.


Thursday, April 24, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து

 திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து 


https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_24.html



நம்மை இந்தப் பிறவியில் ஆழ்த்தியது யார் ? 


நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கவாறு நமக்குப் பிறவியை அளிப்பவன் இறைவன். 


இறைவன் நினைத்தால், "சரிப்பா, நாளையில் இருந்து இனி யாருக்கும் ஒரு பிறவியும் கிடையாது. எல்லாருக்கும் முக்தி. இதே வேலையாப் போச்சு உங்களோட. பிறந்து, இறந்து, பாவ புன்னியங்கள் செய்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொண்டு...போதும்...இன்றோடு இனி யாருக்கும் எந்த பிறவியும் கிடையாது" என்று இறைவனால் செய்ய முடியுமா ? முடியாதா? 


முடியும்தானே? அவனால் முடியாதது எது?  பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறான். எதுக்கு இந்த துன்பம்?  


IPL போட்டி நடக்கிறது. எதுக்கு இத்தனை போட்டி, பாயிண்ட் எல்லாம். எல்லாருக்கும் கோப்பை என்று கொடுத்துவிட்டுப் போகலாம்தானே ? ஆளுக்கு ஒரு கோப்பை.  நம்மால் அது முடியுதானே? பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறோம்?  


அது ஒரு லீலை...அனுபவங்கள் ஆன்மாவைப் பக்குவப் படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் ஆன்மா சலிப்பு அடைந்து, போதும், என்று இறைவனை நாடத் தொடங்குகிறது. 


பொம்மைகளை வைத்து விளையாடும் பிள்ளை, சிறிது நேரத்தில் அவற்றை தூக்கிப் போட்டுவிட்டு, அம்மாவைத் தேடுவது போல. அவளைக் காணோம் என்றால் அழத் தொடங்கி விடும். ஏன், பொம்மைதான் இருக்கிறதே. வைத்துக் கொண்டு விளையாட வேண்டியதுதானே என்றால், அதில் சலிப்பு வந்து விடுகிறது. அம்மா வேண்டும். 


அது போல் ஆன்மாக்கள் இறைவனை தேடும் நிலை வரும். அது வரை பொம்மை விளையாட்டுத்தான். 


மணிவாசகர் சொல்கிறார் 


"இறைவா, நீ என்னை முன்னொரு காலம் உன்னை விட்டு நீக்கி, இந்த உலக வாழ்க்கையில் செலுத்தினாய். பின், நீயே எனக்கு மந்திர உபதேசம் செய்து, ஒரு துன்பமும் இல்லாமல் என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டாய். என் முன் வினைகள் என்னைத் தொடரா வண்ணம் பார்த்துக் கொண்டாய். என்னையும் ஆட்கொண்டு, உன் அடியவர்களில் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"



பாடல் 


நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து;

நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து;

தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி

ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!



பொருள் 


நீக்கி = உன்னை விட்டு என்னை நீக்கி, விலகச் செய்து 


முன் எனைத்  = முன்பு என்னை 


தன்னொடு =  தன்னோடு 


நிலாவகை = எப்படி பிறை நிலா சிவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறதோ அது போல 


குரம்பையில் புகப் பெய்து = இந்தப் பிறவி என்ற சுழலில் என்னை விடாமல் அழுத்தி 


நோக்கி = பின் அன்புடன் நோக்கி 


நுண்ணிய = கூர்மையான, நுட்பமான 


நொடியன சொல் = ஒரு நொடியில் சொல்லும் சொல் 


செய்து = எனக்குச் சொல்லி 


நுகம் இன்றி விளாக்கைத்து = நுகம் என்றால் மாட்டுக்குக் கட்டும் நுகந் தடி. அந்த மாதிரி பிணைப்பு எதுவும் இல்லாமல் விவசாயம் செய்வது போல 


தூக்கி = என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டு 


முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து = முன்பு செய்த வினைகள் தூள் தூளாகும் படி செய்து 


எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி = மேல் நோக்கி எழுந்து சுடர் விடும் ஜாதியாக்கி 


ஆண்டு = ஆட்கொண்டு 


தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் சேர்த்துக் கொண்ட அதியசயத்தை கண்டோம். 


ஆன்மாக்கள் இந்தப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. அவற்றின் மேல் கருணை கொண்டு, அவன் அவற்றிற்கு வீடு பேறு தருகிறான். 


நொடியன சொல் என்றால் ஒரு நொடியில் கூறிய சொல். ஏதோ உபதேசம் என்றால் ஒரு நான்கு ஐந்து நாள் சொல்லுவது அல்ல. ஒரே நொடி. அவ்வளவுதான். 


அருணகிரிக்கு முருகன் சொன்னது போல - "சும்மா இரு". அவ்வளவுதான் உபதேசம். 


இங்கே மணிவாசகருக்கு என்ன சொன்னார் என்று சொல்லவில்லை. உரை செய்தவர்கள் "ஓம்" என்று பிரணவத்தை உபதேசம் செய்தார் என்கிறார்கள். 


அதற்குப் பின், நீண்ட நாள் பூஜை, புனஸ்காரம், என்றெல்லாம் இல்லை. வேறு எதுவும் இல்லை. 


"நுகம் இன்றி விளாக்கைத்து"


ஆன்மீக நூல்களின் தளம் வேறு எங்கோ இருக்கிறது. இவற்றின் உட்பொருள் காண்பது என்பது கடினம். முதலில் மேலோட்டமான பொருள் என்ன என்று தெரிந்து கொள்வோம். பின் உட்பொருளை தேட வேண்டும். 


தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். 



Thursday, April 3, 2025

திருவாசகம் - மெய்யெனக் கருதி

திருவாசகம் - மெய்யெனக் கருதி 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_3.html


இன்பம் வேண்டாம் என்று யார் சொல்லுவார்கள். 


இன்பத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சலும். 


இன்பம் எங்கே இருக்கிறது?  


பொருள்களில், அனுபவங்களில் இருப்பதாகத் தோன்றுகிறது. 


அது உண்மையா?


உருசியான உணவு. நெய் மணக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. மருத்துவர் சொன்னது ஞாபகம் வருகிறது. அரிசிச் சோறு சாப்பிட்டால் அது தான் கடைசிச் சாப்பாடு என்று.   கை வைக்க மனம் வருமா? 


அருமையான இருக்கை. மெத் மெத்தென்று இருக்கிறது. சாய்ந்து கொள்ளலாம். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி, அல்லது மூல வியாதி. உட்கார மனம் வருமா? பயம் வரும். 


பொருளில் இல்லை இன்பம். 


அனுபவிக்கும் உடலில் இருக்கிறது. ஒற்றைத் தலை வலி மண்டையைப் பிளக்கும் போது, சுவையான ஐஸ் கிரீம் கொடுத்தால் ருசிக்க மனம் வருமா?


சரி, உடல்தான் ஆதாரம் என்று தெரிகிறது. 


இந்த உடல் எப்படிப்பட்டது?


சொல்லவே வேண்டாம். நீரும் சலமும் ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ஓட்டைப் பாத்திரம். எந்நேரமும் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் இடுகாட்டுக்கு ஒரு அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்கும். 


இந்த உடலுக்கா இந்தப் பாடு?  


வயதானவர்கள், மருத்துவ மனைகளில் இருக்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். மூக்கில், வாயில், கையில், காலில் என்று எங்கு பார்த்தாலும் ஏதேதோ வயர்களை சொருகி இருப்பார்கள். கருவிகளோடு ஒரு கருவியாக கிடப்பார்கள். 


மல சலம் போவது கூடத் தெரியாது. 


ஏதோ இந்த உடல் கால காலமாய் நம்மோடு இருக்கப் போவது போலவும், இருக்கின்ற இன்பங்களை எல்லாம் ஒன்று விடாமல் அனுபவித்து விடலாம் என்றும் மனிதன் கணக்குப் போடுகிறான். 


"இந்த உடலை மெய் எனக் கருதி, துன்பக் கடலில் விழுந்து அழுந்துவேனை ஒளி வீசும் என் தந்தையான சிவன் என்னை ஆட்கொண்டு தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"


பாடல் 




பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை

இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை

முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி

அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே


பொருள் 


பொத்தை = ஓட்டை. ஒன்பது ஓட்டைகள் 


ஊன் = மாமிசம் நிறைந்த 


சுவர் = மாமிசத்தை சுவர் போல் பூசி 


புழுப் = புழுக்கள் 


பொதிந் து = நிறைந்த 


உளுத்த = உறுதியில்லாத 


அசும் பொழுகிய = அசும் என்ற நின நீர் 


பொய்க்கூரை = பொய்யான கூரை 


இத்தை = இந்த உடலை 


மெய்யெனக் கருதி = உண்மையென்று கருதி 


நின்றிடர்க் = நின்று இடர். அதில் நின்று துன்பக் 


கடற் = கடலில் 


சுழித்தலைப்  = சுழலில் 


படுவேனை = மாட்டிக் கொண்டு தவிக்கும் என்னை 


முத்து = முத்து 


மாமணி = பெரி மணி 


மாணிக்க = மாணிக்கம் 


வயிரத்த = வைரம் 


பவளத்தின் = பவளம் 


முழுச்சோதி = இவற்றின் முழு ஒளியை  கொண்ட சோதி வடிவான 


அத்தன்  =என் தந்தை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்த்ஹில் 


கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயங் கண்டாமே = அதிசயத்தைக் கண்டு கொண்டோம் 




Tuesday, March 11, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - குடி கெடுகின்றேன்

 திருவாசகம் - அதிசயப் பத்து - குடி கெடுகின்றேன் 



நாம் ஒரு தவறான காரியத்தைச் செய்கிறோம் என்றால் அது நம்மை மட்டும் பாதிப்பது இல்லை. நம் குடும்பத்தை, பிள்ளைகளை, அவர்களின் பிள்ளைகளை என்று இனி வரும் தலைமுறையையும் சேர்த்துப் பாதிக்கும். 


அது எப்படி?


ஒருவன் நன்றாக உழைக்காமல், ஏதோ வந்தோம் போனோம் என்று வேலை செய்கிறான். ஏதோ சம்பளம் வருகிறது. காலம் ஓடுகிறது.  பிள்ளைகள் சாதாரண பள்ளிகளில் படிக்கிறார்கள்.  உள்ளூரிலேயே ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள். அங்கேயே வேலை கிடைக்கிறது. 


அவனே முயன்று அதிக உழைப்பை தந்திருந்தால், அதிகம் சம்பாதித்து இருக்கலாம். பிள்ளைகளை பெரிய சிறந்த பள்ளிகளுக்கு அனுப்பி இருக்கலாம். மேற் படிப்புக்கு அயல் நாட்டிற்கு அனுப்பி உலகிலேயே சிறந்த கல்லூரிகளில் படிக்க வைத்து இருக்கலாம். 


அவனுடைய முயற்சின்மை அவனை மட்டும் அல்ல, அவன் குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் பாதிக்கிறது அல்லவா. 


அது போல, 


இறை வழியில் செல்லாமல் கண்ட படி சுத்தித் திரிந்தால், கெடுவது அவன் மட்டும் அல்ல, அவன் குலமே கெடும் என்கிறார் மணிவாசகர். 


இறை வழியில் சென்று உண்மையை உணர்ந்து இருந்தால், அதை தன் பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்திருப்பான். அவன் அறியாததால் அவன் பிள்ளைகளும் அறியவில்லை. இப்படி பின் வரும் சந்ததிகள் அந்த அறிவை அடையாமலேயே போய் இருக்கும். 


மணிவாசகர் சொல்கிறார் 


"இறைவனை போற்றும் அடியவர்கள் பால் செல்ல மாட்டேன். பூக்களைத் தூவி இறைவனை வழிபடமாட்டேன். மலர் சூடிய பெண்கள் பின்னால் சென்று என் குடியையே நாசம் செய்வேன். அப்படிப்பட்ட என்னை, இரவில், அனலை கையில் ஏந்தி ஆடும் எம் இறைவன், பொன் போல் மின்னும் ஜடா முடி கொண்டவன்,  என்னை ஆட்கொண்டு, தன் அடியவர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது "


என்று. 


பாடல் 



பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;

குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை

இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற

அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.


பொருள் 


பரவுவார் = இறைவன் புகழை பாடுவார், சொல்லுவார் 


அவர் பாடு = அவர்களிடம் 


சென்று அணைகிலேன் = சென்று அவர்களோடு சேர்ந்து இருக்க மாட்டேன் 


பல் மலர் பறித்து = பல விதமான மலர்களைப் பறித்து 


ஏத்தேன் = உன்னை புகழ மாட்டேன் 


குரவு வார் = குரவு என்ற மலர்களை அணிந்த 


குழலார் = நீண்ட குழல் உடைய பெண்கள் 


திறத்தே நின்று = அவர்கள்பால் சென்று, அவர்களோடு இருந்து 


குடி கெடுகின்றேனை = என் குடியோடு கெடுகின்ற என்னை 


இரவு நின்று = நள்ளிரவில் 


எரி ஆடிய = எரியும் சுடுகாட்டில் திருநடனம் புரியும் 


எம் இறை = என்னுடைய இறைவன் 


எரி சடை மிளிர்கின்ற அரவன் = ஒளி வீசும் சடை முடி உடையவனை, பாம்பை அணிகலனாக அணிந்தவனை  


 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 



தன் அடியரில் கூட்டிய = தன்னுடைய அடியவர்களில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே = அதிசயத்தைக் கண்டேன் 


அடியவர்களோடு சேர்ந்து இருப்பது, மலர் தூவி வழிபடுவது - நல்ல நெறி 


பெண்கள் பின்னால் சுற்றுவது = தீ நெறி 


சரி, அப்படி என்றால் பெண்களுக்கு என்று ஒன்றும் சொல்லவில்லையா? பெண்கள் ஆண்கள் பின்னால் சுற்றலாமா? ஏன் எப்போதும் பெண்களையே பற்றி பேசுகிறார்கள். 


பல காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, பெண் பின்னால் போவது, அல்லது பெண் சுகம் தேடுவது என்பது ஒரு குறியீடு. அதாவது புலன் இன்பங்களின் பால் போகாமல் இருப்பது. 


வேறு ஏதாவது சொல்லலாமே, ஏன் பெண்களை முன்னிறுத்தி சொல்ல வேண்டும்?


சொல்லலாம். ஆனால் அந்த மாதிரி இன்பங்கள் எல்லோருக்கும் ஆசை இருக்குமா என்று தெரியாது. 


உதாரணமாக, "மது அருந்தி கேடு அடையும் என்னை" என்று சொல்லலாம். அப்படிச் சொன்னால், மது அருந்தாத பலர் இருப்பார்கள். அவர்கள் "மாணிக்க வாசகர் சொல்லுவது நம்மை அல்ல" என்று நினைத்துக் கொள்வார்கள். பெரும்பாலானோருக்கு பொதுவான ஒன்று என்றால் அது ஆணுக்கு பெண் மேல் உள்ள ஈர்ப்பும், பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள ஈர்ப்பும். 


உண்பது, உறங்குவது, மது, புகை பிடித்தல் போன்றவை பெரிய அளவில் மாறுபாடு இருக்கும். ஆண் பெண் கவர்ச்சி எல்லோருக்கும் உள்ள ஒன்று. 


சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், ஏன் ஆணுக்கு பெண் மேல் உள்ள கவர்ச்சியை மட்டும் பேச வேண்டும். பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள கவர்ச்சி பற்றி பேசக் கூடாதா?


பேசலாம். 


ஆனால், ஒரு வயதுக்குப் பின், இயற்கையிலேயே பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து போகிறது. வயதான காலத்தில், ஆன்மீகத்தில் ஈடுபடும் நாட்களில், ஆணின் ஈர்ப்பு, பெண்ணை வெகுவாக பாதிப்பது இல்லை. அது இயற்கையிலேயே அமைந்த ஒன்று. ஆணுக்கு அப்படி இல்லை. இனக் கவர்ச்சி என்பது ஆணுக்கு மிக நீண்ட நாட்கள் இருக்கும். எனவே அது ஒரு தடை. எனவே, அது பற்றி வெகுவாக பேசப் படுகிறது. 


நான் தவறாகக் கூட இருக்கலாம்.  ஒரு சிந்தனை என்ற அளவில் அது பற்றி யோசிக்கலாம். சரி தவறு என்று வாதிக்க அல்ல. 


 

Thursday, February 27, 2025

திருவாசகம் - பித்தன்

 திருவாசகம் - பித்தன் 


அதிக பிரசங்கித்தனம் என்று கேட்டு இருக்கீர்களா?  இன்று நான் செய்ய இருப்பதுதான் அது. 


இதை அதிகப் பிரசங்கித்தனம் என்று தள்ளாமல் ஏதோ அறியாப் பிள்ளை உளறுகிறது என்று பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 


ஏன் என்று பின்னால் சொல்கிறேன். 


போகின்ற வழியில் ஒரு நல்ல உயர்தர உணவு விடுதி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பசிக்கிறது. உணவின் வாசம் மூக்கைத் துளைகிறது. நெய் வாசம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் போன்றவற்றின் நறுமணம் உங்களை அழைக்கிறது. விலை ஒன்றும் அதிகம் கிடையாது. தூய்மையான விடுதி. பரிவான சேவை. 


அதில் இருந்து கொஞ்சம் தள்ளி, தெருவோரம் ஈ மொய்க்கும் ஒரு கடை. உணவு வகைகள எல்லாம் திறந்து கிடக்கிறது. ஒரு அழுக்குத் துணியைப் போட்டு மூடி இருக்கிறார்கள். தூசி படிந்த தட்டு, குவளை. பார்த்தாலே குமட்டுகிறது. 


முதலில் உள்ள விடுதியை விட்டு விட்டு இரண்டாவது விடுதியில் போய் யாராவது உண்பார்களா?  அப்படி உண்பவர்களை என்ன என்று சொல்லுவது?  பித்தன், பைத்தியக்காரன்  என்று தானே  சொல்ல முடியும்?


மணிவாசகர் சொல்கிறார், 


"இறைவா, உன் அடியவர்கள் சென்ற பாதையில் சென்று, உன் திருவருளை அடைய முயற்சிக்காமல், இந்த பிறவிக் கடலில் விழுந்து அழுந்தும் என்னை, பாவங்கள் பல செய்து நரகுக்கு போக இருந்த என்னை பித்தன் என்று ஊரார் சொல்லுவது சரிதானே.  இறையருள் அடைய வழி தெரிந்தும் அந்தப் பாதையில்  செல்லாமல்,   இந்த உலக வாழ்வில் கிடந்து உழன்று, பாவங்கள் செய்யும் என்னை பைத்தியம் என்று சொல்லாமல் என்ன என்று சொல்லுவது. அப்படிப் படி நரகில் விழ இருந்த என்னை, எப்படி நீ காப்பாற்றி, அருள் செய்து, ஆண்டுகொண்டாய்...என்ன ஒரு அதிசயம்...பைத்தியத்துக்கு அருள் புரிந்த அதிசயம் " என்று வியக்கிறார். 


பாடல் 


`பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்:

ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,

செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை,

அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள் 


`பித்தன்' என்று, = பித்து பிடித்தவன் என்று 


எனை  = என்னை 


உலகவர் = உலகில் உள்ளவர்கள் 


பகர்வது = சொல்வதற்கு 


ஓர் காரணம் = ஒரு காரணம் இருக்கிறது 


இது கேளீர் = அது என்ன என்று கேளுங்கள் 


ஒத்துச் சென்று = இறைவனின் அடியவர்கள் பாதையில் சென்று 


தன் திருவருள் = அவனுடைய திருவருளை 


கூடிடும் = அடைந்திடும் 


உபாயம் அது அறியாமே = அந்த வழியை அறியாமல் 


செத்துப்போய் = பிறந்து, இறந்து 


 அரு நரகிடை  = கொடுமையான் நரகத்தில் 


வீழ்வதற்கு  = வீழ்வதற்கு 


ஒருப்படுகின்றேனை  = உடன்படும் என்னை 


அத்தன் = என் அத்தன் 


 ஆண்டு = ஆட்கொண்டு 


 தன் அடியரில் = அவனுடைய அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே = அதிசயத்தை நான் கண்டேன் !



இதில் அதிகப் பிரசங்கித்தனம் எங்கே வந்தது?


எனக்கு இதில் கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன என்று தோன்றுகிறது. அதுதான் அதிகப் பிரசங்கித்தனம் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். 


பக்தர்கள் பித்து பிடித்தவர்கள் போல் இருப்பது பெரிய அதிசயம் இல்லை. சாதாரண ஆண் பெண் காதல் கொண்டவர்களே கொஞ்சம் பித்து பிடித்தவர் போல புலம்புவதை கேட்டிருக்கிறோம். இறைவன் மேல் பக்தி என்றால் கேட்க வேண்டுமா? அது அதிசயமா? 


இறைவன் அடியவர்களுக்கு அருள் புரிவதும் அதிசயம் அல்ல. பின் எதைப் பார்த்து மணிவாசகர் அதிசயிக்கிறார்?


"`பித்தன்' என்று, எனை உலகவர்"


என்று இருப்பதை 


`பித்தன்' என்று, உனை உலகவர்"


அதாவது எனை என்பதை உனை என்று மாற்றிப் பொருள் கொண்டால் என்ன? 


அப்படிப் பார்த்தால் அதிசயப்பட நிறைய இடம் இருக்கிறது. 


"சிவ பெருமானை உன்னை பித்தன் என்று உலகோர் சொல்லுவது சரிதான். எவ்வளவோ நல்லவர்கள் இருக்க, ஒன்றும் இல்லாத என்னை ஆட்கொண்டு, உன் அடியவர்களோடு சேர்த்துக் கொண்டாயே, உன்னை பித்தன் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்லுவது"...என்று வியக்கிறார் அடிகளார். 


சிவனுக்கு பித்தன் என்று பெயர் இருக்கிறது. 


"பித்தா பிறை சூடி" என்று சுந்தரரும் பாடி இருக்கிறார். 


"அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச் சித்தனே!

பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே"


என்று மணிவாசகரும் பாடி இருக்கிறார். 


அது மட்டும் அல்ல, 


நமக்கு எல்லாம் எங்கே அவன் அருள் செய்யப்போகிறான் என்று சந்தேகம் கொள்ள வேண்டாம், அவன் கட்டாயம் அருள் செய்வான். ஆள் தராதரம் பார்ப்பது இல்லை அவன். ஏன் என்றால் அவன் ஒரு பித்தன். இப்படியும் ஒரு கடவுள் என்று அதிசயிக்கிறார் அடிகளார். 



Tuesday, February 18, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு

திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு 



பெரும்பாலனோர் நினைப்பது என்னவென்றால், ஏதாவது பாவம் செய்து விட்டால், அதற்கு ஒரு பரிகாரம் செய்து அந்த பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று. 


உதாரணமாக, கோவிலில் காணிக்கை செலுத்துவது, அன்ன தானம் செய்வது, நாலு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நல்ல காரியங்கள் செய்தால் தாங்கள் செய்த பாவம் போய் விடும் என்று நினைக்கிறார்கள். 


அது அப்படி அல்ல. 


பாவக் கணக்கு வேறு, புண்ணியக் கணக்கு வேறு. இரண்டையும் கலக்க முடியாது. 


பாவம் செய்தால் அதற்கு உரிய தண்டனை உண்டு. 


புண்ணியம் செய்தால் அதற்கு ஏற்ற பலன் உண்டு. ஒன்றை ஒன்று சரி செய்ய முடியாது. 


ஒரு கொலை செய்து விட்டு, உண்டியலில் பத்து இலட்சம் போட்டு விட்டால் கொலை பாதகம் போய் விடுமா?


போகாது. 


பாவத்தை அனுபவிக்க பிறக்க வேண்டும். 


புண்ணியத்தை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 


"அறம், பாவம் என்னும் அருங் கையிற்றால் கட்டி"  என்பார் மணிவாசகர். இரண்டும் நம்மை பிறவியோடு சேர்த்துக் கட்டும். ஒன்றை ஒன்று அவிழ்த்து விடாது. 




பின் இந்தப் பிறவிச் சுழலில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது?


ஒரே வழி, இறைவன் நினைத்தால், நம் புண்ணிய பாவங்கள் நம்மைத் தொடர்வதை நிறுத்த முடியும். 


"அவன் தாள் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே"


என்பார் அருணகிரிப் பெருமான். 


இறைவன் திருவருள் இருந்தால் முன்வினைப் பயன் நீங்கும். நாமே ஒன்றும் செய்து கொள்ள முடியாது. 


மணிவாசகர் சொல்கிறார், 


"யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத என் தந்தை, தாய் போன்ற சிவ பெருமான், என் முன்வினைகளை துடைத்து, என்னை ஆண்டுகொண்டு, என்னையும் தன் அடியாரோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன சொல்லுவேன்"


என்று. 


 

பாடல் 


முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை

தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்

பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த

அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


முன்னை  = முன்பு 


என்னுடை = என்னுடைய 


வல்வினை = கொடுமையான வினைபயனை 


போயிட = என்னை விட்டு போயகல 


முக்கண துடையெந்தை = மூன்று கண்களை உடைய என் தந்தை 


தன்னை = அவனை 


யாவரும் = யாராலும் 


அறிவதற் கரியவன் = அறிவதற்கு அரியவன். அறிய முடியாதவன் 


எளியவன் = ஆனால், அவன் எளியவன் 


அடியார்க்குப் = அடியவர்களுக்கு 



பொன்னை  = பொன்னின் நிறத்தை 


வென்றதோர் = வென்றது போன்ற 


புரிசடை =  நீண்ட சடை 


முடிதனில் = முடியில் 


இளமதி யதுவைத்த = பிறைச் சந்திரனை சூடிய 


அன்னை = என் அன்னை போன்றவனை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = அவனுடைய அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் விட்ட 


 அதிசயங் கண்டாமே = அதிசயத்தை கண்டு வியகின்றேன் 


பல பக்திப் பாடல்களில் இறைவனை அம்மையே, அப்பா என்று அழைப்பதை கண்டிருக்கிறோம். 


ஏன் அப்படி?


என் பிறவிக்கு காரணமான தந்தை, தாய் இருக்கிறார்கள். நான் அவர்களோடு என்னை அடையாளம் கொண்டால், அவர்கள் மதம் என் மதம் என்று ஆகும், அவர்கள் ஜாதி என் ஜாதி என்று ஆகும், அவர்கள் நாடு என் தாய் நாடு என்று ஆகும். நான் ஒரு சிறு வலையில் மாட்டிக் கொள்வேன். 


நான் ஒரு இந்து, இந்தியன், இன்ன குலத்தில் பிறந்தவன், இன்ன மொழி எனக்குத் தாய் மொழி என்று ஆகி விடும். அதை விட்டு என்னால் வெளியே வர முடியாது. 


உண்மையைக் கண்டறிய இது ஒரு பெரிய தடை. 


நம் மதம் சொல்வதுதான் நமக்குச் சரி என்று படும்.மற்றவை எல்லாம் தவறென்று படும். 


இறைவன் எனக்குத் தாய், தந்தை என்று கொண்டால், எல்லோரும் சமம். சமயம் இல்லை, ஜாதி இல்லை, இன மொழி வேறுபாடு இல்லை. உண்மையைத் தேடி சுதந்திரமாகச் செல்லலாம். 



Wednesday, February 12, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய

திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய 



எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று எப்படி அறிந்து கொள்வது?  


எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அது சரி என்று சொல்ல கொஞ்சம் பேர், தவறு என்று சொல்ல கொஞ்சம் பேர், அது சரியா தவறா என்று தெரியாமல் குழம்பும் கொஞ்ச பேர். இப்படித்தான் உலகம் இருக்கிறது. 


தவறு என்று ஒரு நீதி மன்றம் சொல்வதை, மேல் நீதி மன்றம் தவறு அல்ல என்கிறது. 


ஒரு நாட்டிற்கு சரி என்பது இன்னொரு நாட்டுக்கு தவறு. 


ஒரு காலத்தில் தவறு என்பது இன்னொரு காலத்தில் சரி. 


மணிவாசகர் சொல்கிறார்


"எது சரி, எது தவறு என்று கூறும் நீதி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அப்படி தெரிந்தவர்களிடமும் சேர மாட்டேன். மனம் போன படி காரியங்கள் செய்து கொண்டு ஏதோ பிறந்து, இறந்து உழன்று கொண்டு இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை, தன் அடியவன் என்று ஏற்றுக் கொண்டு, என்னை ஆண்டு கொண்டு, தன்னுடைய அடியவர்களோடு சேர்த்து வைத்தது எவ்வளவு பெரிய அதிசயம்" 


என்று அதிசயப்படுகிறார். 



பாடல் 


 நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பdவ ரொடுங்கூடேன்

ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை என்னடி யானென்று

பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற

ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


நீதி யாவன யாவையும்  = எது சரி, எது தவறு என்று சொல்லும் அனைத்து நீதிகளையும் 


நினைக்கிலேன் = நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் 


நினைப்பவ ரொடுங் = அது பற்றி சிந்திபவர்களோடும் 

 


கூடேன் = சேர மாட்டேன் 


ஏத மே = ஏதோ கடனே  என்று, ஒன்றும் தெரியாமல்  


பிறந் திறந்துழல் வேன்றனை = பிறந்து இறந்து உழல்வேன் தன்னை 


என்னடி யானென்று = என்னுடைய அடியவன் என்று 


பாதி மாதொடுங் கூடிய = தன் உடம்பில் பாதியை உமாதேவிக்கு கொடுத்த 


பரம்பரன் = மிக உயர்ந்தவன் 


 நிரந்தர மாய்நின்ற = என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் 


ஆதி  = முதல்வன் 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன்னுடைய அடியவர்களோடு 


கூட்டிய = சேர்த்து வைத்த 


அதிசயங் கண்டாமே. = அதிசயத்தைப் பார்த்தோம் 


இறைவனின் அடியவர்களோடு சேர்ந்தால் இறைவன் பற்றிய ஞானம் வரும், இறைவன் மேல் பக்தி வரும். 


நாமும் ஒரு அடியவர்தானே?  நம்மோடு சேர்ந்தால் இறை ஞானம், பக்தி எல்லாம் மற்றவர்களுக்கு வருமா?  


அந்த அளவு ஞானத்தை நாம் தேடி அடைந்து இருக்கிறோமா? நம்மிடம் அவ்வளவு பக்தி இருக்கிறதா? 


ஏன் பிறவி வருகிறது?


சரியானவற்றை செய்யாமல் இருப்பது. 


தவறானவற்றை செய்வது. 


எது சரி, எது தவறு என்று அறியாமல் இருப்பது. 


அறிந்த்வவர்களை அண்டி அந்த அறிவைப் பெறாமல் இருப்பது. 


இவை எல்லாம் இல்லாத எனக்கு அவன் அருள் புரிந்தான் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்கிறார். 


உண்மையில் அவருக்குத் தெரியும். அவர் நம் குற்றங்களை தன் மேல் ஏற்றிக் கூறுகிறார். 


நாம் இறைவனால் ஆட்கொள்ளப் படவேண்டும் என்றால், 


நீதி எது என்று அறிய வேண்டும். 


அறிந்தவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும். 




Monday, February 10, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - மனத்திடை உருகாதே

திருவாசகம் - அதிசயப் பத்து - மனத்திடை உருகாதே



தங்க ஆபரணத்தில் ஒரு வைரக் கல்லை பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


அந்த ஆபரணத்தின் மேல் வைரக் கல்லை வைத்து சுத்தியலால் நாலு போடு போட்டால் ஒட்டுமா? 


அல்லது, ஏதாவது பசை போட்டு ஒட்டி வைக்க முடியுமா?


நூல் ஏதாவது சுத்தி வைக்க முடியுமா?


முடியாது. 


தங்கத்தை உருக்கி, அதை கொஞ்சம் மென்மையாக்கினால் அது நெகிழும், அப்போது அந்த வைரக் கல்லை வைத்து லேசாக அழுத்தினால் அது பதிந்து விடும். ஒரு போதும் விழாது. 


அது போல,


இறைவன் நம் மனதில், நெஞ்சில் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


மனம் உருக வேண்டும். உருகிய மனதில் அவன் திருவடி எளிதில் பதியும். 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக 


என்பார் அருணகிரி. 


"ஊனாய் உருக்கி என் உள் ஒளியாய் நின்றானே"


என்பார் மணிவாசகர்.


மனம் உருகு என்றால் உருகுமா?


அதை எப்படி உருக்குவது?  


நமக்கு இன்பம் வந்த காலத்தில் நம்மோடு கூடி வாழ பலர் இருப்பார்கள். துன்பம் வந்தால், நமது சேமம் (சேமிப்பு) குறைந்தால் யார் நம்மோடு இருப்பார்கள்?  


துன்பம் வந்த காலத்தில் நம்மோடு இருப்பவன் இறைவன். நமக்கு இதுவரை எவ்வளவோ துன்பங்கள் வந்திருக்கும். அவற்றை எல்லாம் தாண்டி எப்படி வந்தோம்?  எல்லாம் நம் சாமர்த்தியமா?  நம் ஏழ்மையை பங்கு போட்டுக் கொள்ள வருபவன் அவன் மட்டும்தான். 


"ஏழை பங்காளனை பாடுதும் காண் அம்மானாய்" என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


"நான் தளர்ந்த போது, நலிந்த போது, துணையின்றி தவிக்கும் போது எனக்கு துணையாய் நின்று என்னை எப்படியெல்லாம் காப்பாற்றினாய். அவற்றை எல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ எல்லா துன்பங்களையும் நானே தனித்து நின்று வென்று விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டும் அல்ல, நீ இவ்வளவு எல்லாம் உதவி செய்திருக்கிறாய். உன்னை நினைக்காமல் இந்த பெண்கள் பின்னால் நான் அலைந்து கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை நீ என்னை ஆண்டு கொண்டு, உன் அடியாரில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்டது பெரிய அதிசயம் தான் "


என்கிறார் வாதவூர் அடிகள் 


பாடல் 



வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று மனத்திடை உருகாதே

செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை

ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்

தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


வைப்பு மாடென்று = மாடு என்றால் செல்வம். வைப்பு மாடு என்றால் சேமித்த செல்வம். வைப்பு நிதி என்பது போல. 


மாணிக்கத் தொளியென்று = மாணிக்கத்தின் ஒளி என்று. 


மனத்திடை = மனதினில் 


உருகாதே = உருகாமல் 


செப்பு = செப்பு சட்டி போல 


 நேர் = உயர்ந்து எழுந்த 


முலை = மார்புகளை உடைய 


மடவர லியர்தங்கள் = இளம் பெண்கள் பின்னால் 


திறத்திடை = அவர்களிடம் சென்று 


நைவேனை = துன்பப்படுவேனை 


ஒப்பி லாதன = உனக்கு ஒப்பு என்று ஒன்றும் இல்லாதவனே 


உவமனி லிறந்தன = உன்னோடு உவமித்து சொல்லும்படி ஒன்றும் இல்லாதவனே 


ஒண்மலர்த் = ஒளி வீசும் மலர் போன்ற 


திருப்பாதத் தப்பன் = திருவடிகளுக்கு சொந்தமான எனது அப்பன் 



 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன்னுடைய அடியவர் கூட்டத்தோடு 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் கொண்டது 


அதிசயங் கண்டாமே = அந்த அதிசயத்தைப் பார்த்தோமே 


இந்த அடியவர்க் கூட்டம், அடியவர் கூட்டம் என்று சொல்கிறார்களே, அப்படி என்ன அதில் பெருமை. அவர்களும் நம்மை போன்றவர்கள்தானே. அடியாரோடு சேர்ந்து கொள்வது என்ன பெரிய விசேடம்?  


இந்தக் கேள்வி ரொம்ப நாள் என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. 


நாம் யாரோடு சேர்கிறோமோ, அவர்களின் குணம், சிந்தனை ஓட்டம், செயல்பாடுகள் நம்மிடம் வரும். 


எளிய உதாரணம் ஒன்று பார்ப்போம். 


நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் யாரோடு அதிகம் பழகுவீர்கள்? உங்களோடு கூட வேலை செய்பவர்களிடம் பழகுவீர்கள். 


உங்களின் சிந்தனை, செயல், நோக்கம், குறிக்கோள் எல்லாம் என்னவாக இருக்கும்?


எப்படி திறமையாக வேலை செய்து நல்ல பேர் எடுப்பது? எப்படி பதவி உயர்வு அடைவது, எப்படி ஐந்து அல்லது பத்து சதவீதம் ஊதிய உயர்வு பெறுவது என்பது பற்றியே இருக்கும். 


நீங்கள், எப்படி தொழில் தொடங்குவது, எப்படி முதலீடு திரட்டுவது, எப்படி அதிக இலாபம் சம்பாதிப்பது என்பது பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டீர்கள். பணம் சம்பாதிக்க வேண்டும், அந்த மாதிரி ஆட்களோடு சேர வேண்டும். பழக வேண்டும். 


ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்றால், அந்தத் துறை சம்பந்தப்பட்ட ஆட்களோடு பழக வேண்டும், பேச வேண்டும். 


அது போல ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டும் என்றால், அந்தத் துறையில் உள்ள அடியவர்களோடு சேர வேண்டும். 


இறைவனை அடைய அது ஒன்றுதான் வழி. இல்லை, நானே கண்டு பிடித்து விடுவேன் என்று சவால் விடலாம். ஒரு வேளை நீங்கள் அதை செய்தும் முடிக்கலாம். சற்று சிரமம். நிறைய மெனக்கெட வேண்டும். மாறாக, அதில் ஏற்கனவே உள்ள பலரிடம் பேசி, பழகி கொண்டிருந்தால், எளிதாக, வேகமாக சென்று அடையலாம். 


இப்படி எல்லாம், எனக்கு வழி அமைத்துத் தந்த இறைவனின் கருணையை நினைத்து அதிசயப் படுகிறார் மணிவாசகர். 




Sunday, February 9, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - முன்னுரை

 திருவாசகம் - அதிசயப் பத்து - முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2025/02/blog-post_9.html


உலகிலேயே பெரிய அதியசம் எது?


நாம் தான். 


நாம் எவ்வளவு பெரிய அதியசயமான ஒரு படைப்பு. 


இந்த பிரபஞ்சம் எவ்வளவு விரிந்தது? எவ்வளவு பெரியது ? நம்மால் அதை கற்பனை கூட பண்ண முடியாது. 


அவ்வளவு பெரிய அண்டப் பெரு வெளியில், ஏதோ ஒரு மூலையில், ஒரு சின்ன நட்சத்திரம் நம் சூரியன். அதைச் சுற்றும் ஒரு சின்ன கோள் நம் பூமி. அதில் உள்ள ஒரு சின்ன இடம் நம் நாடு, பின் நம் ஊர். அங்கு நாம் பிறந்தோம். 


அதுவும் கண், காது, மூக்கு என்று எல்லாம் சரியாக வேலை செய்யும்படி. 


அதுவம் எழுதப் படிக்க தெரிந்த படி.


அதுவும், அமைதியான இந்த நாட்டில். 


அதுவும், தமிழ் அறிவோடு. 


இது நடக்க என்ன சாத்தியக் கூறு இருக்கிறது?  


மிக மிக அபூர்வமான அமைப்பு நாம் பிறந்து வளர்ந்து, இந்த ப்ளாகைப் படிப்பது என்பது. 


இது நடக்காமல் இருக்க கோடிக் கணக்கான வாய்ப்பு இருக்கு. அத்தனையும் புறம் தள்ளி, இதோ நான் எழுதுகிறேன், நீங்கள் படிக்கிறீர்கள். இது அதிசயம் அல்லவா?


மணிவாசகர் அதிசயப் பத்து என்று பத்துப் ஆடல்கள் எழுதி உள்ளார். 


"நான் எல்லாம் என்ன ஒரு ஆளுன்னு, என்னை கண்டு பிடிச்சு எனக்கு அருள் செய்திருக்கிறார் இந்த சிவ பெருமான். இது எவ்வளவு பெரிய அதியசம்" என்று உருகி உருகி பத்துப் பாடல்கள் பாடி உள்ளார். 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகும்படி பாடி இருக்கிறார். 


தினம் ஒன்றாக அந்தப் பாடல்களை சிந்திப்போம். 





Saturday, August 26, 2023

திருவாசகம் - அச்சோ - எங்கே போக வேண்டும்

 திருவாசகம் - அச்சோ - எங்கே போக வேண்டும் 


நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் யாரைப் போய் பார்ப்போம்? மருத்துவரை அணுகுவோம்.


படிக்க வேண்டும் என்றால்? ஆசிரியரை அணுகுவோம். 


இப்படி ஒவ்வொன்றுக்கும் அந்தத் துறையில் திறமை உள்ளவர்களை அணுகுவோம் அல்லவா?


முக்தி அடைய?


முக்தி அடைய யாரை அணுக வேண்டும்?


யாரை அணுக வேண்டும் என்பது கூட இரண்டாவது பட்சம். யாரை அணுகக் கூடாது என்று தெரிய வேண்டும் அல்லவா?  


பல் வலிக்கு கண் மருத்துவரை பார்த்தால் என்ன ஆகும்?


மணிவாசகர் சொல்கிறார் 


"எனக்கு முக்தி அடைய ஆசை. ஆனால், முக்தி அடையும் வழி எது என்றே தெரியாத முட்டாள்களோடு நான் சேர்ந்து திரிந்து கொண்டிருந்தேன். நான் எந்தக் காலத்தில் முக்தி அடைவது? நல்ல வேளை நீ (சிவ பெருமான்) வந்து எனக்கு பக்தி நெறியை காட்டி, என் பழைய வினைகளை அறுத்து, என் புத்தியில் உள்ள குற்றங்களை எல்லாம் போக்கி, என்னையும் உன் போல் ஆக்கினாயே , உன்னைப் போல கருணை செய்யக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள் " 


என்று ஆச்சரியப் படுகிறார். 


நாம என்ன செய்து விட்டோம், இந்த சிவன் நமக்கு இவ்வளவு உதவி செய்கிறானே என்று ஒரு ஆச்சரியம். 


பாடல் 



முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,

பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,

சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_26.html


(please click the above link to continue reading)


முத்தி = முக்தி 

நெறி = வழி. முக்தி அடையும் வழி 


அறியாத = எது என்று அறியாத 


மூர்க்கரொடும் = முரடர்களோடு 


முயல்வேனை = முயற்சி செய்யும் என்னை 


பத்தி நெறி = பக்தி என்ற நெறியைக் 


அறிவித்து = அறியத் தந்து 


பழ வினைகள் = என்னுடைய பழைய வினைகள் யாவும் 


பாறும்வண்ணம் = பாறுதல் என்றால் அழித்தல், சிதற அடித்தல் 


சித்த மலம் அறுவித்து = என் சித்தத்தில் உள்ள மலங்களை (குற்றங்களை) நீக்கி 


சிவம் ஆக்கி =சிவத் தன்மையை தந்து 


எனை ஆண்ட - என்னை ஆட்கொண்ட 


அத்தன் = அத்தன் 


எனக்கு = எனக்கு 


அருளிய ஆறு = அருள் செய்த மாதிரி 


ஆர் பெறுவார்? அச்சோவே! = வேறு யாரு செய்வார்கள், அச்சச்சோ ...


முதலில், முக்தி அடைய வேண்டும் என்றால் அது அடையும் வழி தெரிந்தோரை அணுக வேண்டும். அல்லாமல், அது தெரியாத ஆட்கள் பின்னால் போகக் கூடாது. 


அடுத்து, பக்தி நெறியில் போனால் முக்தி கிடைக்கும். இறைவன் மணிவாசகருக்கு பக்தி நெறியை காட்டினான். சைவ சமயத்தில் மணிவாசகரை ஞான மார்கத்தின் தலைவர் என்று கொண்டாடுவார்கள். ஞானத்தில் பக்தி. 


அடுத்து, பக்தி நெறியில் சென்றால், பழைய வினைகள் அறுபடும். தொடராது. 


அடுத்து, மிக முக்கியமானது, சித்தத்தில் உள்ள குற்றங்கள் (மலம்) தெளிந்தால், சீவன் சிவமாகி விடும். தெளிவித்து என்றார். நீக்கி என்று சொல்லவில்லை. சித்தம் சலனப்பட்டு கிடக்கிறது. அது சலனம் இல்லாமல் இருந்தால், தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவு வந்துவிட்டால், சீவன், சிவமாம் தன்மை பெறும் என்கிறார். 


அடுத்து, அத்தன் எனக்கு அருளியவாறு என்கிறார். நானே படித்துத் தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை. அவன் அருளாலே கிடைத்தது என்கிறார். 


அதாவது, மூடர்கள் தொடர்பை விட்டு, நல்லோர் தொடர்பைப் பற்றி, இறைவனை நாடினால், அவன் பக்தி நெறியில் நம்மை செலுத்தி, நம் பழைய வினைகளை மாற்றி, சித்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சிவமாம் தன்மை தருவான் என்பது தெளிவு. 






Monday, January 23, 2023

திருவாசகம் - திரு அம்மானை - கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்

                

திருவாசகம் - திரு அம்மானை  -   கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் )



கண் பார்க்கிறது. 

பார்க்கிறது என்றால் என்ன?  

வெளியில் இருந்து வரும் ஒளியை கண் உள்ளே செலுத்துகிறது. கண்ணின் பின்னே உள்ள ஒளித் திரையில் அது விழுகிறது. அங்கிருந்து அது மூளைக்கு மின் அலைகள் மூலம் அந்த செய்தியை அனுப்புகிறது. மூளையில் சில வேதியல் நிகழ்வுகள் நிகழ்கின்றன. 


நாம் பார்த்தது இலட்டு என்றோ, நாய் குட்டி என்றோ, அம்மா என்றோ, பேனா என்று அறிந்து கொள்கிறோம். 


இதில், பார்ப்பது யார்?


கண்ணா? விழித் திரையா? மூளையா? 


கண்ணும், மூளையும் எல்லாம் இருந்தாலும், இருட்டில் தெரிவது இல்லை. 


கண்ணில் அடி பட்டால் ஒளி விழுந்தாலும் தெரிவது இல்லை. 


கண் நன்றாக இருந்து மூளையில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் தெரிவது இல்லை. 


எல்லாம் சரியாக இருந்தாலும், மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் கண் முன்னால் இருப்பது கூட தெரிவது இல்லை. 


பார்ப்பது யார்? 


மனமா? புத்தியா? சித்தமா? அகங்காரமா?  


ஒரே பெண்ணைப் பார்த்து ஒருவன் தாய் என்கிறான், அவளையே இன்னொருவன் தாரம் என்கிறான், மற்றொருவன் சகோதரி என்கிறான்...மாற்றுவது எது? 


ஒருவன் காரம் மண்டையை பிளக்கிறது என்கிறான். அதையே இன்னொருவன் உண்டுவிட்டு என்ன இது உப்பு உறைப்பு இல்லாமல் சப் என்று இருக்கிறது என்கிறான். 

எது பொருளின் நிஜமான சுவை?


பொருள்களுக்கு என்று ஒரு குணம் இருக்கிறதா இல்லையா அல்லது பார்பவரைப் பொறுத்து அது மாறுகிறதா? மாறும் என்றால் உலகம் என்பது தனித்து ஒன்று இல்லையா?


பொருள்கள்தான் என்று இல்லை. 


இன்பமும் துன்பமும் தனித்து இருக்கிறதா அல்லது அனுபவிப்பர்களைப் பொறுத்து மாறுமா? 

அப்படி மாறும் என்றால், நம் மனதை மாற்றிவிட்டால் எப்போதும் இன்பமாக இருக்கலாமா?

எப்போதுமே இன்பமாக இருக்க முடியும் என்றால், அதுதான் சொர்கமா?


அது தான் இறை அனுபவமா?


மனிவாசககர் சொல்கிறார் 


"என்னுடைய் உடலாகி, ,உயிர் ஆகி, உணர்வு ஆகி, எனக்குள்ளே கலந்து, தேன் ஆகி, அமுதம் ஆகி, கரும்பின் சுவையாகி, வானவரும் அறியாத வழியில் எமக்கு தந்து அருளும் சிவன் என்னுடைய அறிவாகி, பல உயிர்களுக்கும் தலைவனாக நின்றான். அவனைப் போற்றுவோம்" என்கிறார். 



பாடல் 





ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!


பொருள் 



(pl click the above link to continue reading)


ஊன் ஆய் = உடம்பு ஆகி 


உயிர் ஆய் = உயிர் ஆகி 


உணர்வு ஆய் = உணர்வு ஆகி 


என்னுள் கலந்து = எனக்குள்ளே கலந்து 


தேன் ஆய் = தேன் ஆகி 


அமுதமும் ஆய் = அமுதம் ஆகி 


தீம் கரும்பின் = இனிய கரும்பின் 


கட்டியும் ஆய் = கட்டியாகி (வெல்லக் கட்டி) 


வானோர் அறியா வழி = தேவர்களும் அறியாத வழியை 


எமக்குத் தந்தருளும், = எங்களுக்கு தந்து அருளும் 


தேன் ஆர்  = தேன் சொரியும் 


மலர்க் கொன்றைச் = கொன்றை மலர் சூடிய 


சேவகனார்= வீரம் பொருந்திய 


சீர் ஒளி சேர் = சிறந்த ஒளி பொருந்திய 


ஆனா அறிவு ஆய் = பெரிய அறிவாகி  


அளவு இறந்த = எண்ணில் அடங்காத  



பல் உயிர்க்கும் =  அனைத்து உயிர்களுக்கும் 


கோன் ஆகி நின்றவா = தலைவனாகி நின்றவனின் பெருமைகளை 


கூறுதும் காண்; அம்மானாய்! = பாடிப் புகழ்வோம் அம்மானாய் 






[


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 




 சேர்ந்து அறியாக் கையானை

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


என்வினையை ஓட்டுகந்து



)


Tuesday, January 17, 2023

திருவாசகம் - திரு அம்மானை - மந்தார மாலையே

               

திருவாசகம் - திரு அம்மானை  -   மந்தார மாலையே 




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் )


கோவிலுக்குப் போனால் தேங்காய், பழம் என்று நிவேத்தியம் செய்கிறோம். 

இறைவனுக்கு சந்தனம், பால், பன்னீர் என்று அபிசேகம் செய்கிறோம். 


வீட்டில் விசேடம் என்றால் தீ வளர்த்து அதில் பால், நெய், பட்டு என்று பலவகை பொருள்களைப் போடுகிறோம். எல்லாம் எரிந்து போகிறது. 


ஆற்றில் பிண்டம் கரைக்கிறோம். 


இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? எல்லாம் வீணாகப் போகிறதே?  இங்கே தீயில் போட்டால் அது எங்கோ இருக்கிற கடவுளுக்கு போகுமா? என்னதான் நம்பிக்கை என்றாலும், கொஞ்சமாவது அறிவு சார்ந்து இருக்க வேண்டாமா? 



இப்படிப் பட்ட கேள்விகள் இவற்றை ஆழமாக நம்பும் பக்தர்கள் மனத்திலும் எழும். 


அறிவு கேள்வி கேட்கத்தான் செய்யும்.  வெளியே சொல்லாவிட்டாலும், உள்ளுக்குள் இந்த கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கும். 


இது என்ன முறை? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 


தேவுக்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு இடையறா தொடர்பு இருப்பதாக நம் முன்னவர்கள் நினைத்தார்கள். 


தேவுக்கள் என்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்றால் இயற்கை என்று வைத்துக் கொள்ளலாம். 



மழை, வெயில், காற்று, என்று நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் நமக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 



அது மட்டும் அல்ல, அவற்றை நாம் மதிக்க வேண்டும். இன்று சுற்றுப் புற சூழ்நிலையை மதிக்காமல் நாம் அரக்கத் தனமாக அவற்றை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறோம். 


இயற்கையின் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது. அதைத் தாண்டும் போது அது நம்மை தண்டிக்கிறது. 


பனிப் பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.  நில அதிர்வுகள் தோன்றுகின்றன. மழை பொய்கிறது.  கால நிலை மாறுகிறது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டு இருக்கிறது.  ஒரு பக்கம் வெள்ளம். மறு பக்கம் வறட்சி. நிலம் அழுந்துகிறது. 


காரணம் என்ன?  இயற்கையின் மேல் மதிப்பும், மதிப்பும் மரியாதையும் இல்லை. நான் தான் எல்லாம், எனக்குத் தான் எல்லாம் என்று மனிதன் சுயநலமியாக மாரியதால் வந்த வினை. 


நம் கலாச்சாரம் என்ன சொல்லித் தந்தது?


மழையா - அதைப் போற்றுவோம். வணங்குவோம். மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று மழையை போற்றினார்கள்.



வெயிலா? - சூரியனைப் போற்றுவோம். 



காற்றா ? - வாயு பகவானைப் போற்றுவோம். 



இயற்கையை தெய்வமாக போற்ற கற்றுத் தந்தது நம் மரபு. 


இயற்கை நமக்குத் தருவது எல்லாம் ஒரு வரம். ஒரு அருள். ஒரு கொடை. அதற்கு நாம் காட்டும் நன்றிக் கடன் இந்த பிரசாதங்கள், வேள்வி, அவிர்பாகம் என்பதெல்லாம். 


அவை போகிறதோ இல்லையோ, நம் மனதில் அது ஒரு புனிதமான ஒன்று என்ற எண்ணத்தை இவை தோற்றுவிக்கின்றன. 


தக்கன் ஒரு வேள்வி செய்தான். அதில் சிவனுக்கு தர வேண்டிய அவிர் பாகத்தைத் தர மறுத்தான்.  சிவன் அந்த யாகத்தை அழித்தான் என்பது புராணம். 


இயற்கயை மதிக்காமல், சுயநலமாக காரியங்களை செய்து கொண்டு போனால், அந்த இயற்கையே நம்மை அழிக்கும் என்பது செய்தி. .



பாடல் 



சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்

இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்

தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்

சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த

செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_17.html


(pl click the above link to continue reading)


சந்திரனைத் = சந்திரனை 


தேய்த்தருளித் = தேய்து 


தக்கன்றன் = தக்கன் தன் 


வேள்வியினில் = வேள்வியில் 


இந்திரனைத் = இந்திரனின் 


தோள்நெரித்திட்டு = தோள்களை நெரித்து  


எச்சன் தலையரிந் = எச்சன் என்ற தேவனின் தலையை அரிந்து 


அந்தரமே  = வானத்தில் 


செல்லும்  = செல்லும் 


அலர்கதிரோன் = பல கதிர்களை பரப்பும் சூரியனின் 


 பல்தகர்த்துச் = பற்கள் உதிரும் படி தண்டித்து 


சிந்தித்  திசைதிசையே = திசைகள் தோறும் சிந்தும் படி 


தேவர்களை ஓட்டுகந்த = தேவர்களை ஓட ஓட விரட்டி 


செந்தார்ப் = சிவந்த மாலைகள் போல 


பொழில்புடைசூழ் = சோலைகள் சூழ்ந்த 


தென்னன் பெருந்துறையான் = தென்னவன், திருபெருந்துறையில்  உறைபவன் 


மந்தார மாலையே = அணியும் மந்தார மாலையை 


பாடுதுங்காண் அம்மானாய்.  = பாடுவோம், அம்மானாய் 








[


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Monday, January 9, 2023

திருவாசகம் - திரு அம்மானை - என்வினையை ஓட்டுகந்து

              

திருவாசகம் - திரு அம்மானை  -   என்வினையை ஓட்டுகந்து




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


நேற்று மதியம் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டால் ஞாபகம் இருக்கும். அதற்கு முந்தைய தினம்? போன வாரம், போன மாதம், போன வருடம் ? கட்டாயம் ஞாபகம் இருக்காது. 


நாம் உண்டது, ஒரு சில நாட்களில் மறந்து போகிறது.


அது நல்லதுதான். அது முக்கியமான விடயம் இல்லை என்பதால் நம் மூளை அவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது இல்லை. 


நம் போன பிறப்பு என்ன என்று கேட்டால் ஞாபகம் இருக்குமா?  


மணிவாசகர் சொல்கிறார், "யானையாக, புழுவாக, மனிதராய், தேவராய் மற்றும் வேற பிறவிகளாக பிறந்து இறந்து இருப்பவனை, அவன் என் பிறவித் தொடரை நிறுத்தி, என்னையும் தன் குழுவில் சேர்த்துக் கொண்ட அவன் திருவடிகளை போற்றி பாடுவோம்"




பாடல் 


ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்

ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை

ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து

தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய

கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்

வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_9.html


(pl click the above link to continue reading)


ஆனையாய்க் = உருவத்தில் பெரிய யானையாய் 


கீடமாய் = உருவத்தில் சிறிய புழுவாய் 


மானுடராய்த் = மனிதராய் 


தேவராய் = தேவராய் 


ஏனைப் = மற்ற 


பிறவாய்ப் = பிறவிகளாக 


பிறந்திறந் தெய்த்தேனை = பிறந்து, இறந்து இருப்பவனை 


ஊனையும் = என் ஊனையும் 


நின்றுருக்கி = நின்று உருக்கி 


என்வினையை = என்னுடைய வினைகளை 


ஓட்டுகந்து = உகந்து (உவந்து = விரும்பி) ஓட விட்டு. அதாவது, என் வினைகளை விருப்போடு விலக்கி 


தேனையும் = தேனையும் 


 பாலையுங் = பாலையும் 


கன்னலையும் = கரும்புச் சாரையும் 


ஒத்தினிய = ஒத்து, இனிய 


கோனவன்போல் = அரசன் போல் 


வந்தென்னைத் = வந்து என்னை 


தன் = தன்னுடைய 


தொழும்பிற் = அடியார் கூட்டத்தில் 


கொண்டருளும் = சேர்த்துக் கொண்டு அருளும் 


வானவன் = வானில் உறைபவன் 


பூங்கழலே = பூ போன்ற திருவடிகளை 


பாடுதுங்காண் அம்மானாய்.  = பாடிடுவோம் அம்மானாய் 


"

எழுகடல் மணலை அளவிடி னதிக

     மெனதிடர் பிறவி ...... அவதாரம்"


ஏழு கடலில் உள்ள மணலை கூட எண்ணி விடலாம், அதை விட அதிகம் எனது முற்பிறவிகளின் எண்ணிக்கை என்பார் அருணகிரிநாதர். 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார் மனிவாசகர்.


பிறவிகள் இருக்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை. பிறவிகளின் தொடர்பு புரியவில்லை. 


இன்றைய அறிவியல் பரிணாம வளர்ச்சி பற்றி கூறுகிறது. ஒன்றில் இருந்து ஒன்று வந்தது என்று சொல்கிறது. 


குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்கிறது. 


ஆனால் நம் ஆன்மீகம், மனிதன் குரங்காகவும் ஆகலாம் என்கிறது. நம் அறிவுக்கு அது எட்டவில்லை. 


"ஊனை உருக்கி" என்று பல இடங்களில் மணிவாசகர் சொல்கிறார். 


ஏதோ ஒன்றில் மனம் இலயித்து விட்டால் பசி மறந்து போகும். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தால், எதையாவது சாப்பிடுவோமா என்று தோன்றும். அறிவுப் பசி, ஆன்மத் தேடல் இருந்து விட்டால் பசி தூக்கம் போய் விடும். உடல் தானே இளைக்கும். 


மூன்று வேளையும் மூக்கு பிடிக்க உண்டால் தூக்கம்தான் வரும். 


தேடுவோம். 





முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Tuesday, January 3, 2023

திருவாசகம் - திரு அம்மானை - சேர்ந்து அறியாக் கையானை

             

திருவாசகம் - திரு அம்மானை  -    சேர்ந்து அறியாக் கையானை




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


இறைவனால் எல்லாம் முடியும். ஆனால் அவனுக்கும் ஒன்று தெரியாது. அது, இன்னொருவர் முன்னால் கை கூப்புவது. இறைவன் யார் முன்னால் எதற்காக கை கூப்பப் போகிறான். 


மணிவாசகர் சொல்கிறார் "சேர்ந்தறியா கையானை" என்று. 


இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற கேள்வி அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கிறது. 


அவன் இருக்கிறான், இல்லாமலும் இருக்கிறான். 


உள்ளதில் அன்பு இருந்தால் அவன் இருப்பது தெரியும். அன்பு இல்லாவிட்டால் இறையை உணர முடியாது. 


அன்பே சிவம். 


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே


என்பார் திருமூலர். 


அன்புதான் சிவம். 



பாடல் 


கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட

மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்

செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!


பாடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


(pl click the above link to continue reading)


கைஆர் வளை சிலம்பக் = கைகளில் அணிந்த வளையல்கள் ஒலிக்க 


 காதுஆர் குழை ஆட = காதில் அணிந்த குழை ஆட 


மைஆர் குழல் புரழத் = மை போல் கறுத்த குழல் அலை பாய 



தேன் பாய = அந்தக் குழலில் சூடிய மலர்களில் இருந்து தேன் பாய்ந்து வர 


வண்டு ஒலிப்பச் = அந்தத் தேனை உருசிக்க வண்டுகள் ரீங்காரம் இட்டு வர 


செய்யானை = சிவந்த மேனி கொண்டவனை 


வெண் நீறு அணிந்தானைச் = திரு வெண்நீறு அணிந்தவனை 



சேர்ந்து அறியாக் கையானை  = இரண்டு கைகளை கூப்பி அறியாதவனை 



எங்கும் செறிந்தானை = எங்கும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனை 


அன்பர்க்கு மெய்யானை  = உள்ளதில் அன்பு உள்ளவர்களுக்கு உண்மையானவனை 



அல்லாதார்க்கு அல்லாத வேதியனை = உள்ளதில் அன்பு இல்லாதவர்களுக்கு அவனும் இல்லாமல் இருப்பவனை 


ஐயாறு அமர்ந்தானைப் = திருவையாற்றில் இருப்பவனை 


 பாடுதும் காண் அம்மானை! = பாடுவோம் அம்மானாய் 







முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Thursday, December 22, 2022

திருவாசகம் - திரு அம்மானை - எப்பொருட்கும் தானே ஆய்

             

திருவாசகம் - திரு அம்மானை  -   எப்பொருட்கும் தானே ஆய்



ஆட் கொள்ளுதல், ஆட் கொள்ளுதல் என்று சொல்லுகிறார்களே, ஆட் கொள்ளுதல் என்றால் என்ன?



நாம் பல பிறவிகளில் செய்த வினைகளின் தொகுப்பில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவிக்க இந்தப் பிறவி எடுத்து இருக்கிறோம். அந்த வினைகளை கழிக்கும் போது மேலும் வினை செய்து பழைய வினைகளோடு புதியதும் சேர்ந்து கொண்டால், என்று அதை தீர்ப்பது?


நல்லது செய்தால் புண்ணியம் வரும்.

தீயது செய்தால் பாவம் வரும். 


அந்த பாவ புண்ணியங்களை அனுபவிகக் இன்னொரு பிறவி வேண்டுமே. இது என்று முடியும்?


அவ்வாறு நாம் செய்த வினைகளையும், இப்போது செய்யும் வினைகளின் தொகுதி அனைத்தையும் நீக்கி நமக்கு மேலும் பிறவி வராமல் செய்வதைத் தான் ஆட் கொள்ளுதல் என்கிறார்கள். 


இறைவன் ஒருவனால் தான் அது முடியும். 


இறைவனடி சேர்ந்தால் தான் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை சேர முடியும் என்பது நம் மத நம்பிக்கை. 


"நாம் இறைவனை தேடி அடைவதை விட, இறைவன் நம்மை அடைவது எளிது அல்லவா? தேவர்களும் காண முடியாத அவன், நம் மேல் அருள் கொண்டு இங்கு வந்து நம்மை ஆட் கொண்டு, இனி பிறவி வரமால் காக்கின்றான். அவன் மெய்யான பொருள்களின் தோற்றம் ஆகி, அந்த மெய் பொருள்களில் நிலைத்து நின்று, அவனே அந்த மெய் பொருளாகி, அனைத்து உயிர்களுக்கும் வீடு பேறு சிவனை நாம் பாடுவோம். "


பாடல் 

 


மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும்,
எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து
மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்!



பொருள் 





(pl click the above link to continue reading)




மைப்பொலியும் கண்ணி!  = கண் மையினால் அழகு கொண்ட கண்களை உடைய பெண்ணே 


கேள் = கேள் 

மால், அயனோடு, இந்திரனும், = திருமால், பிரமன், இந்திரன் ஆகியோரும் 


எப் பிறவியும் தேட = பல பிறவி எடுத்து தேடியும் காண முடியாதவன் 


என்னையும் = என்னையும் 

தன் இன் அருளால் = தன்னுடைய அருளால் 


இப் பிறவி ஆட்கொண்டு = இப்பிறவியில் ஆட் கொண்டு 


இனிப் பிறவாமே காத்து = இனி பிறவாமல் காத்து 



மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் = மெய்யான பொருள்களின் தோற்றம் ஆகி 




மெய்யே நிலைபேறு ஆய் = மெய்யான பொருள்களின் இருப்பிடமாகி 



எப்பொருட்கும் தானே ஆய்  = அனைத்துப் பொருள்களும் தானே ஆகி 



யாவைக்கும் வீடு ஆகும் = அனைத்துக்கும் வீடு பேறாக நின்று 



அப்பொருள் ஆம்  = அந்த பொருளாக நின்ற 



நம் சிவனைப் = நம் சிவனை 



பாடுதும் காண் அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Friday, October 28, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அப்பாலைக்கு அப்பாலை

            

திருவாசகம் - திரு அம்மானை  -   அப்பாலைக்கு அப்பாலை 


வாரியார் சுவாமிகளுக்கு ஒரு முறை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காலில் மிக அதிகமான வலி. மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்துவிட்டு, காலை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள். காலை வெட்டி எடுப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்றும் கூறினார்கள். 


அவர் சிந்தித்தார். இருக்கிற காலை வெட்டி எடுக்க இவ்வளவு செலவு ஆகும் என்றால், அதை பெற எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று.


கால் மட்டுமா?  


கால், கை, கண், மூளை, இதயம், நுரையீரல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் நமக்கு இலவசமாக கிடைத்து இருக்கிறது. விலை கொடுத்தா வாங்கினோம்?


சரி இல்லாத காலை வெட்டி எடுக்கும் மருத்துவருக்கு பணம் கொடுப்பது மட்டும் அல்ல, அவருக்கு நன்றியும் சொல்கிறோம். அப்படி என்றால் நமக்கு இவ்வளவு அவயன்களைக் கொடுத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும். 



நினைத்துப் பார்க்கிறார் மணிவாசகர். 


அவர் உள்ளம் உருகுகிறது. 


உடல் மட்டுமா தந்தான் இறைவன்?  அன்பான கணவன்/மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு, சுகமான சூழ்நிலை, ஆரோக்கியம், அறிவு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் இறைவன் அருளி இருக்கிறான். நம் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் இத்தனையும் இறைவன் அருளி இருப்பான் என்று நினைத்து நினைத்து உருகுகிறார். 


இதெல்லாம் இறைவன் அருளியது என்று நினைப்பவர்களுக்கு அந்த நன்றி உணர்வு பெருகும். உள்ளம் உருகும். 

அது ஒரு புறம். 


இன்னொரு புறம், மணிவாசகர் மதுரையை சுற்றி முற்றி பார்க்கிறார். 


சிவன் கோவில், திருவிளையாடல் நடந்த இடங்கள், பக்தர்கள் என்று மதுரையம்பதியே ஏதோ சிவலோகம் போல இருக்கிறது. சிவன் இருக்கும் இடம்தானே சிவ லோகம். சிவனுக்கு மதுரை மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும் போல இருக்கிறது. 


இறைவனின் தன்மையை நினைத்துப் பார்க்கிறார் அவர். எவ்வளவு சிந்தித்தாலும் அவர் சிந்தனைக்கு எட்ட முடியாமல் விரிந்து கொண்டே போகிறது. முடிவு இல்லாமல், விரிந்து கொண்டே போகிறது. 


பாடல் 



செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான்,
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்,
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 





(pl click the above link to continue reading)



செப்பு ஆர் முலை பங்கன் = செம்பால் செய்யப்பட்ட கிண்ணம் போல் தனங்களை உடைய உமா தேவியை உடலின் பாதியாகக் கொண்டவனை 


தென்னன் = தென்னாடு உடையவன் 

பெருந்துறையான், = திருப் பெருந்துறையில் உறைபவன் 


தப்பாமே = தவறாமல் 


தாள் அடைந்தார் = தன்னுடைய திருவடிகளை அடைந்தவர்களின் 


நெஞ்சு உருக்கும்  = மனதை உருக்கும் 


தன்மையினான் = தன்மை உடையவன் 


அப் பாண்டி  நாட்டைச் = பாண்டிய நாட்டை 


சிவலோகம் ஆக்குவித்த = சிவ லோகம் போல செய்த 


அப்பு = நீர், கங்கை 


ஆர் சடை அப்பன் = உடைய சடை முடி உடையவனை 


ஆனந்த= ஆனந்தத்தை அள்ளித் தருகின்ற 


வார் கழலே = சிறந்த திருவடிகளில் 


ஒப்பு ஆக ஒப்புவித்த = தங்களை ஒப்படைத்துக் கொண்ட 


உள்ளத்தார் = உள்ளம் உடையவர்களின் 


உள் இருக்கும் = உள்ளத்தில் இருப்பவனை 


அப்பாலைக்கு அப்பாலை = அனைத்துக்கும் மேலே, வெளியே இருப்பவனை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 


அவன் அறிவுக்கு புலப்படமட்டான். அப்பாலுக்கு அப்பால் போய்க் கொண்டே இருப்பான். ஆனால், அவன் திருவடிகளை சரண் அடைந்தவர்களின் உள்ளத்துக்குள் இருப்பான். 


இறைவனை அறிவால் அறிய முடியாது. அன்பால் அவனே நம் உள்ளத்துக்குள் வந்து இருப்பான். 


அப்படி அவன் உள்ளத்துக்குள் வந்து விட்டால், இருக்கும் இடமே சிவ லோகம். வேறு எங்கும் போக வேண்டாம். 


"உள்ளத்தார் உள் இருக்கும் அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய்"




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி


)


Saturday, October 22, 2022

திருவாசகம் - திரு அம்மானை - கண்ணார் கழல்காட்டி

           

திருவாசகம் - திரு அம்மானை  -   கண்ணார் கழல்காட்டி




விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்



மிக எளிமையான, இனிமையான பாடல். 


"விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை"

வேதியன் என்றால் உயர்ந்தவன்,சிறந்தவன் என்று பொருள். விண்ணில் உள்ள அனைத்து தேவர்களையும் விட உயர்வானவன். 


"மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்"


மாண்பு என்றால் பெருமை, சிறப்பு, மதிப்பு, மரியாதை.  மாண்புமிகு மந்திரி என்று சொல்கிறோம் அல்லவா? சரி, "மன்னவர்க்கு மாண்பு" என்றால் என்ன? அரசர்களுக்கு மதிப்பைத் தருவது எது? அவர்களுடைய கருணை, குடிகள்பால் அவர்கள் கொண்ட அக்கறை, நடுநிலை, குடிகளை பாதுகாத்தல் போன்ற நற்குணங்கள் அவர்களுக்கு சிறப்புத் தரும். அத்தகைய சிறப்பாக இருப்பவன் இறைவன். நற்குணங்களின் உறைவிடம் அவன். 


"தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்"

தண்மை என்றால் குளிர்ச்சி. இனிமையான தமிழை அளித்த சிறந்த பாண்டி நாடு. ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாடு பாண்டிய நாடு. அந்த சங்கத்தில் சிவ பெருமானும், முருகனும் இருந்தார்கள். அவர்கள் இருந்து தமிழ் வளர்த்தார்கள் என்பது புராணம். எனவே "தமிழ் அளிக்கும்" தண்பாண்டி நாட்டை உடையவன். 


"பெண்ணாளும் பாகனைப்"


தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை உருபு என்று ஒன்று உண்டு.....





(pl click the above link to continue reading)



இரண்டு பெயர் பொருள்களை வேற்றுமைப் படுத்துவது வேற்றுமை உருபு. மேலும், அந்த பெயர் பொருகளின் தொடர்பு, செயல்பாடு இவற்றையும் வேற்றுமைப் படுத்தும். 



எப்படி என்று பார்ப்போம். 


மரம் அறுத்தான் என்று சொல்லலாம். அதில் ஒரு வேற்றுமை உருபு தொக்கிக் (மறைந்து) இருக்கிறது. .

மரத்தை அறுத்தான் என்று நாம் உணர்ந்து கொள்கிறோம். இதில் "ஐ" என்பது இரண்டாம் வேற்றுமை உருபு. மரம் என்ற பெயர் சொல்லுக்கும், அறுத்தவன் என்ற பெயர் சொல்லுக்கும் இடையில் உள்ள அறுத்தல் என்ற வினையின் மூலம் வேறுபடுத்திக் காட்டுகிறது. 


"கண் கண்டதே காட்சி என்று இருக்கக் கூடாது. எதையும் தீர விசாரிக்க வேண்டும்"   என்று சொல்லும் போது "கண்ணைக் கண்டதே" என்று சொல்லுவது பொருந்தாது 


"கண்ணால் கண்டதே காட்சி" என்று கூறினால் பொருள் சரியாக இருக்கும். இங்கே "ஆல்" என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. சில சமயம் எந்த வேற்றுமை உருபைப் போடுவது என்ன்று சந்தேகம் வரும், உருபு மாறினால் பொருள் மாறிவிடும். 




இங்கே, "பெண்ணாளும் பாகனை" 


பெண்ணை ஆளும் பாகனை என்று இரண்டாம் வேற்றுமை உருபைப் போட்டால் என்றால் பார்வதியை சிவன் ஆளுகிறான் என்று பொருள் வரும். 



"பெண்ணால் ஆளப்படும் பாகன்" என்று ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைப் போட்டால் பார்வதியால் ஆளப்படும் சிவன் என்ற பொருள் வரும். 



இந்தக் குழப்பம் தான் கவிதையின் உயிர். படிப்பவன் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 


முன்பு ஒரு திருஅம்மானைப் பாடலில் "பண் சுமந்த பாடல்"  என்று வந்தது. 



'பண்' ஐ சுமந்த பாடலா,'பண்'னால் சுமக்கப்பட்ட பாடலா? இரண்டாம் வேற்றுமை உருபா, மூன்றாம் வேற்றுமை உருபா? 




இலக்கணம் அறிந்தால் இலக்கியத்தை மேலும் சுவைக்க முடியும். 



இராகம் தெரிந்தால் பாடலை மேலும் இரசிக்க முடிவது போல 



"பேணு பெருந்துறையிற்" - பேணுதல் என்றால் போற்றுதல், சிறப்பித்தல். 



"தந்தை தாய் பேண்" - ஆத்திசூடி 


பெண் என்ற சொல்லே பேண் என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. பெருமைக்கு உரியவள், போற்றுதலுக்கு உரியவள் என்று அர்த்தம். 



"பேணு பெருந்துறையிற்" - சிறப்புக்கு உரிய திருப் பெருந்துறை என்ற திருத்தலத்தில் 



கண்ணார் கழல்காட்டி = காண்பதற்கு அழகான திருவடிகளை காட்டி 


பக்தி இலக்கியத்தில் எங்கெல்லாம் திருவடி என்று வருகிறதோ அங்கெல்லாம் அது ஞானத்தை குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இரண்டு திருவடிகள் - பர ஞானம், அபர ஞானம் என்ற இரண்டு ஞானங்கள். 


கழல் காட்டி ஆட்கொண்டது எவ்வாறு என்றால் ஞானத்தைத் தந்து ஆட்கொள்வது. 



நாயேனை ஆட்கொண்ட = கீழான என்னை ஆட்கொண்ட 



மணிவாசகர் அடிக்கடி தன்னை நாய் என்று சொல்லிக் கொள்வார். நாய் நன்றியுள்ள, அன்புள்ள பிராணிதானே. அதை ஏன் கீழாகச் சொல்ல வேண்டும்?



நாயிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.  எவ்வளவுதான் அதை சீராட்டி, பாராட்டி வளர்த்தாலும், என்றேனும் ஒரு சந்தர்பம் கிடைத்தால் அது கண்டதையும் தின்றுவிடும். ஒரு தயக்கம் இல்லாமல், அதைத் தின்னும். 


எனக்கு பாலும், சோறும் தருகிறார்களே, இதைப் போய் தின்னலாமா என்று நினைக்காது.   


மனிதரிலும் பலர் அந்த மாதிரித் தான். எவ்வளவு உயர்ந்த நூல்களைப் படித்தாலும், "அதெல்லாம் நடை முறைக்கு சரி வராது "  என்று தள்ளிவிட்டு தகாதன செய்யக் கிளம்பி விடுவார்கள். 


அது நாய்க் குணம். 



அண்ணா மலையானைப் = அண்ணாமலையில் உள்ளவனை 


பாடுதுங்காண் அம்மானாய் = பாடுவோம் அம்மானை 



திருவாசகம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய நூல் அல்ல. 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 


)