கம்ப இராமாயணம் - நனி துடிக்கின்றன
ஒரு நாள் காகம் கரைகிறது. அன்று விருந்தினர் வருகின்றனர்.
மறுபடியும் மற்றொரு நாள் காகம் கரைகிறது, அன்றும் விருந்தினர் வருகின்றனர்.
இப்படி பல தடவை நடந்தால், நமக்கு என்ன தோன்றும்? இந்த காகம் கரைவதற்கும், விருந்தினர் வருவதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று நம் மனம் எண்ணும் அல்லவா?
அது மனித இயற்கை.
கரிய மேகம் சூழ்ந்தால், மழை வரும்.
நம்பிக்கைதான்.
விரக்தியின் எல்லையில் சில சமயம் நம்பிக்கைகள்தான் நமக்கு துணை புரிகின்றன. வாழ்வை மேலும் கொண்டு செல்ல நம்பிக்கைகள் உதவுகின்றன.
நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை கையில் அகப்பட்டால் போல்.
சீதையின் இடது கண் துடிக்கிறது. அப்படி துடித்தால் நல்லது நடக்குமா?
முன்பு இராமன் மிதிலை வந்தபோது இதே மாதிரி துடித்தது. திருமணம் நடந்தது. அதே போல் இப்போதும் துடிக்கிறது. ஏதோ நல்லது நடக்கப் போகிறதோ என்று எண்ணி மகிழ்கிறாள் சீதை.
பாடல்
‘முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,
துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,
இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்
நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்
பொருள்
‘முனியொடு = கௌசிகன் என்ற முனிவனோடு
மிதிலையில் = மிதிலை மாநகரில்
முதல்வன் = இராமன்
முந்து நாள் = முன்பு ஒரு நாள்
துனி அறு = குற்றம் அற்ற
புருவமும் = புருவங்களும்
தோளும் = தோளும்
நாட்டமும் = கண்ணும்
இனியன துடித்தன = இன்பமாகத் துடித்தன
ஈண்டும் = இப்போதும்
ஆண்டு என் = அதே போல்
நனி துடிக்கின்றன = நன்றாக துடிக்கின்றன
ஆய்ந்து நல்குவாய் = காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து சொல்வாய் (திரிசடை) என்கிறாள் சீதாப் பிராட்டி
இதெல்லாம் ஏன் கம்பர் சொல்கிறார். காப்பிய ஓட்டத்திற்கு இது தேவையா? மிகப் பெரிய காப்பியம் செய்து கொண்டு போகும்போது, இது என்ன சின்னப் பிள்ளைத் தனமாக இருக்கிறதே என்று தோன்றும். யார் வாசிக்கப் போகிறார்கள். இந்தப் பாடல்களை எல்லாம் எடுத்து விட்டால், கதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்லும் அல்லவா?
காரணம் இல்லாமல் கம்பர் இதை வைக்கவில்லை.
என்ன காரணமாக இருக்கும்?
No comments:
Post a Comment