Saturday, March 28, 2026

திருக்குறள் - கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்

 திருக்குறள் - கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்


https://interestingtamilpoems.blogspot.com/2026/03/blog-post_28.html


இந்த அதிகாரத்தின் முதல் குறளில், எவ்வளவு பெரிய நன்மை கிடைத்தாலும், அதற்காக இன்னொரு உயிருக்கு கெடுதல் செய்யக் கூடாது என்றார். 


சரி, பலன் வேண்டி இன்னா செய்யாமல் இருக்கலாம். 


நமக்கு ஒருவர் தீங்கு செய்தால்? அதுவும், நாம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாமல் இருந்த போதும், அவர் நமக்கு ஒரு தீங்கு செய்தால், சும்மா இருக்க முடியுமா?  


உடலால் முடிந்தால் செய்வோம். இல்லை என்றால் அவன் நாசமாக போக வேண்டும் என்று மனதிலாவது நினைப்போம் அல்லவா?


வள்ளுவர் கூறுகிறார், நாம் ஒன்றும் செய்யாமல் இருந்த போதும், நமக்கு ஒருவர் தீங்கு செய்தாலும், அவருக்கு பதிலுக்கு ஒரு தீமை செய்யாமல் விடுவதே சிறந்தது என்று. 


பாடல் 


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்


பொருள் 


கறுத்து = நம் மேல் கோபம் கொண்டு, பகை கொண்டு 


இன்னா செய்தவக் கண்ணும்  = நமக்கு துன்பம் செய்தவர்களுக்கும் 


மறுத்து = அதற்கு பதிலாக 


இன்னா செய்யாமை  = அவர்களுக்கு கெடுதல் செய்யாமல் இருப்பது 


மாசற்றார் கோள் = குற்றமற்ற தூயவர்கள் சொல்லும் நெறி 


இது துறவிகளுக்கு சொல்லப்பட்ட குறள்.


இல்லறத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். 


நடைமுறையில் சாத்தியமா?  ஒருவன் நமக்கு துன்பம் செய்தால், அவனுக்கு திருப்பி துன்பம் செய்யாவிட்டால் அவன் நம்மை ஒரு கையால் ஆகாதவன், கோழை என்று எண்ணி மீண்டும் மீண்டும் நமக்கு துன்பம் செய்யமாட்டானா? அவனைப் பார்த்து மற்றவர்களும் நமக்கு துன்பம் செய்யமாட்டார்களா? 


இதை இப்படி யோசித்துப் பார்ப்போம்.


ஒருவன் நமக்கு தீங்கு செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக் தீங்கு தீங்கு செய்கிறோம். அதற்கு அவன் நமக்கு இன்னொரு தீமை செய்கிறான், நாம் அவனுக்கு மேலும் ஒரு தீமை செய்கிறோம்.


இது எங்கே போய் முடியும்?  வெட்டு, குத்து, கொலை, சிறை, தூக்கு என்று போய் நிற்கும். 


இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்டான். அவனுக்கு பதிலுக்கு தீமை செய்திருக்கலாம். "இன்று போய் நாளை வா" என்று கருணை செய்தான் இராமன். அவன் திருந்தவில்லை. மீண்டும் போருக்கு வந்து அடிபட்டு இறந்தான். 


தனக்கு இவ்வளவு துன்பங்களைத் தந்த கைகேயியை மன்னித்தான் இராமன். 


மனைவியின் துகிலை சபையில் உரித்தவனை, பதினமூன்று வருடம் காட்டுக்கு அனுப்பியவனை மன்னித்து, ஐந்து வீடாவது கொடு என்று கேட்டான் தர்மன். 



"துரியோதனன் கொடுமைக்கு அல்ல, உன் அருளுக்கு அஞ்சினேன்" என்றான் பீமன். 


இறுதியில் அழிந்தது யார்? பொறுத்தவர்களா அல்லது தீங்கு செய்தவர்களா?


பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே என்றார் பாரதி. 


தனக்கு பிறர் செய்த துன்பங்களை மனதில் கொள்ளாமல் தாண்டிச் செல்வது ஒரு வழி. 


அதை மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி, புரையோட விடுவது இன்னொரு வழி. 


எது சிறந்த வழி ?




Sunday, March 22, 2026

கம்ப இராமாயணம் - இன்சொலின் திருந்தினாள்

 கம்ப இராமாயணம் - இன்சொலின் திருந்தினாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2026/03/blog-post_22.html



வார்த்தைகள்.!!



வார்த்தைகள் வலிமை மிக்கவை. 


அவை நம் வாழ்க்கையை மட்டும் அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்கள் வாழ்வையும் பாதிக்கும். 


அது நல்லதாகவும் இருக்கலாம். அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம். 


எவ்வளவு பெரிய துன்பத்தில் ஒருவர் இருந்தாலும், ஆறுதலான நாலு வார்த்தை போதும், அவர்கள் துன்பத்தை மாற்ற, அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையை ஊட்ட. 


யோசித்துப் பாருங்கள். 


திருக்குறள், கம்ப இராமாயணம், தேவாரம், பிரபந்தம், விவிலியம் எல்லாம் வார்த்தைகளின் தொகுப்பு. நம் வாழ்க்கைக்கு அவை வழிகாட்டி நிற்கின்றன. நம்மை நல்வழிப் படுத்துகின்றன.


காலம் காலமாய், அணையா விளக்காய், கலங்கரை விளக்காய் நின்று வழி காண்பித்துக் கொண்டிருக்கின்றன.


சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். சுற்றிலும் அரக்கியர்கள்.  பேசக் கூட ஆள் இல்லை. தனிமை. சோகம். பயம். விரக்தி. எதிர்காலம் பற்றிய கேள்விக் குறி. இதற்கு நடுவில் சீதை. 


அந்த அரக்கியர் நடுவில், திரிசடை என்று ஒரு பெண். வீடணனின் மகள். 


அவளை கம்பன் அறிமுகள் செய்கிறான். 


"இன் சொலின் திருந்தினாள்" என்று. 


அவள் இனிய சொற்களை பேசுவது மட்டும் அல்ல, அவற்றையும் திருத்தமாக, தவறின்றி அழகாகப் பேசுவாளாம். 


பாடல் 


இருந்தனள்;திரிசடை என்னும் இன் சொலின்

திருந்தினாள்ஒழிய, மற்று இருந்த தீவினை

அருந் திறல்அரக்கியர், அல்லும் நள் உறப்

பொருந்தலும்,துயில் நறைக் களி பொருந்தினார்.


பொருள் 


இருந்தனள் = அரக்கியர் நடுவில் இருந்தாள். யார்? 


திரிசடை என்னும் = திரிசடை என்ற 


இன் சொலின் திருந்தினாள் = இனிய சொல்லை திருத்தமாகப் பேசும் பெண் 

 


ஒழிய = அவளைத் தவிர்த்து 


 மற்று இருந்த = மற்ற பெண்கள் 


 தீவினை = தீய வினை புரியும் 


அருந் திறல்அரக்கியர் = பெரிய பலம் கொண்ட அரக்கியர் 


அல்லும்  = இரவு 


நள் உறப் பொருந்தலும் = நடு இரவு வந்த நேரத்தில் 


துயில் = தூக்கத்தோடு 


நறைக் களி பொருந்தினார்  = கள் உண்ட மயக்கத்தில் இருந்தார்கள் 


தண்ணி அடிச்சிட்டு மட்டையாகி விட்டார்கள் என்கிறார். 


கோர தோற்றம் கொண்ட அரக்கியர். வலிமையானவர்கள். மது அருந்திவிட்டு , மயங்கிக் கிடக்கிறார்கள். 


அவர்கள் நடுவில் பிராட்டி. 


தூங்காமல் விழித்து இருக்கிறாள். 


அவளோடு கூட திரிசடையும் விழித்து இருக்கிறாள். 


அப்போது சீதை திரிசடையிடம் சொல்லத் தொடங்குகிறாள் 




Friday, March 20, 2026

இன்னா செய்யாமை - சிறப்பு ஈனும் செல்வம்

இன்னா செய்யாமை - சிறப்பு ஈனும் செல்வம் 




நாம் மற்றவர்களுக்கு ஏன் துன்பம் செய்கிறோம் என்பதற்கு பரிமேலழகர் மூன்று காரணங்கள் கூறினார். 


தனக்கு ஒரு நன்மை வரும் என்றால் 
மறந்து போய் 
பிறர் தனக்கு துன்பம் செய்ததை மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு பதிலுக்கு துன்பம் செய்வது 


என்ற மூன்று காரணங்களைச் சொன்னார்.


இதில் முதலில் வரும் நன்மை கருதி பிறருக்கு துன்பம் செய்வதை பற்றி முதலில் கூறுகிறார். 


சின்ன சின்ன இலாபம் வரும் என்றால் அதற்காக மற்றவர்களை துன்பம் செய்யமாட்டோம். 

ஆனால், அதுவே மிகப் பெரிய இலாபம் என்றால்? 

யாருக்கும் சபலம் வரும்.  


"அதெல்லாம் இல்லை...எவ்வளவு இலாபம் என்றாலும் நான் பிறருக்கு துன்பம் செய்ய மாட்டேன்" என்று சிலர் சொல்லலாம். 

எவ்வளவு இலாபம் என்பதில் இருக்கிறது சிக்கல். அது பணமாக, செல்வமாக இருக்க வேண்டும் என்று அல்ல. 

புகழ், பெருமை, உத்தியோக உயர்வு, என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் 

பாடல் 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.


பொருள்

சிறப்புஈனும்  = சிறப்பில் இருந்து வரும் அல்லது விளையும் 

செல்வம் பெறினும் = செல்வத்தைப் பெற்றாலும் 

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 

இன்னா செய்யாமை  = துன்பம் செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள். = குற்றம் அற்றவர்களின் வழி 



செல்வம் பெறினும் என்று சொல்லி இருக்கிறார்...பணத்துக்காக யாராவது மற்றவர்களை துன்பம் செய்வார்களா...நான் செய்ய மாட்டேன் என்று சிலர் சொல்லலாம்.

சிறப்பு, செல்வம் என்பதற்கு பரிமேலழகர் ஒரு தனி விளக்கம் தருகிறார்.  நம்மால் அப்படியெல்லாம் யோசிக்கக் கூட முடியாது. 


சிறப்பு என்றால் யோகம் என்றும் 

அது தரும் செல்வம் என்றால் அணிமா, மகிமா போன்ற வித்தைகள் என்றும் கூறுகிறார். 


அது என்ன அட்டமா சித்திகள் ?


  • அணிமா: அணுவைப் போல் உடலை மிகச் சிறியதாக மாற்றுதல்.
  • மகிமா: மலையைப் போல் உடலைப் பெரிதாக்குதல்.
  • லகிமா (இலகிமா): காற்றைப் போல் உடல் எடையை மிகவும் இலேசாக மாற்றுதல்.
  • கரிமா:
     மலையைப் போல் உடலை மிகவும் கனமாக்குதல்.

யோகத்தை சரிவர செய்தால், இந்த அட்டமா சித்திக்கள் கிடைக்கும் என்கிறார் பரிமேலழகர். 

யோசித்துப் பாருங்கள் - எதையும் அடையலாம், பஞ்ச பூதங்களை வசப்படுத்தலாம், உடலை பெரிதாக ஆக்கலாம், அணுவைப் போல சிறிதாகச் செய்யலாம் என்று பெரிய பெரிய சித்து வேலைகள் எல்லாம் செய்யலாம். 

இவற்றை செல்வம் என்கிறார். 


இந்த செல்வத்தைத் தரும் சிறப்புதான் யோகம். 


சரி, இந்த யோகத்துக்கும், செல்வத்துக்கும், இன்னா செய்யாமைக்கும் என்ன சம்பந்தம் ?


இருக்கிறது. 


யோகம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. 



எனவே,சிலர் என்ன செய்வார்கள் என்றால், உயிர்களை பலி கொடுத்து, பல சிறிய தேவதைகளை திருப்தி செய்து இந்த சக்திகளை பெற்றுக் கொள்வார்கள். 


உயிர்பலி என்றால் நர பலியும் அதில் அடங்கும். 



அப்படி ஒரு சித்தி கிடைக்கும் என்றால் ஒரு கோழியையோ, ஆட்டையோ வெட்டி பலி கொடுத்தால் நமக்கு அந்த சக்தி கிடைக்கும் என்றால் செய்வோமா? மாட்டோமா?  


விசா இல்லாமல் அமெரிக்கா போகலாம், விமான சீட்டு வாங்க வேண்டாம், நினைத்த மாத்திரத்தில் போய் விடலாம்.  மழை வேண்டும் என்றால் பெய்ய வைக்கலாம், வேண்டாம் என்றால் நிறுத்தலாம் ...யோசித்துப் பாருங்கள் எவ்வளவு பெரிய சக்தி என்று. 



வள்ளுவர் கூறுகிறார், அப்படி ஒரு மத்தான சக்தி கிடைக்கும் என்றாள் கூட மாசற்றார் பிற உயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள் என்று. 


ஒரு உயிரை துன்பம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

யார் ?

மாசற்றார்.

மாசற்றார் என்றால் யார்? 


வேத ஆகமங்களை படித்து உணர்ந்தவர்கள்.


சரி, இதெல்லாம் குறளில் இல்லையே, பரிமேலழகர் தன் பாட்டுக்கு உரை எழுதுகிறாரோ என்ற சந்தேகம் வரலாம். 


அறத்துப் பாலை வள்ளுவர், இல்லறம் , துறவறம் என்று இரண்டாகப் பிரித்தார். 


இந்தக் குறள் வருவது துறவறம் என்ற பகுதியில். 


துறவறத்தில் உள்ள ஒருவனுக்கு செல்வம் என்றால் எது?  காசு, பணம், வீடு, வாசல், நகை நட்டு அல்ல. அவனுக்குக் கிடைக்கும் செல்வம் சித்திகள். அந்த சித்தி எப்படி வரும்? அவன் கடைபிடிக்கும் யோகத்தால் வரும். 


எனவே சிறப்பு என்றால் யோகம் என்று, அது ஈனும் செல்வம் என்றால் அட்டமா சித்திகள் என்று கூறினார். 


இன்றைய நிலையை நினைத்துப் பார்ப்போம். 


பாலியல் துன்புறுத்தல்கள், பள்ளி கல்லூரிகளில் ராக்கிங் என்ற பெயரில் துன்பம் செய்வது, கொலை, வெட்டு, குத்து, பெட்ரோல் கிடைக்கும் என்றால் ஒரு நாட்டின் மேல் குண்டு வீசி அந்த நாட்டை அழிப்பது...என்று எவ்வளவோ நடக்கிறது. 


பிற உயிர்களை துன்பம் செய்யாமல் இருக்கப் பழக வேண்டும். 


உடல் துன்பம் மட்டும் அல்ல, மனத் துன்பம் கூட இதில் அடங்கும். 


யாருமே மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருக்கும் ஒரு நாட்டை எண்ணிப் பார்போம். எப்படி இருக்கும்?  














Monday, March 9, 2026

இன்னா செய்யாமை - ஒரு முன்னுரை

 இன்னா செய்யாமை - ஒரு முன்னுரை 




இனியது என்பதின் எதிர்மறை இன்னாதது. இன்னா செய்யாமை என்றால் துன்பம் செய்யாமை. பிறருக்கு துன்பம் செய்யாமல் இருத்தல். 


நாம் ஏன் பிறருக்கு துன்பம் செய்கிறோம்?


பிறருக்கு துன்பம் செய்வதில் பெரிதாக விருப்பம் இருப்பது இல்லை. இருந்தும் துன்பம் செய்கிறோம். சில சமயம் தெரிந்து செய்கிறோம். சில சமயம் தெரியாமல் செய்கிறோம். 


முதலாவது, கோபத்தில், நம்மையும் அறியாமல் பிறருக்கு துன்பம் செய்து விடுகிறோம். வார்த்தையால் துன்பம் செய்கிறோம். சில சமயம் உடல் வலிமையால் கை நீட்டியும் விடுகிறோம். இது பெரும்பாலும் நிகழக் கூடிய ஒன்று. கோபம் மிகுந்து, யோசனை அற்றுப் போய், பிறருக்குத் துன்பம் செய்து விடுகிறோம். 


எனவே தான், இந்த இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தை வெகுளாமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து வைத்தார். 


சில சமயம் நமக்கு ஒரு இலாபம், நன்மை வேண்டி பிறருக்கு துன்பம் செய்து விடுவோம். இலஞ்சம் கொடுத்து வேலையை செய்து கொள்வது இந்த வகையில் அடங்கும். என்னிடம் பணம் இருக்கிறது. அதைக் கொடுத்து எனக்கு ஒரு நன்மை செய்து கொள்கிறேன். இதனால் மற்றவர்கள் பாதிக்கப்படலாம். பணம் இல்லாத அவர்களுக்கு அது துன்பம். பணம் இல்லாத ஏழைகள், கோவிலில் நீண்ட நேரம் நின்று துன்பப் படவேண்டும். பணம் இருப்பவர்கள் சிறப்பு வழி வழியாக ஒரு துன்பமும் இல்லாமல் தரிசனம் செய்து கொள்கிறார்கள்.  இது இலாபம் பற்றி செய்யும் துன்பம். 


சில சமயம் மறதியால், பிறருக்கு துன்பம் செய்து விடுவோம். தெரியாமல் நிகழும் செயல்களால் துன்பம் நிகழலாம். கொடுக்க வேண்டிய பணத்தை சரியான நேரத்தில் கொடுக்க மறந்திருப்போம். அது அவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கலாம். வேண்டும் என்று செய்வது அல்ல. மறதியால். 


சில சமயம் பகைமையால் துன்பம் செய்யலாம். முன்பு செய்த தீமையை மனதில் வைத்துக் கொண்டு, சரியான சமயம் பார்த்து, பழி தீர்க்க , மற்றவர்களுக்கு துன்பம் செய்யலாம். 


இவற்றைப் பற்றி எல்லாம் மிக ஆழமாக வள்ளுவர் சிந்தித்து எழுதி இருக்கிறார். 


காலம் இருப்பின் அவற்றை ஒவ்வொன்றாக சிந்திப்போம்.