இன்னா செய்யாமை - சிறப்பு ஈனும் செல்வம்
நாம் மற்றவர்களுக்கு ஏன் துன்பம் செய்கிறோம் என்பதற்கு பரிமேலழகர் மூன்று காரணங்கள் கூறினார்.
தனக்கு ஒரு நன்மை வரும் என்றால்
மறந்து போய்
பிறர் தனக்கு துன்பம் செய்ததை மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு பதிலுக்கு துன்பம் செய்வது
என்ற மூன்று காரணங்களைச் சொன்னார்.
இதில் முதலில் வரும் நன்மை கருதி பிறருக்கு துன்பம் செய்வதை பற்றி முதலில் கூறுகிறார்.
சின்ன சின்ன இலாபம் வரும் என்றால் அதற்காக மற்றவர்களை துன்பம் செய்யமாட்டோம்.
ஆனால், அதுவே மிகப் பெரிய இலாபம் என்றால்?
யாருக்கும் சபலம் வரும்.
"அதெல்லாம் இல்லை...எவ்வளவு இலாபம் என்றாலும் நான் பிறருக்கு துன்பம் செய்ய மாட்டேன்" என்று சிலர் சொல்லலாம்.
எவ்வளவு இலாபம் என்பதில் இருக்கிறது சிக்கல். அது பணமாக, செல்வமாக இருக்க வேண்டும் என்று அல்ல.
புகழ், பெருமை, உத்தியோக உயர்வு, என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
பாடல்
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
பொருள்
சிறப்புஈனும் = சிறப்பில் இருந்து வரும் அல்லது விளையும்
செல்வம் பெறினும் = செல்வத்தைப் பெற்றாலும்
பிறர்க்கு = மற்றவர்களுக்கு
இன்னா செய்யாமை = துன்பம் செய்யாமல் இருப்பது
மாசற்றார் கோள். = குற்றம் அற்றவர்களின் வழி
செல்வம் பெறினும் என்று சொல்லி இருக்கிறார்...பணத்துக்காக யாராவது மற்றவர்களை துன்பம் செய்வார்களா...நான் செய்ய மாட்டேன் என்று சிலர் சொல்லலாம்.
சிறப்பு, செல்வம் என்பதற்கு பரிமேலழகர் ஒரு தனி விளக்கம் தருகிறார். நம்மால் அப்படியெல்லாம் யோசிக்கக் கூட முடியாது.
சிறப்பு என்றால் யோகம் என்றும்
அது தரும் செல்வம் என்றால் அணிமா, மகிமா போன்ற வித்தைகள் என்றும் கூறுகிறார்.
அது என்ன அட்டமா சித்திகள் ?
- அணிமா: அணுவைப் போல் உடலை மிகச் சிறியதாக மாற்றுதல்.
- மகிமா: மலையைப் போல் உடலைப் பெரிதாக்குதல்.
- லகிமா (இலகிமா): காற்றைப் போல் உடல் எடையை மிகவும் இலேசாக மாற்றுதல்.
- கரிமா:மலையைப் போல் உடலை மிகவும் கனமாக்குதல்.
யோகத்தை சரிவர செய்தால், இந்த அட்டமா சித்திக்கள் கிடைக்கும் என்கிறார் பரிமேலழகர்.
யோசித்துப் பாருங்கள் - எதையும் அடையலாம், பஞ்ச பூதங்களை வசப்படுத்தலாம், உடலை பெரிதாக ஆக்கலாம், அணுவைப் போல சிறிதாகச் செய்யலாம் என்று பெரிய பெரிய சித்து வேலைகள் எல்லாம் செய்யலாம்.
இவற்றை செல்வம் என்கிறார்.
இந்த செல்வத்தைத் தரும் சிறப்புதான் யோகம்.
சரி, இந்த யோகத்துக்கும், செல்வத்துக்கும், இன்னா செய்யாமைக்கும் என்ன சம்பந்தம் ?
இருக்கிறது.
யோகம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.
எனவே,சிலர் என்ன செய்வார்கள் என்றால், உயிர்களை பலி கொடுத்து, பல சிறிய தேவதைகளை திருப்தி செய்து இந்த சக்திகளை பெற்றுக் கொள்வார்கள்.
உயிர்பலி என்றால் நர பலியும் அதில் அடங்கும்.
அப்படி ஒரு சித்தி கிடைக்கும் என்றால் ஒரு கோழியையோ, ஆட்டையோ வெட்டி பலி கொடுத்தால் நமக்கு அந்த சக்தி கிடைக்கும் என்றால் செய்வோமா? மாட்டோமா?
விசா இல்லாமல் அமெரிக்கா போகலாம், விமான சீட்டு வாங்க வேண்டாம், நினைத்த மாத்திரத்தில் போய் விடலாம். மழை வேண்டும் என்றால் பெய்ய வைக்கலாம், வேண்டாம் என்றால் நிறுத்தலாம் ...யோசித்துப் பாருங்கள் எவ்வளவு பெரிய சக்தி என்று.
வள்ளுவர் கூறுகிறார், அப்படி ஒரு மத்தான சக்தி கிடைக்கும் என்றாள் கூட மாசற்றார் பிற உயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள் என்று.
ஒரு உயிரை துன்பம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.
யார் ?
மாசற்றார்.
மாசற்றார் என்றால் யார்?
வேத ஆகமங்களை படித்து உணர்ந்தவர்கள்.
சரி, இதெல்லாம் குறளில் இல்லையே, பரிமேலழகர் தன் பாட்டுக்கு உரை எழுதுகிறாரோ என்ற சந்தேகம் வரலாம்.
அறத்துப் பாலை வள்ளுவர், இல்லறம் , துறவறம் என்று இரண்டாகப் பிரித்தார்.
இந்தக் குறள் வருவது துறவறம் என்ற பகுதியில்.
துறவறத்தில் உள்ள ஒருவனுக்கு செல்வம் என்றால் எது? காசு, பணம், வீடு, வாசல், நகை நட்டு அல்ல. அவனுக்குக் கிடைக்கும் செல்வம் சித்திகள். அந்த சித்தி எப்படி வரும்? அவன் கடைபிடிக்கும் யோகத்தால் வரும்.
எனவே சிறப்பு என்றால் யோகம் என்று, அது ஈனும் செல்வம் என்றால் அட்டமா சித்திகள் என்று கூறினார்.
இன்றைய நிலையை நினைத்துப் பார்ப்போம்.
பாலியல் துன்புறுத்தல்கள், பள்ளி கல்லூரிகளில் ராக்கிங் என்ற பெயரில் துன்பம் செய்வது, கொலை, வெட்டு, குத்து, பெட்ரோல் கிடைக்கும் என்றால் ஒரு நாட்டின் மேல் குண்டு வீசி அந்த நாட்டை அழிப்பது...என்று எவ்வளவோ நடக்கிறது.
பிற உயிர்களை துன்பம் செய்யாமல் இருக்கப் பழக வேண்டும்.
உடல் துன்பம் மட்டும் அல்ல, மனத் துன்பம் கூட இதில் அடங்கும்.
யாருமே மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருக்கும் ஒரு நாட்டை எண்ணிப் பார்போம். எப்படி இருக்கும்?
No comments:
Post a Comment