Monday, February 10, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - மனத்திடை உருகாதே

திருவாசகம் - அதிசயப் பத்து - மனத்திடை உருகாதே



தங்க ஆபரணத்தில் ஒரு வைரக் கல்லை பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


அந்த ஆபரணத்தின் மேல் வைரக் கல்லை வைத்து சுத்தியலால் நாலு போடு போட்டால் ஒட்டுமா? 


அல்லது, ஏதாவது பசை போட்டு ஒட்டி வைக்க முடியுமா?


நூல் ஏதாவது சுத்தி வைக்க முடியுமா?


முடியாது. 


தங்கத்தை உருக்கி, அதை கொஞ்சம் மென்மையாக்கினால் அது நெகிழும், அப்போது அந்த வைரக் கல்லை வைத்து லேசாக அழுத்தினால் அது பதிந்து விடும். ஒரு போதும் விழாது. 


அது போல,


இறைவன் நம் மனதில், நெஞ்சில் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


மனம் உருக வேண்டும். உருகிய மனதில் அவன் திருவடி எளிதில் பதியும். 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக 


என்பார் அருணகிரி. 


"ஊனாய் உருக்கி என் உள் ஒளியாய் நின்றானே"


என்பார் மணிவாசகர்.


மனம் உருகு என்றால் உருகுமா?


அதை எப்படி உருக்குவது?  


நமக்கு இன்பம் வந்த காலத்தில் நம்மோடு கூடி வாழ பலர் இருப்பார்கள். துன்பம் வந்தால், நமது சேமம் (சேமிப்பு) குறைந்தால் யார் நம்மோடு இருப்பார்கள்?  


துன்பம் வந்த காலத்தில் நம்மோடு இருப்பவன் இறைவன். நமக்கு இதுவரை எவ்வளவோ துன்பங்கள் வந்திருக்கும். அவற்றை எல்லாம் தாண்டி எப்படி வந்தோம்?  எல்லாம் நம் சாமர்த்தியமா?  நம் ஏழ்மையை பங்கு போட்டுக் கொள்ள வருபவன் அவன் மட்டும்தான். 


"ஏழை பங்காளனை பாடுதும் காண் அம்மானாய்" என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


"நான் தளர்ந்த போது, நலிந்த போது, துணையின்றி தவிக்கும் போது எனக்கு துணையாய் நின்று என்னை எப்படியெல்லாம் காப்பாற்றினாய். அவற்றை எல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ எல்லா துன்பங்களையும் நானே தனித்து நின்று வென்று விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டும் அல்ல, நீ இவ்வளவு எல்லாம் உதவி செய்திருக்கிறாய். உன்னை நினைக்காமல் இந்த பெண்கள் பின்னால் நான் அலைந்து கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை நீ என்னை ஆண்டு கொண்டு, உன் அடியாரில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்டது பெரிய அதிசயம் தான் "


என்கிறார் வாதவூர் அடிகள் 


பாடல் 



வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று மனத்திடை உருகாதே

செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை

ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்

தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


வைப்பு மாடென்று = மாடு என்றால் செல்வம். வைப்பு மாடு என்றால் சேமித்த செல்வம். வைப்பு நிதி என்பது போல. 


மாணிக்கத் தொளியென்று = மாணிக்கத்தின் ஒளி என்று. 


மனத்திடை = மனதினில் 


உருகாதே = உருகாமல் 


செப்பு = செப்பு சட்டி போல 


 நேர் = உயர்ந்து எழுந்த 


முலை = மார்புகளை உடைய 


மடவர லியர்தங்கள் = இளம் பெண்கள் பின்னால் 


திறத்திடை = அவர்களிடம் சென்று 


நைவேனை = துன்பப்படுவேனை 


ஒப்பி லாதன = உனக்கு ஒப்பு என்று ஒன்றும் இல்லாதவனே 


உவமனி லிறந்தன = உன்னோடு உவமித்து சொல்லும்படி ஒன்றும் இல்லாதவனே 


ஒண்மலர்த் = ஒளி வீசும் மலர் போன்ற 


திருப்பாதத் தப்பன் = திருவடிகளுக்கு சொந்தமான எனது அப்பன் 



 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன்னுடைய அடியவர் கூட்டத்தோடு 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் கொண்டது 


அதிசயங் கண்டாமே = அந்த அதிசயத்தைப் பார்த்தோமே 


இந்த அடியவர்க் கூட்டம், அடியவர் கூட்டம் என்று சொல்கிறார்களே, அப்படி என்ன அதில் பெருமை. அவர்களும் நம்மை போன்றவர்கள்தானே. அடியாரோடு சேர்ந்து கொள்வது என்ன பெரிய விசேடம்?  


இந்தக் கேள்வி ரொம்ப நாள் என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. 


நாம் யாரோடு சேர்கிறோமோ, அவர்களின் குணம், சிந்தனை ஓட்டம், செயல்பாடுகள் நம்மிடம் வரும். 


எளிய உதாரணம் ஒன்று பார்ப்போம். 


நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் யாரோடு அதிகம் பழகுவீர்கள்? உங்களோடு கூட வேலை செய்பவர்களிடம் பழகுவீர்கள். 


உங்களின் சிந்தனை, செயல், நோக்கம், குறிக்கோள் எல்லாம் என்னவாக இருக்கும்?


எப்படி திறமையாக வேலை செய்து நல்ல பேர் எடுப்பது? எப்படி பதவி உயர்வு அடைவது, எப்படி ஐந்து அல்லது பத்து சதவீதம் ஊதிய உயர்வு பெறுவது என்பது பற்றியே இருக்கும். 


நீங்கள், எப்படி தொழில் தொடங்குவது, எப்படி முதலீடு திரட்டுவது, எப்படி அதிக இலாபம் சம்பாதிப்பது என்பது பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டீர்கள். பணம் சம்பாதிக்க வேண்டும், அந்த மாதிரி ஆட்களோடு சேர வேண்டும். பழக வேண்டும். 


ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்றால், அந்தத் துறை சம்பந்தப்பட்ட ஆட்களோடு பழக வேண்டும், பேச வேண்டும். 


அது போல ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டும் என்றால், அந்தத் துறையில் உள்ள அடியவர்களோடு சேர வேண்டும். 


இறைவனை அடைய அது ஒன்றுதான் வழி. இல்லை, நானே கண்டு பிடித்து விடுவேன் என்று சவால் விடலாம். ஒரு வேளை நீங்கள் அதை செய்தும் முடிக்கலாம். சற்று சிரமம். நிறைய மெனக்கெட வேண்டும். மாறாக, அதில் ஏற்கனவே உள்ள பலரிடம் பேசி, பழகி கொண்டிருந்தால், எளிதாக, வேகமாக சென்று அடையலாம். 


இப்படி எல்லாம், எனக்கு வழி அமைத்துத் தந்த இறைவனின் கருணையை நினைத்து அதிசயப் படுகிறார் மணிவாசகர். 




1 comment:

  1. இது மாதிரி ஒரு தமிழ் ஆர்வம் உள்ள ஒரு கூட்டத்தில் சேர்ந்தால் நம்ம தமிழ் அறிவும் வளருமேனு தான் சேர்ந்தது. ஆனால் ஒரு disussion நும் நடக்க மாட்டெஙுது.

    ReplyDelete