திருக்குறள் - வாய்மை - உள்ளத்துள் எல்லாம் உளன்
ஏன் வாய்மை பேச வேண்டும்? அதனால் என்ன பயன் ? உண்மை பேசினால் நாலு காசு சம்பாதிக்க முடியுமா? பலன் இல்லாமல் ஒரு காரியத்தை ஏன் செய்ய வேண்டும் ?
என்பன போன்ற கேள்விகள் எழலாம். அவை நியாயமான கேள்விகளும் கூட.
வள்ளுவர் கூறுகிறார்....
"ஒருவன் தன் மனம் அறிய பொய் சொல்லாமல் இருப்பானானால், அவன் இந்த உலகில் எல்லோர் மனத்திலும் இருப்பான்"
என்று.
பாடல்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்
பொருள்
உள்ளத்தால் = மனதினால்
பொய்யாது ஒழுகின் = பொய் சொல்லாமல் வாழ்ந்து வந்தால்
உலகத்தார் = உலகில் உள்ளவர்களின்
உள்ளத்துள் எல்லாம் = எல்லார் உள்ளத்திலும்
உளன் = இருப்பான்.
சில பேர் நல்லவர்களை கேலி செய்வார்கள். "அவன் பாவம் ஒரு அப்பிராணி. ஒண்ணும் தெரியாது. நெளிவு சுளிவு தெரியாது. நாலு காசு பாக்கத் தெரியாத அப்பாவி" என்று அவனைப் பார்த்து பரிதாபப் படுவார்கள்.
பரிமேலழகர் சொல்கிறார் "உலகத்தார்" என்றால் உலகில் உள்ள உயர்ந்தோர் என்று.
அயோக்கியனுக்கு அயோக்கியத்தனம் தான் பிடிக்கும். "அடா, அவன் கில்லாடி, எப்படி காவல் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தப்பிச்சு வந்துட்டான்..." என்று களவாணிப் பயல்களை பெரிதாக பேசுவார்கள். பாராட்டுவார்கள்.
அவர்கள் மனதில் இடம் பிடிப்பது அல்ல நம் வேலை.
ஒரு தவறான வழியில் பணம் சேர்க்கிறான் என்றான் என்றால் அவனை இகழ வேண்டுமே அல்லாமல் "..எப்படி பொருள் சேர்க்கிறான்...நாமும் தான் இருக்கிறோமே நாலு காசுக்குப் பயன் இல்லாமல்" என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
சரி, அது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
பொய்யாது ஒழுகினால் எப்படி நல்லவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்?
ஒருவன் உண்மை மட்டுமே பேசுவது என்று முடிவு செய்து விட்டால், அவனால் ஒரு தவறு கூட செய்ய முடியாது. ஏன் என்றால் செய்த தவறை மறைத்து பொய் சொல்ல முடியாது. உண்மையை ஒப்புக் கொண்டால் மதிப்பு போய் விடும், மரியாதை போய் விடும், தண்டனை வரும், தலை குனிவு வரும்...எனவே உண்மை சொல்வது என்று முடிவு எடுத்து விட்டால் ஒரு தவறும் செய்ய முடியாது. ஒரு தவறும் செய்யாதவனை உலகம் கட்டாயம் போற்றும்.
ஒரே ஒரு நாள் முயன்று பாருங்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று. என்ன வந்தாலும் சரி, உண்மை மட்டும்தான் பேசுவது என்று.
உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போய் விடும்.
தெரியாததை , தெரியாது என்று சொல்லுங்கள்.
செய்யாததை , செய்யவில்லை என்று சொல்லுங்கள்.
மறந்து விட்டால், மறந்து விட்டது என்று சொல்லுங்கள்.
வாழ்க்கை எளிமையாகும். நாம் பொய்களால் வலை பின்னி அதில் நாமே மாட்டிக் கொண்டு தவிக்கிறோம்.
முகமூடிகள் அணிந்து அணிந்து, உண்மையான முகம் எப்படி இருக்கும் என்பதே மறந்து போய் விடுகிறோம்.
No comments:
Post a Comment