திருக்குறள் - பொய்யும் மெய்யும்
சில சமயம் நாம் பொய் சொல்ல வேண்டி வரலாம். பொய் சொல்வது அறம் அல்லாத செயல் அல்லவா? அது பாவம் அல்லவா? பொய் சொல்லலாமா?
எது நடந்தாலும் சரி, உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும் என்று ஒரு விதி வைத்தால் அதை நடைமுறையில் செயல் படுத்த முடியுமா?
சில உதாரணங்கள் பார்ப்போம்....
ஒரு நோயாளி ஏதோ ஒரு தீவிரமான நோயில் அவதிப் படுகிறார். மருத்துவருக்குத் தெரியும் அந்த நோயாளி இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்து விடுவார் என்று. நோயாளி மருத்துவரிடம் "டாக்டர் எனக்கு உடம்புக்கு எப்படி இருக்கிறது" என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
மருத்துவர் என்ன சொல்ல வேண்டும்?
உண்மையைச் சொன்னால் "இன்னும் ஓரிரு மாதங்கள்தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்" என்று சொல்ல வேண்டும்.
மாறாக, "ஒண்ணும் கவலைப் படாதீங்க...எல்லாம் சரியாகிவிடும். மருந்தை மட்டும் வேளா வேளைக்கு சாப்பிடுங்கள். நாளை வந்து பார்க்கிறேன்"
என்று சொல்லிவிட்டுப் போவார்.
மருத்துவர் சொன்னது பொய்யா? அவர் பொய்யரா? அவர் பாவம் செய்து விட்டாரா?
இல்லை.
வள்ளுவர் சொல்கிறார்
"ஒருவற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத பொய்யும், மெய் என்றே கொள்ள வேண்டும்" என்று.
சொன்னது தீங்கு விளைவிக்காது என்றால் அது மெய்.
சொன்னது தீங்கு விளைவிக்கும் என்றால் அது பொய்.
மேலே சொன்ன உதாரணத்தில், அந்த மருத்துவர் இன்னும் இரண்டு மாதம் தான் என்று சொல்லி இருந்தால் அது பொய் என்கிறார் வள்ளுவர்.
பாடல்
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
பொருள்
பொய்ம்மையும் = பொய்யான சொற்களும்
வாய்மை இடத்த = உண்மை என்றே கொள்ளப்படும்
புரைதீர்ந்த = சந்தேகம் இல்லாமல்
நன்மை பயக்கும் எனின் = நன்மையைக் கொடுக்கும் என்றால்.
சில பேர் உண்மை சொல்வதே மற்றவர்களை மாட்டி விடுவதற்காகத்தான். கேட்டால், "நான் உள்ளதைத்தானே சொன்னேன்" என்று நல்லவர்கள் போல் நடிப்பார்கள்.
சொன்னது தீமை தரும் என்றால், அது உண்மை அல்ல என்கிறார் வள்ளுவர்.
புரை தீர்ந்த என்றால் எந்த வித குற்றமும், இல்லாமல். ஒரு சதவீதம் கூட அதில் தீங்கு வரக் கூடாது.
ஒரு அயோக்கியன் ஒரு அபலைப் பெண்ணை துரத்தி வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண் நம் வீட்டில் தஞ்சம் புகுகிறாள். "என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள்" என்று நம்மிடம் கெஞ்சுகிறாள்.
சிறிது நேரம் கழித்து அந்த அயோக்கியன் நம்மிடம் கேட்கிறான் "இங்கே ஒரு பெண் வந்தாளா " என்று. என்ன சொல்ல வேண்டும்? "ஆமாம், இங்கே உள்ளேதான் இருக்கிறாள் " என்றா சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் அது பொய்.
"இல்லையே, அப்படி யாரும் வரலையே" என்று சொல்லி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினால் அது மெய்.
அவ்வளவு தூரம் போவானேன்....
வீட்டில் மனைவி அழகு நிலையம் (beauty parlor ) சென்று கொஞ்சம் தன்னை அழகு படுத்திக் கொண்டு வந்திருப்பாள். நமக்கு ஒன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. இருந்தாலும், "அழகு நிலையத்துக்குப் போயிட்டு வந்தாலே உனக்கு அஞ்சு வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு" என்று ஒரு சொன்னால், அது உள்ளது உள்ளபடி அல்ல என்றாலும், அது வாய்மையே. ஏன் என்றால், அதனால் யாருக்கும் ஒரு தீங்கும் இல்லை.
அதே போல், கணவன் திடீரென்று உடற் பயிற்சி செய்கிறேன், உணவு கட்டுப்பாடு இருக்கிறேன், தொப்பையைக் குறைக்கப் போகிறேன் என்று ஆரம்பிக்கலாம். ஒரு வாரத்தில் ஒரு மாற்றமும் இருக்காது. இருந்தாலும், மனைவி கணவனைப் பார்த்து "நல்லா மெலிஞ்ச மாதிரி இருக்குங்க" என்று சொல்லி வைக்கணும். அதுவும் வாய்மைதான்.
நம்மில் பல பேருக்கு மற்றவர்களை பாராட்டுவது என்பது எளிதாக வருவது இல்லை. "இதெல்லாம் ஒரு பெரிய சாதனையா...இதைப் பாராட்டினால் அது உண்மை இல்லை" என்று நினைக்கலாம்.
அப்படி அல்ல.
யாருக்கும் ஒரு தீங்கும் இல்லை என்றால், பாராட்டுவது உண்மைதான் என்கிறார் வள்ளுவர். பாரட்டுக்குத் தகுதி இல்லாவிட்டாலும், "நல்லா செஞ்சீங்க" என்று சொல்லுவதால் அவர் மகிழ்வார். உங்களை மதிப்பார். எல்லோருக்கும் நல்லது நடக்கும். எனவே அதுவும் உண்மைதான்.
சில பேர் "நான் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவேன். நம்மிடம் ஒரு ஒளிவு மறைவு கிடையாது. உள்ளதை உள்ளபடி சொல்ல எதற்கு தயங்க வேண்டும் " என்று பெருமையாகச் சொல்வார்கள்.
அது தவறு.
உள்ளதை உள்ளபடியே சொல்லுவதன் மூலம் மற்றவர்கள் வருந்துவார்கள் என்றால், அது உண்மை அல்ல. பொய்.
ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment