திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு
பெரும்பாலனோர் நினைப்பது என்னவென்றால், ஏதாவது பாவம் செய்து விட்டால், அதற்கு ஒரு பரிகாரம் செய்து அந்த பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று.
உதாரணமாக, கோவிலில் காணிக்கை செலுத்துவது, அன்ன தானம் செய்வது, நாலு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நல்ல காரியங்கள் செய்தால் தாங்கள் செய்த பாவம் போய் விடும் என்று நினைக்கிறார்கள்.
அது அப்படி அல்ல.
பாவக் கணக்கு வேறு, புண்ணியக் கணக்கு வேறு. இரண்டையும் கலக்க முடியாது.
பாவம் செய்தால் அதற்கு உரிய தண்டனை உண்டு.
புண்ணியம் செய்தால் அதற்கு ஏற்ற பலன் உண்டு. ஒன்றை ஒன்று சரி செய்ய முடியாது.
ஒரு கொலை செய்து விட்டு, உண்டியலில் பத்து இலட்சம் போட்டு விட்டால் கொலை பாதகம் போய் விடுமா?
போகாது.
பாவத்தை அனுபவிக்க பிறக்க வேண்டும்.
புண்ணியத்தை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும்.
"அறம், பாவம் என்னும் அருங் கையிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். இரண்டும் நம்மை பிறவியோடு சேர்த்துக் கட்டும். ஒன்றை ஒன்று அவிழ்த்து விடாது.
பின் இந்தப் பிறவிச் சுழலில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது?
ஒரே வழி, இறைவன் நினைத்தால், நம் புண்ணிய பாவங்கள் நம்மைத் தொடர்வதை நிறுத்த முடியும்.
"அவன் தாள் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே"
என்பார் அருணகிரிப் பெருமான்.
இறைவன் திருவருள் இருந்தால் முன்வினைப் பயன் நீங்கும். நாமே ஒன்றும் செய்து கொள்ள முடியாது.
மணிவாசகர் சொல்கிறார்,
"யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத என் தந்தை, தாய் போன்ற சிவ பெருமான், என் முன்வினைகளை துடைத்து, என்னை ஆண்டுகொண்டு, என்னையும் தன் அடியாரோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன சொல்லுவேன்"
என்று.
பாடல்
முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
பொருள்
முன்னை = முன்பு
என்னுடை = என்னுடைய
வல்வினை = கொடுமையான வினைபயனை
போயிட = என்னை விட்டு போயகல
முக்கண துடையெந்தை = மூன்று கண்களை உடைய என் தந்தை
தன்னை = அவனை
யாவரும் = யாராலும்
அறிவதற் கரியவன் = அறிவதற்கு அரியவன். அறிய முடியாதவன்
எளியவன் = ஆனால், அவன் எளியவன்
அடியார்க்குப் = அடியவர்களுக்கு
பொன்னை = பொன்னின் நிறத்தை
வென்றதோர் = வென்றது போன்ற
புரிசடை = நீண்ட சடை
முடிதனில் = முடியில்
இளமதி யதுவைத்த = பிறைச் சந்திரனை சூடிய
அன்னை = என் அன்னை போன்றவனை
ஆண்டு = என்னை ஆட்கொண்டு
தன் அடியரிற் = அவனுடைய அடியவர் கூட்டத்தில்
கூட்டிய = என்னையும் சேர்த்துக் விட்ட
அதிசயங் கண்டாமே = அதிசயத்தை கண்டு வியகின்றேன்
பல பக்திப் பாடல்களில் இறைவனை அம்மையே, அப்பா என்று அழைப்பதை கண்டிருக்கிறோம்.
ஏன் அப்படி?
என் பிறவிக்கு காரணமான தந்தை, தாய் இருக்கிறார்கள். நான் அவர்களோடு என்னை அடையாளம் கொண்டால், அவர்கள் மதம் என் மதம் என்று ஆகும், அவர்கள் ஜாதி என் ஜாதி என்று ஆகும், அவர்கள் நாடு என் தாய் நாடு என்று ஆகும். நான் ஒரு சிறு வலையில் மாட்டிக் கொள்வேன்.
நான் ஒரு இந்து, இந்தியன், இன்ன குலத்தில் பிறந்தவன், இன்ன மொழி எனக்குத் தாய் மொழி என்று ஆகி விடும். அதை விட்டு என்னால் வெளியே வர முடியாது.
உண்மையைக் கண்டறிய இது ஒரு பெரிய தடை.
நம் மதம் சொல்வதுதான் நமக்குச் சரி என்று படும்.மற்றவை எல்லாம் தவறென்று படும்.
இறைவன் எனக்குத் தாய், தந்தை என்று கொண்டால், எல்லோரும் சமம். சமயம் இல்லை, ஜாதி இல்லை, இன மொழி வேறுபாடு இல்லை. உண்மையைத் தேடி சுதந்திரமாகச் செல்லலாம்.
No comments:
Post a Comment