கந்தரலங்காரம் - வேன்மறவேன்
உடுக்கை ஒலி கேட்டு இருகிறீர்களா? டுண் டுண் டுண் என்று அடிக்கும். அதையே கொஞ்சம் மெல்லமாக, வேகமாக, அழுத்தமாக அடித்தால் அந்த சத்தமே வேறு வேறு விதத்தில் கேட்கும். அந்த சத்தத்தை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அது ஒரு சுடுகாடு. இரவு நேரம். அங்கொன்றும், இங்கொன்றுமாக பிணங்கள் எரித்து கொண்டு இருக்கின்றன. அந்த சிதைகளில் இருந்து நெருப்பு எழுந்து காற்றில் சுழன்று மேலே செல்கிறது. புகை ஒரு பக்கம். அந்த இடு காட்டில் பேய்கள் அங்கும் இங்கும் ஓலமிட்டுக் கொண்டு அலைகின்றன.
அவை உடுக்கு அடிப்பதைப் போல டுண் டூண் டுண் என்று சப்தமிடுகின்றன. எங்கு தெரியுமா சூராதி அசுரர்களை கொன்று புதைத்த சுடுகாட்டில்.
அசுரர்களை யார் கொன்றது? முருகப் பெருமான்.
அந்த முருகப் பெருமானை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் என்கிறார்.
ஒரு போதும் என்றால் ஒரு போதுமா? எப்போதும் எப்படி நினைக்க முடியும்? அந்த ஒரு போதும் என்பதற்கு ஏதாவது வரையறை, விலக்கு இருக்கிறதா?
இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறார் அருணகிரியார்.
இளம் பெண்களோடு சேர்ந்து கலவியில் ஈடுபட்டு, அதில் களைத்து, சோர்ந்து போய் இருக்கும் அந்த நேரத்தில் கூட முருகனை மறக்க மாட்டேன் என்கிறார்.
"கற்கண்டு போன்ற இனிமையான குரல் உடைய மென்மையான பெண்களோடு கலவியில் ஈடுபட்டு, அந்த இன்பக் கள்ளை மொண்டு மொண்டு குடித்து களைத்து, அயர்ந்து போய் இருக்கும் அந்த வேளையிலும், பேய்கள் நடமாடும் சுடுகாட்டில் சூராதி அரக்கர்களை கொன்று புதைத்த முருகனை மறக்க மாட்டேன்" என்கிறார்.
பாடல்
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.
பொருள்
கண்டுண்ட = கற்கண்டை உண்டது போன்ற
சொல்லியர் = இனிய குரலை உடைய
மெல்லியர் = மென்மையான பெண்கள்
காமக் கலவிக் கள்ளை = அவர்களோடு காம கலவியில் ஈடுபட்டு, அந்தக் காமமாகிய கள்ளை
மொண்டுண் டயர்கினும் = மொண்டு உண்டு அயர்ந்து இருக்கும் அந்த நேரத்திலும்
வேன்மற வேன் = வேலை மறவேன்
முது = வயது முதிர்ந்த
கூளித் = ஆண் பேய்
திரள் = கூட்டமாக திரண்டு
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் = என்று சப்தம் இட்டுக் கொண்டு
டெனக் = என்று
கொட்டி யாட = கை கொட்டி ஆட
வெஞ் = கொடுமையனா
சூர்க்கொன்ற = சூரர்களை கொன்ற
ராவுத்தனே = இராவுத்தனே
அடிக்கடி முருகனை ராவுத்தன் என்பார் அருணகிரி.
இராவுத்தன் என்பவன் குதிரை விற்பவன். முருகன் எங்கே குதிரை விற்றான்.
மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான் நரிகளை பரிகளாக்கி (குதிரைகள்) பாண்டிய மன்னனிடம் விற்றான். அப்பா குதிரை வியாபாரி என்பதால் மகனும் இராவுத்தன்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்தப் பாடலுக்கு எனக்கு இன்னொரு விளக்கம் தோன்றுகிறது. சரியா தவறா என்று தெரியவில்லை.
ஒருவன் தன் மனைவியிடம் இல்லற சுகம் அனுபவிக்கிறான். ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருவது ஆண் பெண் இன்பம் என்பது வள்ளுவர் வாக்கு.
அது சிற்றின்பம்.
இந்தச் சிற்றின்பமே இவ்வளவு இன்பமாக இருக்கிறதே, இறைவன் திருவடி என்ற பேரின்பம் எப்படி இருக்கும் என்று அந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறார்.
இன்னொன்று, சிற்றின்பத்தில் மனிதன் தன்னையே மறந்து போகிறான். அந்த நேரத்தில் கூட இறைவனை நினைக்கிறேன் என்கிறார்.
இன்னொன்று, இந்த அழகான பெண்கள், என் இளமை, இந்த இனிமை எல்லாம் சீக்கிரம் தீர்ந்துவிடும். எல்லாம் அழிந்து இடுகாட்டுக்குப் போய் விடும். எது நிரந்தரம்? இறைவன் ஒருவனே நிரந்தரம் என்று அந்த நேரத்திலும் இது எல்லாம் நிரந்தரம் அல்ல என்ற ஞானம் பிறக்கிறது.
மகான்கள் மனதில் என்ன ஓடும் என்று நாம் எப்படி அறிவது?
வெறுமனே சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாம்...
No comments:
Post a Comment