Thursday, February 27, 2025

திருவாசகம் - பித்தன்

 திருவாசகம் - பித்தன் 


அதிக பிரசங்கித்தனம் என்று கேட்டு இருக்கீர்களா?  இன்று நான் செய்ய இருப்பதுதான் அது. 


இதை அதிகப் பிரசங்கித்தனம் என்று தள்ளாமல் ஏதோ அறியாப் பிள்ளை உளறுகிறது என்று பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 


ஏன் என்று பின்னால் சொல்கிறேன். 


போகின்ற வழியில் ஒரு நல்ல உயர்தர உணவு விடுதி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பசிக்கிறது. உணவின் வாசம் மூக்கைத் துளைகிறது. நெய் வாசம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் போன்றவற்றின் நறுமணம் உங்களை அழைக்கிறது. விலை ஒன்றும் அதிகம் கிடையாது. தூய்மையான விடுதி. பரிவான சேவை. 


அதில் இருந்து கொஞ்சம் தள்ளி, தெருவோரம் ஈ மொய்க்கும் ஒரு கடை. உணவு வகைகள எல்லாம் திறந்து கிடக்கிறது. ஒரு அழுக்குத் துணியைப் போட்டு மூடி இருக்கிறார்கள். தூசி படிந்த தட்டு, குவளை. பார்த்தாலே குமட்டுகிறது. 


முதலில் உள்ள விடுதியை விட்டு விட்டு இரண்டாவது விடுதியில் போய் யாராவது உண்பார்களா?  அப்படி உண்பவர்களை என்ன என்று சொல்லுவது?  பித்தன், பைத்தியக்காரன்  என்று தானே  சொல்ல முடியும்?


மணிவாசகர் சொல்கிறார், 


"இறைவா, உன் அடியவர்கள் சென்ற பாதையில் சென்று, உன் திருவருளை அடைய முயற்சிக்காமல், இந்த பிறவிக் கடலில் விழுந்து அழுந்தும் என்னை, பாவங்கள் பல செய்து நரகுக்கு போக இருந்த என்னை பித்தன் என்று ஊரார் சொல்லுவது சரிதானே.  இறையருள் அடைய வழி தெரிந்தும் அந்தப் பாதையில்  செல்லாமல்,   இந்த உலக வாழ்வில் கிடந்து உழன்று, பாவங்கள் செய்யும் என்னை பைத்தியம் என்று சொல்லாமல் என்ன என்று சொல்லுவது. அப்படிப் படி நரகில் விழ இருந்த என்னை, எப்படி நீ காப்பாற்றி, அருள் செய்து, ஆண்டுகொண்டாய்...என்ன ஒரு அதிசயம்...பைத்தியத்துக்கு அருள் புரிந்த அதிசயம் " என்று வியக்கிறார். 


பாடல் 


`பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்:

ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,

செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை,

அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள் 


`பித்தன்' என்று, = பித்து பிடித்தவன் என்று 


எனை  = என்னை 


உலகவர் = உலகில் உள்ளவர்கள் 


பகர்வது = சொல்வதற்கு 


ஓர் காரணம் = ஒரு காரணம் இருக்கிறது 


இது கேளீர் = அது என்ன என்று கேளுங்கள் 


ஒத்துச் சென்று = இறைவனின் அடியவர்கள் பாதையில் சென்று 


தன் திருவருள் = அவனுடைய திருவருளை 


கூடிடும் = அடைந்திடும் 


உபாயம் அது அறியாமே = அந்த வழியை அறியாமல் 


செத்துப்போய் = பிறந்து, இறந்து 


 அரு நரகிடை  = கொடுமையான் நரகத்தில் 


வீழ்வதற்கு  = வீழ்வதற்கு 


ஒருப்படுகின்றேனை  = உடன்படும் என்னை 


அத்தன் = என் அத்தன் 


 ஆண்டு = ஆட்கொண்டு 


 தன் அடியரில் = அவனுடைய அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே = அதிசயத்தை நான் கண்டேன் !



இதில் அதிகப் பிரசங்கித்தனம் எங்கே வந்தது?


எனக்கு இதில் கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன என்று தோன்றுகிறது. அதுதான் அதிகப் பிரசங்கித்தனம் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். 


பக்தர்கள் பித்து பிடித்தவர்கள் போல் இருப்பது பெரிய அதிசயம் இல்லை. சாதாரண ஆண் பெண் காதல் கொண்டவர்களே கொஞ்சம் பித்து பிடித்தவர் போல புலம்புவதை கேட்டிருக்கிறோம். இறைவன் மேல் பக்தி என்றால் கேட்க வேண்டுமா? அது அதிசயமா? 


இறைவன் அடியவர்களுக்கு அருள் புரிவதும் அதிசயம் அல்ல. பின் எதைப் பார்த்து மணிவாசகர் அதிசயிக்கிறார்?


"`பித்தன்' என்று, எனை உலகவர்"


என்று இருப்பதை 


`பித்தன்' என்று, உனை உலகவர்"


அதாவது எனை என்பதை உனை என்று மாற்றிப் பொருள் கொண்டால் என்ன? 


அப்படிப் பார்த்தால் அதிசயப்பட நிறைய இடம் இருக்கிறது. 


"சிவ பெருமானை உன்னை பித்தன் என்று உலகோர் சொல்லுவது சரிதான். எவ்வளவோ நல்லவர்கள் இருக்க, ஒன்றும் இல்லாத என்னை ஆட்கொண்டு, உன் அடியவர்களோடு சேர்த்துக் கொண்டாயே, உன்னை பித்தன் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்லுவது"...என்று வியக்கிறார் அடிகளார். 


சிவனுக்கு பித்தன் என்று பெயர் இருக்கிறது. 


"பித்தா பிறை சூடி" என்று சுந்தரரும் பாடி இருக்கிறார். 


"அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச் சித்தனே!

பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே"


என்று மணிவாசகரும் பாடி இருக்கிறார். 


அது மட்டும் அல்ல, 


நமக்கு எல்லாம் எங்கே அவன் அருள் செய்யப்போகிறான் என்று சந்தேகம் கொள்ள வேண்டாம், அவன் கட்டாயம் அருள் செய்வான். ஆள் தராதரம் பார்ப்பது இல்லை அவன். ஏன் என்றால் அவன் ஒரு பித்தன். இப்படியும் ஒரு கடவுள் என்று அதிசயிக்கிறார் அடிகளார். 



No comments:

Post a Comment