திருக்குறள் - வாய்மை - சுடும் நெஞ்சு
பொய் சொல்லி வாழ்பவர்கள் பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள். செல்வாக்கோடு இருக்கிறார்கள். உண்மை சொல்லி நேர்மையாக வாழ்பவர்கள் அரிச்சந்திரன் மாதிரி துன்பப்படுகிறார்கள். இதுதான் உலக நடைமுறையாக இருக்கிறது.
அப்படி இருக்க உண்மை பேசு, உண்மை பேசு என்று ஏன் சொல்ல வேண்டும். நாமும் பொய் சொல்லி வளமாக வாழ்வதில் என்ன தவறு என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு வள்ளுவர் கூறுகிறார்:
"பொய் என்று ஒருவன் அறிந்தே சொல்லுவானானால், அவன் மனமே தண்டிக்கும்"
பாடல்
தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
பொருள்
தன்னெஞ்சு அறிவது = ஒருவன், தனது மனம் அறிய
பொய்யற்க = பொய் சொல்லாமல் விடுக
பொய்த்தபின் = மாறாக பொய் சொல்வானாயின்
தன்நெஞ்சே = அவனுடைய நெஞ்சமே
தன்னைச் சுடும் = அவனைச் சுடும்
அது எப்படி ஒருவனின் மனம் அவனை சுட முடியும்? சுடுதல் என்பதை துன்பம் என்று வைத்துக் கொண்டாலும், எப்படி ஒருவனின் மனம் அவனுக்குத் துன்பம் தரும்? பொய் சொல்பவர்கள் மனம் எல்லாம் அவர்களை சுடுவது மாதிரி தெரியவில்லையே என்று சந்தேகம் கொண்டால், அதற்கு பரிமேலழகர் விளக்கம் தருகிறார்.
" பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்."
அது பரிமேலழகர் உரை.
அதாவது,
கரி என்றால் சாட்சி.
ஒருவன் தெரிந்தே பொய் சொல்வானானால் அவன் மனமே அந்த செயலுக்கு சாட்சியாய் இருந்து அவனுக்கு துன்பத்தை வருவிக்கும் என்கிறார்.
அவன் மனமே அவனுக்கு துன்பத்தை கொண்டு வரும் என்கிறார்.
ஒருவன் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். தன் மனதை ஒருவன் ஏமாற்ற முடியாது. அது எப்போதும் அவன் செய்வதை, சொல்வதை கவனித்துக் கொண்டே இருக்கும்.
சரி, ஏதோ தெரியாமல் சொல்லி விட்டேன் என்று சொல்ல முடியாது. அறிந்தே சொன்ன பொய் தான். "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்றார். தெரிந்தே சொல்லும் பொய்கள்.
எப்போதோ சொன்னேன். அது நாளடைவில் மறைந்து விடாதா, மறந்து விடாதா என்றால் மறையாது, மறக்காது. எனவே தான் "பொய்யற்க" என்றார். பொய்யை ஒரு காலும் சொல்லக் கூடாது. அறவே சொல்லக் கூடாது.
No comments:
Post a Comment