Monday, January 23, 2023

திருவாசகம் - திரு அம்மானை - கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்

                

திருவாசகம் - திரு அம்மானை  -   கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் )



கண் பார்க்கிறது. 

பார்க்கிறது என்றால் என்ன?  

வெளியில் இருந்து வரும் ஒளியை கண் உள்ளே செலுத்துகிறது. கண்ணின் பின்னே உள்ள ஒளித் திரையில் அது விழுகிறது. அங்கிருந்து அது மூளைக்கு மின் அலைகள் மூலம் அந்த செய்தியை அனுப்புகிறது. மூளையில் சில வேதியல் நிகழ்வுகள் நிகழ்கின்றன. 


நாம் பார்த்தது இலட்டு என்றோ, நாய் குட்டி என்றோ, அம்மா என்றோ, பேனா என்று அறிந்து கொள்கிறோம். 


இதில், பார்ப்பது யார்?


கண்ணா? விழித் திரையா? மூளையா? 


கண்ணும், மூளையும் எல்லாம் இருந்தாலும், இருட்டில் தெரிவது இல்லை. 


கண்ணில் அடி பட்டால் ஒளி விழுந்தாலும் தெரிவது இல்லை. 


கண் நன்றாக இருந்து மூளையில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் தெரிவது இல்லை. 


எல்லாம் சரியாக இருந்தாலும், மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் கண் முன்னால் இருப்பது கூட தெரிவது இல்லை. 


பார்ப்பது யார்? 


மனமா? புத்தியா? சித்தமா? அகங்காரமா?  


ஒரே பெண்ணைப் பார்த்து ஒருவன் தாய் என்கிறான், அவளையே இன்னொருவன் தாரம் என்கிறான், மற்றொருவன் சகோதரி என்கிறான்...மாற்றுவது எது? 


ஒருவன் காரம் மண்டையை பிளக்கிறது என்கிறான். அதையே இன்னொருவன் உண்டுவிட்டு என்ன இது உப்பு உறைப்பு இல்லாமல் சப் என்று இருக்கிறது என்கிறான். 

எது பொருளின் நிஜமான சுவை?


பொருள்களுக்கு என்று ஒரு குணம் இருக்கிறதா இல்லையா அல்லது பார்பவரைப் பொறுத்து அது மாறுகிறதா? மாறும் என்றால் உலகம் என்பது தனித்து ஒன்று இல்லையா?


பொருள்கள்தான் என்று இல்லை. 


இன்பமும் துன்பமும் தனித்து இருக்கிறதா அல்லது அனுபவிப்பர்களைப் பொறுத்து மாறுமா? 

அப்படி மாறும் என்றால், நம் மனதை மாற்றிவிட்டால் எப்போதும் இன்பமாக இருக்கலாமா?

எப்போதுமே இன்பமாக இருக்க முடியும் என்றால், அதுதான் சொர்கமா?


அது தான் இறை அனுபவமா?


மனிவாசககர் சொல்கிறார் 


"என்னுடைய் உடலாகி, ,உயிர் ஆகி, உணர்வு ஆகி, எனக்குள்ளே கலந்து, தேன் ஆகி, அமுதம் ஆகி, கரும்பின் சுவையாகி, வானவரும் அறியாத வழியில் எமக்கு தந்து அருளும் சிவன் என்னுடைய அறிவாகி, பல உயிர்களுக்கும் தலைவனாக நின்றான். அவனைப் போற்றுவோம்" என்கிறார். 



பாடல் 





ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!


பொருள் 



(pl click the above link to continue reading)


ஊன் ஆய் = உடம்பு ஆகி 


உயிர் ஆய் = உயிர் ஆகி 


உணர்வு ஆய் = உணர்வு ஆகி 


என்னுள் கலந்து = எனக்குள்ளே கலந்து 


தேன் ஆய் = தேன் ஆகி 


அமுதமும் ஆய் = அமுதம் ஆகி 


தீம் கரும்பின் = இனிய கரும்பின் 


கட்டியும் ஆய் = கட்டியாகி (வெல்லக் கட்டி) 


வானோர் அறியா வழி = தேவர்களும் அறியாத வழியை 


எமக்குத் தந்தருளும், = எங்களுக்கு தந்து அருளும் 


தேன் ஆர்  = தேன் சொரியும் 


மலர்க் கொன்றைச் = கொன்றை மலர் சூடிய 


சேவகனார்= வீரம் பொருந்திய 


சீர் ஒளி சேர் = சிறந்த ஒளி பொருந்திய 


ஆனா அறிவு ஆய் = பெரிய அறிவாகி  


அளவு இறந்த = எண்ணில் அடங்காத  



பல் உயிர்க்கும் =  அனைத்து உயிர்களுக்கும் 


கோன் ஆகி நின்றவா = தலைவனாகி நின்றவனின் பெருமைகளை 


கூறுதும் காண்; அம்மானாய்! = பாடிப் புகழ்வோம் அம்மானாய் 






[


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 




 சேர்ந்து அறியாக் கையானை

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


என்வினையை ஓட்டுகந்து



)


No comments:

Post a Comment