Monday, January 16, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - முன்இன்று பின்நோக்காச் சொல்

   

 திருக்குறள் - புறங்கூறாமை -  முன்இன்று பின்நோக்காச் சொல்



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)



கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்


இந்தக் குறளை படித்தவுடன் நமக்கு என்ன தோன்றும்?


முகத்திற்கு முன் கடினமான சொற்களை சொன்னாலும் பரவாயில்லை ஆனால் ஒருவன் இல்லாதபோது  அவதூறாக அவனைப் பற்றி பேசாமல் இருப்பது நலம் என்றுதானே பொருள் சொல்வோம் ?


அது சரியும் கூட. 


ஆனால், பரிமேலழகர் மிக நுணுக்கமாக இதற்கு உரை எழுதுகிறார். அது என்ன என்று பார்ப்போம். 


பாடல் 


கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html

(pl click the above link to continue reading)


கண்நின்று = கண் முன்னே நின்று 


கண்ணறச் = கண் + அற 


சொல்லினும் = சொன்னால் கூட பரவாயில்லை 


சொல்லற்க = சொல்லக் கூடாது 


முன்இன்று பின்நோக்காச் சொல் = முன்னால் இல்லாமல் அவனுக்கு பின்னால் சொல்லும் சொற்களை 


'கண்ணற' என்றால் என்ன?  கண் என்பது கருணையை, அன்பை, காதலை வெளிபடுத்தும் அவயம். கருணைக்கு கண்ணோட்டம் என்று பெயர். காதலர்களுக்குத் தெரியும் கண் எவ்வளவு காதலை வெளிப்படுத்தும் என்று. 


கண் அற என்றால், அந்த கருணை, அன்பு, பரிவு இல்லாத என்று பொருள். 


கண்ணறச் சொல் என்றால் அன்பு, பரிவு இல்லாத சுடு சொற்கள் என்று பொருள். 


"பின் நோக்கா" என்றால் என்ன?


ஒருவனுக்கு பின்னால் என்று நாம் பொருள் சொல்வோம். பரிமேலழகர் சொல்கிறார், பின்னால் வரும் பாவத்தை அறியாமல், பின்னால் வரும் துன்பத்தை அறியாமல் என்று பொருள் சொல்கிறார். 


பின் வரும் பாவம் தெரிகிறது. அது என்ன பின் வரும் துன்பம்?


அது பற்றி இனி வரும் குறள்களில் கூற இருக்கிறார். 


'பின்நோக்காச் சொல்' = இங்கே சொல் என்பது ஆகுபெயர் என்று குறிக்கிறார். 'சொல்'லுக்கு ஒரு பாவமும் இல்லை. சொல்லை சொல்பவனுக்குத் தான் அந்த பாவமும், துன்பமும் வந்து சேரும் என்பதால் சொல் என்ற சொல் , சொல்பவனைக் குறிந்து நின்றது என்பதால் அதை ஆகு பெயர். 


புறம் சொல்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒன்றிருக்க ஒன்று சொல்லுவது ஒரு பொழுது போக்கு, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பொழுதை இனிதாகக் கழிக்க நினைக்கிறார்கள். 


அதன் விளைவுகளைப் பற்றி சிந்திப்பது இல்லை அல்லது அவர்கள் நினைக்கும் விளைவு மட்டுமே விளையும் என்று நினைக்கிறார்கள். 


அது தவறு. அவர்கள் நினைத்து பார்க்க முடியாத விளைவுகள் நிகழும் என்று எச்சரிக்கிறார். அவை என்னென்ன என்று பின்னால் கூற இருக்கிறார். 














(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html




No comments:

Post a Comment