Saturday, January 21, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - புன்மையால் காணப் படும்

    

 திருக்குறள் - புறங்கூறாமை -  புன்மையால் காணப் படும்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


சிலர் அறம் என்றால் என்ன, பாவ புண்ணியம் என்றால் என்ன, கடவுள், வேதம், கர்மா என்று மிக அழகாகப் பேசுவார்கள் / எழுதுவார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் அறம் அல்லாத பலவற்றை செய்வார்கள். 


"அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே முக்கியம். தனி வாழ்வில் அவன் எப்படியும் போகட்டும், அவன் சொல்லும் செய்தி நல்லதா கெட்டதா என்று பார்த்தால் போதாதா?" என்று சிலர் நினைக்கக் கூடும். 


அது சரியான வாதம்தான். இருந்தாலும், வள்ளுவர் சொல்கிறார், ஒருவன் மனதளவில் கெட்டவனாக இருந்தால், அவன் சொல்லும் சொல் மட்டும் எப்படி நல்லாதாக இருக்கும் என்று.  மனம் தானே மூல காரணம். அங்கிருந்துதானே சொல்லும் செயலும் பிறக்கிறது. மனமே கோணல் என்றால்? 


நிறைய பேர் நமக்கு நல்லது சொல்லுவது போல இனிக்க இனிக்கப் பேசுவார்கள். உள்ளுக்குள் இருப்பது எல்லாம் விடம். 


சரி, ஒருவன் மனதுக்குள் போய் நாம் பார்க்க முடியுமா? சொல்லுகிற சொல்லை நாம்  கேட்கிறோம். அவன் மனம் எப்படிப் பட்டது என்று எப்படி அறிந்து கொள்வது?


அதற்கு ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர். 


அவன் மற்றவர்களைப் பற்றி, அவர்கள் இல்லாத போது தவறாகப் பேசுகிறானா? அதாவது புறம் சொல்கிறானா ? அப்படி என்றால் அவனுக்கும் அறத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று எண்ணிக் கொள் என்கிறார். 


அவன் மனத்தில் களங்கம் இருக்கிறது என்று புரிந்து கொள் என்கிறார். 


அறம் பற்றி பேசுபவர்கள் மட்டும் அல்ல. நம் உறவு, நடப்பில் யாராக இருந்தாலும், எவன் ஒருவன் புறம் பேசுகிறானோ, அவன் சொல்லுவது எதையும் நம்பக் கூடாது.  புறம் சொல்லும் அவ்வளவு பெரிய தவறைச் செய்பவன் வேறு என்னவெல்லாம் செய்ய மாட்டான் என்பது குறிப்பு. 


பாடல் 



அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்

புன்மையால் காணப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


(pl click the above link to continue reading)


அறம்சொல்லும் = அறத்தினை விரித்துச் சொல்லும் 


நெஞ்சத்தான்  = மனம் உடையவனது 


அன்மை  = தூரம். அவனுக்கும் அறத்துக்கும் உள்ள தூரம், தொடர்பு 


புறம்சொல்லும் = அவன் புறம் சொல்லும் 


புன்மையால் = தீய குணத்தால் 


காணப் படும் = அறிந்து கொள்ளலாம் 


ஒரு தலை சிறந்த வக்கீல் போல வள்ளுவர் சொல்கிறார். 


அவன் சொல்வதை கேள் என்றோ கேட்காதே என்றோ அவர் சொல்லவில்லை. 


அவன் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ சொல்லவில்லை. 


புறம் சொல்கிறானா, அவனுக்கும் அறத்துக்கும் இடை வெளி என்ன என்று நீயே புரிந்து கொள் என்று கோடு போட்டு காட்டுகிறார். 


புறம் சொல்பவன் அறத்தை கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம். இடை வெளி இருக்கும் என்பதை புரிந்து கொள். 


இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் அப்படி விடத் தயாராக இல்லை. ஒரு படி மேலே போய், கேட்காதே என்று அடித்துச் சொல்கிறார். 


"மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்" 


என்பது அவர் உரை. 


புறம் சொல்லுவது மனக் குற்றம். ஒரு சமுதாய மனிதனாக வாழ விரும்புவன் அந்தக் குற்றத்தை களைய வேண்டும். 


நம்மிடமும் அந்தக் குற்றம் இருக்கலாம். 


ஒரு விடயம் பற்றி நமக்கு ஒரு அட்பிப்ப்ராயம் இருக்கும். 


அலுவலதத்திலோ, வீட்டிலோ நாம் ஒரு கருத்தைச் சொல்லுவோம். சில நேரம் அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படாமல் போகலாம். 


நம் கருத்தை மறுதலித்தது ஒரு உயர் அதிகாரியாக இருக்கலாம். 


அவர் இல்லாத போது "இவர் எல்லாம் ஒரு பெரிய அதிகாரி. இந்தச் சின்ன விடயம் கூடத் தெரியவில்லை. எப்படிதான் இந்த நிலைக்கு வந்தானோ"என்று அவர் இல்லாத போது அவர் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் புறம் தான். 


மனவியைப் பற்றியோ, கணவனைப் பற்றியோ மற்றவர்களிடம் தரக் குறைவாகப் பேசுவதும் புறம் தான். 


மாமியாரைப் பற்றி, மருமகளைப் பற்றி, அவர்கள் இல்லாத போது தரக் குறைவாகப் பேசுவதும் புறம்தான். 


நம்மிடம் அந்தக் குற்றம் இருக்கிறதா? இல்லையா?


ஒவ்வொருமுறை மற்றவர்களைப் பற்றிப் பேசும் போது அவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துப் பேச வேண்டும். இல்லை என்றால் பேசக் கூடாது. 


நாக்கைக் கடித்துக் கொள்ள வேண்டும். 


சரி, அப்படி முடியாது. இப்படி பேசி பேசிப் பழகிவிட்டது என்றால், அறம் பற்றி பேசாமலாவது இருக்கலாம். எது சரி, எது தவறு, என்றெல்லாம் பேசாமலவாது இருக்கலாம். 








(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html




No comments:

Post a Comment