Friday, December 23, 2022

திருக்குறள் - புறங்கூறாமை - அறன் அல்ல

 திருக்குறள் - புறங்கூறாமை - அறன் அல்ல 


நல்ல புதுத் துணி உடுத்திக் கொண்டால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தது போல இருக்கும் அல்லவா? மனதுக்குள் ஒரு சந்தோஷம் வரும் தானே? 


ஒரு அழுக்கான, கிழிந்த, iron செய்யாமல், கசங்கி இருக்கும் ஒரு ஆடையை உடுத்தினால் எப்படி இருக்கும்? 


துணிக்கும், மனதுக்கும் என்ன சம்பந்தம்? 


நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுக தொடர்பு இருக்கிறது அல்லவா? 


நம் மனம் இவைகளால் பாதிக்கப் படுகிறது என்று நாம் புரிந்து கொள்கிறோம். மனதை நேரடியாக நம்மால் கட்டுப்படுத்த முடியாது. உடம்பு, உடை, உணவு, மூச்சுப் பழக்கம் இவைகள் மூலம் அதை நாம் நம் வசப்படுத்த முடியும்.


சரி, அதற்கும் இந்த அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?


நாம் நம் மன, வாக்கு, செயல்களை குற்றம் அற்றவையாக செய்ய வேண்டும். 


செயலை நாம் கட்டுப் படுத்த முடியும். 


வாக்கை நாம் கட்டுப் படுத்த முடியும்.


மனதை? 


வாக்கையும், செயலையும் சுத்தம் செய்தால் மனம் சுத்தமாகும். 


இதற்கு முந்தைய அதிகாரங்களில் மனச் சுத்தம் பற்றி கூறினார் (பிறனில் விழையாமை, வெக்காமை).


இனி வாக்கு சுத்தம் பற்றி கூற இருக்கிறார். 


இனிய சொற்களை கூறிப் பழகினால் மனமும் இனிமையாக மாறும். 


பிள்ளைகளை கூட "இராசா, தங்கம், செல்லம்,..." என்று சொல்லும் போது நம் மனமும் மென்மையாகிறது அல்லவா.


மாறாக "எருமை, சனியனே " என்று கடிந்து கூறினால் நம் மனமும், முகமும் விகாரப் படுகிறது அல்லவா. 


வாக்கில் உள்ள குற்றங்களை நீக்கினால் மனமும், செயலும் குற்றம் அற்றதாகி விடும். எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. 


வாக்கு என்பது மிகப் பெரிய விடயம். அது பற்றி நிறைய சிந்திக்க இருக்கிறோம். 


பேச்சில் என்ன பெரிய குற்றம் வந்து விடும்? அதை எப்படி நீக்குவது, அதனால் வரும் நன்மை தீமைகள் என்ன என்று சிந்திப்போம். 


சொல்லில் வரும் முதல் குற்றமாக வள்ளுவர் புறம் கூறுதலைப் பற்றி கூறுகிறார். 


வள்ளுவர் எது முக்கியயமானதோ அதை முதலில் கூறுவார். 


"அறம் என்ற வார்தையைக் கூட ஒருவன் சொல்லாமல், அறம் அல்லாதவற்றை செய்து கொண்டிருந்தாலும், அவன் புறம் கூறாமல் இருப்பானாயின் அது நல்லது" என்கிறார். 



பாடல் 



அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறம்கூறான் என்றல் இனிது


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html


(pl click the above link to continue reading)



அறம்கூறான் = அறம் என்ற வார்தையை கூட வாயால் சொல்ல மாட்டான் 


அல்ல செயினும் = அறம் அல்லாதவற்றை ஒருவன் செய்தாலும் 


ஒருவன் = ஒருவன் 


புறம்கூறான் = புறம் கூறமாட்டான் 


என்றல் இனிது = என்ற பெயர் எடுப்பானாயின் அது மிக நல்லது 


அது எப்படி அறம் அல்லாதவற்றை செய்வது மிக இனிது என்று கூறலாம்?  அப்படி என்றால் வள்ளுவர் அதை எல்லாம் செய்யலாம் என்று கூறுகிறாரா?


இல்லை....


ஒருவனிடம் பல தீய குணங்கள் இருக்கலாம். 


மது அருந்தலாம், புகை பிடிக்கலாம், வேலை செய்யாமல் சோம்பித் திரியலாம், பெண்கள் பின்னால் சுற்றலாம் ...இப்படி பலஅறம் அல்லாத குணங்கள் இருந்தாலும் "ஒருத்தரைப் பற்றி தப்பா அவங்க இல்லாதப்ப பேச மாட்டான்" என்ற ஒரு நல்ல குணம் இருந்தால் உலகம் அவனது ஏனைய தீய குணங்களை பெரிது படுத்தாது. 


மாறாக, எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும், "அவன் பயங்கரமான ஆளு சார். எல்லாரையும் பத்தி இல்லாததும் பொல்லாததும் பேசுவான். அவனோடு ரொம்ப தொடர்பு வச்சுக்காதீங்க " என்ற அவனைப் பற்றி மற்றவர்கள் எச்சரிப்பார்கள். அவனுக்கு நெருங்கிய சுற்றமும் நட்பும் இருக்காது. 



ஏனைய அறம் அல்லாத குணங்கள் இருந்தாலும், புறம் கூறமாட்டான் என்ற ஒரு நல்ல குணம் மற்ற தீய குணங்களை மறைந்து விடும் அல்லது மழுங்கச் செய்து விடும்.


இது புறம் கூறாமல் இருப்பதின் நன்மை. 

No comments:

Post a Comment