Thursday, January 5, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறனழீஇ

 

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறனழீஇ 


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


அறம் அழிந்து வருகிறது என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?


பாவம், புண்ணியம் என்பது என்று ஒன்று இல்லை.  பாவம் புண்ணியம் என்பதெல்லாம் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட வேலிகள். நமக்கு இடையூறு என்றால் நாம் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்று விதாண்டாவாதம் பேசுவது.


வினை, விதி, கர்மா என்பதெல்லாம் பொய். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது.


இது போன்ற சிந்தனைகள் பரவலாக பரவி வருகிறது. எங்கோ ஓரிருவர் சொன்னால் பரவாயில்லை. ஒரு தலைமுறையே இப்படி சிந்திக்கத் தொடங்கி விட்டது.


வள்ளுவர் சொல்கிறார், அறத்தில் இருந்து விலகி, அறம் அல்லாதவ்றை செய்தால் கூட பரவாயில்லை, அதை விட கொடுமையானது ஒருவன் இல்லாத போது அவனை பழித்துக் கூறி, பின் அவனை நேரில் பார்க்கும் போது அவனை புகழ்வது என்கிறார். 


அற வழுவலை விட புறம் கூறுதல் பெரிய பாவம்.


பாடல் 


அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html

(pl click the above link to continue reading)


அறனழீஇ = அறத்தில் இருந்து நழுவி, விலகி, அறம் இல்லை என்று சொல்லி


அல்லவை = அறம் அல்லாதவ்றை 


செய்தலின் தீதே = செய்வதை விட தீமையானது 


புறனழீஇப் = ஒருவனை காணாத போது அவனைப் பற்றி பழித்துப் பேசி 


பொய்த்து நகை = அவனைக் கண்ட போது பொய்யாக நகை செய்வது 


இந்தக் குறளில் பரிமேலழகர் இரண்டு நுண்ணிய விடையங்களை விரித்துச் சொல்கிறார். 


உறழ்ச்சி என்று இலக்கணத்தில் ஒன்று உண்டு. அதற்கு மாறுபாடு, திரிதல், வேறுபடுதல் என்று பொருள்.


இந்தக் குறளில் உறழ்ச்சி இருக்கிறது என்கிறார். 


எங்கே என்று பார்ப்போம்.


நாம் நடை முறையில் உதாரணம், உவமைகளை பயன் படுத்துகிறோம். 


கும்பகர்ணன் போல தூங்குகிறான், எருமை மாதிரி நடு ரோட்டில் நடக்கிறான் என்றெல்லாம் சொல்கிறோம். 


உவமையை இரண்டு இடத்தில் நாம் பயன் படுத்துவோம். 

ஒன்று, தெரிந்த ஒன்றை உதாரணமாகக் கூறி, தெரியாத ஒன்றை விளக்குவது. 


ஒருவன் புலியை பார்த்ததே இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு புலி எப்படி இருக்கும் என்று விளக்க வேண்டும். 


"நீ பூனை பார்த்து இருக்கிறாய் அல்லவா? புலி என்பது பூனை மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரிய பூனையை கற்பனை செய்து கொள்" 


என்று சொல்லி விளங்க வைக்கலாம். 


மற்றொன்று, ஒன்றை உயர்வாக, சிறப்பாகக் கூற பயன்படுத்தலாம். 


அவள் முகம் நிலவு மாதிரி இருக்கிறது என்றால் குளிர்ந்து, ஒளி வீசும் நிலவு போல சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். 


முகம் நிலவு மாதிரி இருக்கிறது என்பது நேரடி உவமை. 


இதை கொஞ்சம் மாற்றி,, முகம் நிலவை விட அழகாக இருக்கிறது என்றும் சொல்லலாம். தவறு இல்லை. அப்படிச் சொல்வது உறழ்ச்சி என்று அழைக்கப்படும். 


இந்தக் குறளில், 


அறம் விலகி, அல்லன செய்வதுதான் மிகப் பெரிய பாவம். ஆனால், வள்ளுவர், அதை விட பாவம் புறம் சொல்லுவது என்கிறார். அதனால் அது உறழ்ச்சி.


இரண்டாவது, மனிதனுக்கு உள்ள சிறப்பை நம் முன்னோர் இரண்டு விதமாக பிரித்தார்கள். 


ஒன்று ஒளி, இன்னொன்று புகழ். 


ஒளி என்பது இந்தப் பிறவியில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் சிறப்பு. 


புகழ் என்பது இந்த பிறவி தாண்டியும் நிற்கும் சிறப்பு.


வள்ளுவர், கம்பர் என்பவர்கள் புகழ் பெற்ற புலவர்கள். 


இன்று நடிக்கும் நடிகர்கள், எழுதாளர்களுக்கு இருப்பது ஒளி. அதுவே காலம் கடந்து நின்றால் அது புகழ். 


புறம் சொல்பவன், மற்றவனின் ஒளியை அழிக்க முடியும். புகழை அழிக்க முடியாது. 


உதாரணமாக, ஒரு பெரிய தலைவரின் வாழ்வில் ஏதோ ஒரு களங்கம் இருந்திருக்கலாம். அவர் வாழ்ந்த காலத்தில் அது பெரிதாக பேசப் பட்டு இருக்கல்லாம். நாளடைவில், உலகம் அதை மறந்து விடும். அவர் செய்த தொண்டு, அவர் எழுதிய புத்தகம், அவர் உலகுக்குச் செய்த நன்மை எதுவோ அதுவே பெரிதாகப் பேசப் படும். 


புறம் சொல்பவன், மற்றவனின் ஒளியை குறைக்கலாம். புகழ் அழியாது என்கிறார். 


இலக்கணம் படிக்க படிக்க இலக்கியத்தை ஆழ்ந்து இரசிக்க முடியும். 










(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html




No comments:

Post a Comment