Friday, January 27, 2023

கம்ப இராமாயணம் - அறத்தின் ஊங்கு இனிக் கொடிது

கம்ப இராமாயணம் -  அறத்தின் ஊங்கு இனிக் கொடிது


இராமனுக்கு முடி சூட்டுவது என்று முடிவாகி விட்டது. தயரதனுக்கு கீழே உள்ள அமைச்சர்கள் எல்லோரும் அது சரியான முடிவு என்று ஏற்றுக் கொண்டு விட்டார்கள். வசிட்டரும் அது சரி என்று சொல்லி விட்டார். .


இறுதியாக முதல் அமைச்சர் சுமந்திரன் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறான். 


அதுதான் சூழ்நிலை. அதை மனதில் நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டும். 


அற வழியில் வாழ்வது எளிதா? அல்லது அறம் அல்லாத வழியில் வாழ்வது எளிதா? என்று கேட்டால், அற வழியில் வாழ்வது மிகக் கடினம். 


பொய், புரட்டு, முகஸ்துதி, முன்னுக்கு பின் முரணாகப் பேசுவது, தவறென்றாலும், பெரிய ஆள் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்வது, என்பதெல்லாம் எளிதாக இருக்கிறது. 


நீதி, நேர்மை, நடு நிலைமை, உண்மை, தர்மம் என்று வாழ்வது கடினமாக இருக்கிறது. 


நினைத்துப் பாருங்கள், பொய்யே சொல்ல மாட்டேன் என்று ஒருவன் வாழ முடியுமா? 


இலஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று இருக்க முடியுமா?  நமக்கு வேலை நடக்கும் என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து சாதித்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம். 


இறைவனைப்  பார்க்கக் கோவிலுக்குப் போகும் போதும், தனி வழி, சிறப்பு வழி, சிபாரிசு கடிதம் என்று கொடுத்து எளிதாக போய் வந்து விடுகிறோம். நீண்ட வரிசையில் நிற்பது கடினமாக இருக்கிறது. 


குறுக்கு வழி சுகமாக இருக்கிறது. எளிதாக இருக்கிறது. நேர் வழி கடினமாக இருக்கிறது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சுமந்திரன் சொல்கிறான் 


"அரசரே, ,நீங்கள் இராமனுக்கு முடி சூட்டப் போகிறீர்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் நீங்கள் முடி துறக்கப் போகிறீர்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அதற்காக உங்கள் குல மரபை விடுவதும் சரி அல்ல. அற வழியில் செல்வதைப் போல கொடுமையான ஒன்று இல்லை போலும்"


என்றான். 


இறுதி வரி தூக்கி வாரிப் போடுகிறது. அற வழியில் செல்வதைப் போல கொடுமையான ஒன்று இல்லை போலும் என்கிறான். 


இலஞ்சம் வாங்கி சம்பாதிப்பவன் காரு, வீடு என்று மகிழ்ச்சியாக இருக்கிறான். நேர்மையாக வாழ்பவன் அடிப்படை தேவைகளுகுக் கூட துன்பப் படுகிறான். அதுதானே உலக இயற்க்கையாக இருக்கிறது?


பாடல் 



“உறத் தகும் அரசு இராமற்கு என்று

    உவக்கின்ற மனத்தைத்

துறத்தி நீ எனும் சொல் சுடும்;

    நின்குலத் தொல்லோர்

மறத்தல் செய்கிலாத் தருமத்தை

    மறப்பதும் வழக்கு அன்று;

அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல்

    ஆவது ஒன்று யாதே?‘‘



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_27.html


(please click the above link to continue reading)


“உறத் தகும் = பொருத்தமானது 


அரசு இராமற்கு = அரசை இராமனுக்குத் தருவது 


என்று = என்று 


உவக்கின்ற மனத்தைத் = மகிழ்ச்சி கொள்கின்ற மனத்தை 


துறத்தி நீ = நீ (தயரதன்) முடி துறக்கப் போகிறாய் 


எனும் சொல் சுடும்; = என்ற சொல் சுடும் 


நின்குலத் தொல்லோர் = உன் குலத்தில் வந்த முன்னோர் 


மறத்தல் = மறக்காமல் 


செய்கிலாத் தருமத்தை = தொடர்ந்து செய்து வந்த தர்மத்தை 


மறப்பதும் வழக்கு அன்று; = நீ மறப்பது என்பது சரி அல்ல 


அறத்தின் ஊங்கு = அற வழியில் செல்வது 


இனிக் = இனிமேல் 


கொடிது எனல் =  கொடுமையானது என்று சொன்னால் 


ஆவது ஒன்று யாதே?‘‘ = வேறு என்னதான் செய்வது 


அற வழியில் செல்வது கொடுமையான செயல் என்றால், வேறு என்னதான் செய்வது என்று கேட்கிறான். 


சரியாகப் படிக்காமல், சரிதான் கம்பரே சொல்லிவிட்டார், இனி அற வழியில் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கக் கூடாது. 


அற வழியில் செல்வது கடினம்தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால், அதுவே கடினம் என்றால், அறம் அல்லாத வழியில் செல்வது அது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கும் என்று முடிக்கிறான். 


அற வழியே கடினம் என்றால் பின் என்னதான் செய்வது என்று கேட்டால், ஒன்றும் செய்ய வேண்டாம். கடினமாக இருந்தாலும் அற வழியில்தான் போக வேண்டும். அதுதான் சரி. 


படிப்பதற்கு செலவாகும். உண்மைதான். அதற்காக படிக்காமல் இருந்தால் செலவு குறையுமா?  நாள் வாழ் நாள் எல்லாம் ஒரு பைசா கூட படிப்புக்கு என்று செல்வழித்ததே கிடையாது என்று ஒருவன் சொன்னால் அவனைப் பற்றி என்ன நினைக்கத் தோன்றும்?  


உடற் பயிற்சி கடினம்தான். அதற்காக சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தால்?


கடினமாக இருந்தாலும், அற வழியில்தான் செல்ல வேண்டும். ஏன் என்றால், அறம் அல்லாத வழி அதைவிட மிக மிக கடினமான ஒன்று. 


எந்த இடத்தில் அறத்தை போதிக்கிறார் பாருங்கள். 


ஒரு பாடலைக் கூட வேண்டாம் என்று தள்ளி விட்டுப் போய் விட முடியாது. 


அவ்வளவு பெரிய புதையல் கம்ப இராமாயணம். 




1 comment: