Wednesday, August 24, 2022

திருவாசகம் - திரு அம்மானை - தாய்போல் தலையளித்திட்டு

    

 திருவாசகம் - திரு அம்மானை  -   தாய்போல் தலையளித்திட்டு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



அவனும் அவளும் அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள். சில நேரம் ஒரு சின்ன புன்னகை.  ஒரு நாள் தைரியமாக அவன் அவளிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள்.பேசி, சிரித்து மகிழ்கிறார்கள். முதன் முதலாக அவன் அவள் கரங்களைப் பற்றுகிறான். அவளுக்குள் நாணம் ஒரு புறம், சந்தோசம் மறுபுறம், இதயம் பட பட என்று அடித்துக் கொள்கிறது. ரோமம் எல்லாம் சிலிர்கிறது. யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ஒரு புறம். சற்று நெருங்கி அமர்கிறார்கள்.....


அந்த நேரத்தில் அவள் அனுபவித்த அந்த உணர்வை சொல் என்றால் எப்படிச் சொல்வாள். எல்லாம் தெரியும், இருந்தும் ஒன்றும் சொல்ல முடியாது. தன் அனுபவம் தான் இருந்தும் சொல்ல முடியாது. 


இறை அனுபவமும் அப்படித்தான். 


மாணிக்கவாசகர் தவிக்கிறார். என்ன என்று சொல்லுவது, எப்படிச் சொல்வது, கடல் போன்ற இன்பம். அதை எப்படி வார்த்தைகளுக்குள் அடக்குவது? 


பாடல் தேனாக உருகி வருகிறது....


இறைவன் திருக்கருனையை நினைத்து நினைத்து உருகுகிறார் 


"வானில் உள்ள மால், அயன், இந்திரன் முதலிய தேவர்கள் எல்லாம் உன்னை அடைய பாடு படுகிறார்கள். அவர்களுக்கு காட்சி தராமல், கீழான என்னை ஒரு தாய் போல் அன்பு செய்து ஆண்டு கொண்டாய். என் உரோமங்கள் சிலிர்கிறது. புது உயிர் பிறந்தது போல இருக்கிறது. தேன் போல இனிக்கிறது. அமுதம் போல் இருக்கிறது. உன் திருவடிகள் எவ்வளவு ஒளி பொருந்தி இருக்கிறது. அந்தத் திருவடிகளைப் பாடுங்கள் அம்மானை ஆடும் பெண்களே" என்கிறார். 


பாடலைப் படித்துப் பாருங்கள். அந்த உணர்வு ஓட்டம் புரியும். 



பாடல் 



வான் வந்த தேவர்களும், மால், அயனோடு, இந்திரனும்,

கான் நின்று வற்றியும், புற்று எழுந்தும், காண்பு அரிய

தான் வந்து, நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு,

ஊன் வந்து உரோமங்கள், உள்ளே உயிர்ப்பு எய்து

தேன் வந்து, அமுதின் தெளிவின் ஒளி வந்த,

வான் வந்த, வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


(pl click the above link to continue reading)




வான் வந்த தேவர்களும் = வானில் உள்ள தேவர்களும் 


மால் = திருமாலும் 


அயனோடு = பிரமன் 


இந்திரனும் = இந்திரனும் 


கான் நின்று = காட்டில் நின்று (தவம் செய்து) 


வற்றியும் = உடல் வற்றி மெலிந்தும் 


புற்று எழுந்தும் = அவர்களைச் சுற்றி புற்று எழுந்தும் 


காண்பு அரிய = காண முடியாத 


தான் வந்து = (அவன்) தானே வந்து 


நாயேனைத் = நாய் போல கீழான என்னை 


தாய்போல் = ஒரு தாயைப் போல 


தலையளித்திட்டு, = அன்பு செய்து 


ஊன் வந்து = என் உடலில் புகுந்து 


உரோமங்கள் = உரோமங்கள் 


உள்ளே உயிர்ப்பு எய்து = உயிர் பெற்று 


தேன் வந்து = தேனைப் போல 


அமுதின் = அமுதத்தின் 


தெளிவின் = தெளிவைப் போல 


ஒளி வந்த = ஒளி பொருந்திய 


வான் வந்த = வானில் இருந்து வந்த 


வார் கழலே = வெற்றித் திருவடிகளை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானைப் பெண்களே 




1 comment: