Friday, May 27, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


)


அசோகவனத்தை அடைந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுவதை நாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


சீதைக்கு சந்தேகம் தீர்ந்து இருக்காது.  இது உண்மையிலயே இராம தூதனா அல்லது அரக்கர்களின் மாயையா என்ற சந்தேகம் அவளுக்குள் இருக்கத்தான் செய்யும். 


திடீரென்று அசொகவனதுக்குள் ஒரு குரங்கு வந்து குதித்து 'நான் இராம தூதன்' என்றால் சந்தேகம் வருமா வராதா? 


இதை அறிந்த அனுமன் மேலும் சொல்கிறான் 


" சந்தேகம் வேண்டாம். என்னிடம் நான் இராம தூதன் என்று நிரூபணம் செய்ய அடையாளங்கள் உள்ளது. மேலும், உண்மை உணர்த்த வேண்டி இராமன் சொன்ன செய்திகளும் என்னிடம் இருக்கிறது. அவற்றை உங்களுக்கு உள்ளங் கை நெல்லிக் கனி போல் காட்டுகிறேன். நெய் விளக்கு போல புனிதமானவளே, வேறு எதையும் நினைக்க வேண்டாம்"என்கிறான்.


பாடல் 


‘ஐயுறல்! உளது அடையாளம் : ஆரியன்

மெய்யுற உணர்த்திய உரையும் வேறு உள;

கை உறு நெல்லி அம் கனியில் காண்டியால்!

நெயுறு விளக்கு அனாய்! நினையல் வேறு! ‘என்றான்.


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


(pl click the above link to continue reading) 


‘ஐயுறல்! = சந்தேகம் வேண்டாம் 


உளது அடையாளம் = நான் இராம தூதன் என்று அடையாளம் காட்ட என்னிடம் சில நிரூபணங்கள் உள்ளன 


ஆரியன் = இராமன் 


மெய்யுற உணர்த்திய = உண்மையை அறிந்து கொள்ள 


உரையும் வேறு உள = செய்திகளும் இருக்கிறது 


கை உறு = உள்ளங் கையில் உள்ள 


நெல்லி அம் கனியில்  = நெல்லிக் கனி போல 


காண்டியால்! = நீ கண்டு கொள்ளலாம் 


நெயுறு விளக்கு அனாய்! = நெய் விளக்கு போல புனிதமானவளே 


 நினையல் வேறு! ‘என்றான். = வேறு எதையும் நினைக்க வேண்டாம் என்றான் 



அவளுக்கு சந்தேகம் இருக்கும் என்று அனுமன் கணிக்கிறான். 


அந்த சந்தேகம் போக என்ன சொல்ல வேண்டுமோ அதை அறிந்து சொல்கிறான். 


இராமன் அனுப்பிய அடையாளப் பொருள்கள் இருக்கிறது என்கிறான். 


ஒரு வேளை இராமனுக்குத் தெரியாமல் இவன் அந்தப் பொருள்களை களவாடி வந்திருப்பானோ என்ற சந்தேகம் சீதைக்கு வரலாம் என்று எண்ணி அடுத்ததாக ஒன்றைச் சொல்கிறான். 


"இராமன் சொல்லி அனுப்பிய செய்தியும் இருக்கிறது" என்கிறான். இராமன் சொன்ன செய்திகளை வைத்து இவன் இராம தூதன் என்று முடிவு செய்து கொள்ள முடியும் அல்லவா? அந்தச் செய்திகளை இராமன் மற்றும் சீதை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை சொல்லி அனுப்புகிறான் இராமன். 


இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்துவோம். 


அந்தக் காலத்தில் புகைப் படம் இல்லை. தொலைபேசி இல்லை. 


எனவே, இராமன் தனக்கும் சீதைக்கும் மட்டும் தெரிந்த சில விடயங்களை சொல்லி அனுப்புகிறான்.  அந்தரங்கமான விடயங்கள். வேறு வழி இல்லை. இதை படித்த சில பேர், "ஆஹா பார்த்தீர்களா இராமன் எவ்வளவு காம வயப் பட்டவன், நாகரீகம் இல்லாமல் அந்தரங்க விடயங்களை, இன்னொரு ஆண் மகனிடம் சொல்லி அனுப்புகிறானே...இதுவா பண்பாடு" என்று இராமனையும், கம்பனையும் விமர்சினம் செய்ய முற்படுகிறார்கள். 


கம்பனுக்கு, இராமன் பிள்ளை மாதிரி. அவ்வளவு பாசம் அவன் மேல். கம்பன் ஒருகாலும் இராமனின் பெருமையை குறைக்கும் செயலை செய்யமாட்டான் என்று நம்பலாம். 


மீண்டும் பாடலுக்கு வருவோம். 


சீதை இன்னும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


எல்லாம் அனுமனே ஊகம் செய்து அவள் மனதில் நம்பிக்கையும், ஒரு தெம்பும், அமைதியும்  வரும் வகையில் பேசுகிறான். 


இப்படிப் பேசிப் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும். 


பயனுள்ள பேச்சு. நம்பிக்கை தரும் பேச்சு. ஆதரவும், அமைதியும் தரும் பேச்சு. உற்சாகம் ஊட்டும் பேச்சு. 


இவற்றை எல்லாம் ஊன்றிப் படித்ததால் நம்மை அறியாமலேயே நம் பேச்சுத் திறன் வளரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 











3 comments:

  1. படிப்பதற்கு மிகவும் சுவையாக உள்ளது. இத்தொடர் இத்துடன் முடிந்துவிடுகிறதா இல்லை மேலும் தொடர்கிறதா? தொடர்ந்தால் நன்று.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருமை. சாதுர்யமான பேச்சு மாத்திரம் போறாது. பேசுவது .உண்மை என எடுத்து கூற சான்றுகளும் வேண்டும் என்பதை அழகாக விளக்கியுள்ளார்..

    ReplyDelete