Tuesday, May 24, 2022

திருக்குறள் - ஆக்கமும் உயர்வும்

 திருக்குறள் - ஆக்கமும் உயர்வும் 


ஒரு அறத்தை சொல்ல நினைக்கும் வள்ளுவர் சில சமயம் அதற்கு உதரணாமாக இன்னொரு அறத்தை சொல்லுவார்.


ஏற்கனவே சொற்சிக்கனம். இதில் ஒரு குறளுக்குள் இரண்டு அறம் சொல்லுவது என்பது எவ்வளவு கடினமான செயல் என்று நினைத்துப் பாருங்கள். 


வள்ளுவரால் மட்டுமே முடிந்த ஒன்று. 


ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை. இது தான் வள்ளுவர் சொல்ல நினைத்த செய்தி. அதற்கு எதை உதாரணமாகச் சொல்லலாம் என்று யோசிக்கிறார். ஒரு காலத்திலும் ஒழுக்கம் குறைந்தவனுக்கு உயர்வு வராது. அது போல என்றுமே நடக்காத ஒன்றை உதாரணமாகச் சொல்ல வேண்டும். .


எப்படி சூரியன் மேற்கில் உதிக்காதோ அது போல ஒழுக்கம் உடையவனுக்கு உயர்வு என்பது கிடையாது என்று சொல்லி இருக்கலாம். 


சூரியன் மேற்கில் உதிப்பது, தண்ணீர் மேல் நடப்பது என்பதெல்லாம் ஒரு பெரிய உதாரணமா என்று நினைத்த வள்ளுவர் மிக அற்புதமான ஒரு உதாரணம் தருகிறார். 


பொறாமை கொண்டவனுக்கு ஆக்கம் எப்படி இல்லையோ, அது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை என்று சொல்லி முடிக்கிறார். 


பாடல் 


அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_24.html


(please click the above link to continue reading)


அழுக்காறு  = பொறாமை 


உடையான்கண் = இருப்பவனிடம் 


ஆக்கம்போன்று = எப்படி ஆக்கம் இருக்குமோ 


இல்லை = இருக்காது 


ஒழுக்கம் இலான்கண் உயர்வு. = ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு 


பொறாமை கூடாது என்பதையும் சொல்லியாச்சு, ஒழுக்கம் குறையக் கூடாது என்பதையும் சொல்லி ஆகிவிட்டது. 


இதில் பல நுணுக்கமான விடயங்கள் இருக்கின்றன:


முதலாவது, பொறாமை உள்ளவனிடம் ஆக்கம் இருக்காது என்று சொல்வதன் மூலம், ஆக்கம் இருக்க வேண்டும் என்றால் பொறாமை இருக்கக் கூடாது என்பது தெரிகிறது. பொறாமை முன்னேற விடாது. நம் செல்வத்தை, நம் ஆக்கத்தை கண்டு மகிழ்ச்சி அடைவது, அதை மீளும் எப்படி பெருக்குவது என்பதை விட்டு விட்டு மற்றவன் செல்வம் கண்டு மனதுக்குள் புழுங்கிக் கொண்டே இருந்தால் எப்படி முன்னேற்றம் வரும். 


பொறாமை கொண்டவன், மற்றவன் செல்வத்தை, அவன் புகழை அழிக்க நினைப்பான். அதற்காக தன் பொருளையும், நேரத்தையும் செலவழிப்பான்.  அதில் சிக்கல்கள் வரலாம். இருப்பதும் போய் விடும். ஆக்கம் எங்கிருந்து வரும்?


இரண்டாவது, பொறாமை இல்லாவிட்டால் ஆக்கம் வரும் என்பது மறைமுகமாக நமக்குத் தெரிகிறது. 


மூன்றாவது, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது என்று சொன்னால், ஒழுக்கம் உள்ளவனிடம்? உயர்வு இருக்கும் என்பது தெரிகிறது அல்லவா?


நான்காவது, சரி ஒழுக்கமாக இருக்கிறேன். எனக்கு உயர்வு வருமா என்றால், ஒழுக்கமாக இருந்தால் மட்டும் போதாது, பொறாமை இருக்கக் கூடாது.  ஒழுக்கமாக இருந்தால் உயர்வு வரலாம், ஆனால் செல்வம் வர வேண்டும் என்றால் பொறாமையை விட்டு விட வேண்டும். 


ஐந்தாவது, சரி, பொறாமை இல்லாமல் இருக்கிறேன். எனக்கு உயர்வு வருமா என்றால். வராது. ஒரு கொள்ளைக் காரன் எவ்வளவுதான் தான் சொத்து சேர்த்தாலும், அவனை யார் மதிக்கப் போகிறார்கள்? அயோக்கிய பயல் என்றுதான் திட்டுவார்கள். 


ஆறாவது, இப்போது இரண்டையும் சேர்ப்போம். ஒழுக்கமாகவும் இருந்து,  பொறாமையும் இல்லாமல் இருந்தால்? செல்வமும் பெருகும், உயர்வும் வரும். 


ஏழாவது, பரிமேலழகர் ஒரு நுணுக்கமான உரை சொல்கிறார். அழுக்காறாமை என்ற அதிகாரத்தில், கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும், உண்பதுவும் இன்றிக் கெடும் என்று சொல்லி இருக்கிறார். பின்னால் வருகிறது அது. பொறாமை கொண்டவன் சுற்றத்தார் உண்ண உணவு இன்றி, உடுக்க உடை இன்றி துன்பப் படுவார்கள் என்கிறார். உணவு இல்லாவிட்டால் கூட சகித்துக் கொள்ளலாம். உடை இல்லாமல் எப்படி இருப்பது? 


அழுக்காறை உதாரணமாகச் சொன்னதால், ஒழுக்கம் குறைந்தவன் சுற்றத்துக்கும் உயர்வு இல்லை என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


யோசித்துப் பார்ப்போம்.  ஒருவன் அலுவலகத்தில் கையூட்டு (இலஞ்சம்) பெற்று விடுகிறான். அல்லது ஒரு பெரிய தவறை செய்து விடுகிறான். சிறை தண்டனை கிடைக்கிறது. அது அவன் பிள்ளைகளை பாதிக்குமா இல்லையா? அவன் உடன் பிறப்புகளை பாதிக்குமா இல்லையா? அவன் சகோதரி திருமணத்துக்கு பெண் பார்க்க வருகிறார்கள். அண்ணன் கொலை செய்து விட்டு அல்லது அப்பா கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கிறார் என்றால் பெண்ணை எடுப்பார்களா? அந்தப் பெண்ணின் வாழ்வு பாதிக்கப்படும் அல்லவா?


எனவே, ஒருவன் ஒழுக்கக் குறைவாக நடந்தால், அது அவனை மட்டும் அல்ல, அவன் சுற்றத்தையும் பாதிக்கும் என்கிறார். 


எவ்வளவு ஆழமான குறள்.


மனதுக்குள் ஒரு முறை வள்ளுவருக்கும், பரிமேலழகருக்கும் நன்றி சொல்வோம். 





No comments:

Post a Comment