Tuesday, June 28, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - திருஇலி வலிக்கு

    

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  திருஇலி வலிக்கு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு நான்முகனிடம் போனார். பிரமனும் தன்னால் முடியாது என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு பாற்கடல் சென்றனர், திருமாலிடம் முறையிட. 


"பத்துத் தலையும், இருபது கரங்களும் உள்ள அந்த அருள் இல்லாத இராவணனின் கொடுமையை எங்களால் தடுக்க முடியவில்லை. கருணைக் கடலான திருமாலே, நீர் அவனோடு சண்டையிட்டு எங்களை காத்தால் உண்டு" என்று திருமாலிடம் சரண் அடைந்தார்கள். 


பாடல் 



‘இருபது கரம். தலை ஈர்-ஐந்து. என்னும் அத்

திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.

கரு முகில் என வளர் கருணைஅம் கடல்

பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_28.html


(pl click the above link to continue reading)




‘இருபது கரம் = இருபது கரங்கள் 


தலை ஈர்-ஐந்து = பத்துத் தலைகள் 


என்னும் = என்று இருக்கும் 


அத் திருஇலி  = அருள் இல்லதா, கருணை இல்லாத 


வலிக்கு = வலிமை மிக்க இராவணனை அடக்க 


ஒரு செயல் இன்று  = ஒரு செயலையும் செய்ய முடியவில்லை 


எங்களால். = தேவர்களாகிய எங்களால் 


கரு முகில் = கரிய மேகம் 


என  = போல 


வளர் கருணைஅம் கடல் = நாளும் வளரும் கருணைக் கடலே 


பொருது = அவனோடு சண்டையிட்டு 


இடர் தணிக்கின் உண்டு = எங்கள் துன்பத்தை தணித்தால் தான் உண்டு 


எனும் புணர்ப்பினால். = என்ற கருதினால். அந்தக் கருத்தைச் சொன்னார்கள் 


இராவணன் உட்பட எல்லா அரக்கர்களுக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. 


மிக மிக கடுமையாக தவம் செய்வார்கள். இறைவனே நேரில் வருவான். கேட்கின்ற வரத்தை எல்லாம் தருவான். நீண்ட ஆயுள், செல்வம், புகழ், பெருமை, வீரம், அனைத்து வித இன்பங்களும் கிடைக்கும். 


வேறு என்ன வேண்டும்? அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டியதுதானே? 


ஆணவம் இருக்க விடுவதில்லை. 


தேவர்களை அடிமைப் படுத்தத் தூண்டும். சரி, அவர்களை வென்று சிறையில் அடைத்து விட்டால் அது அடங்குமா என்றால் இல்லை. அவர்களை துன்புறுத்த வேண்டும். அல்லது தான் தான் கடவுள், தன்னைத் தான் எல்லோரும் வணங்க வேண்டும் என்று ஆணவம் தலை தூக்கும். 


தேவர்களை துன்பப்படுத்தினால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? 


அது அரக்கர்களின் சிக்கல் மட்டும் அல்ல. 


நம் சிக்கலும் தான்.


எவ்வளவோ இருக்கிறது. இருக்கிறதை வைத்துக் கொண்டு இன்பமாக இருக்கத் தெரிவதில்லை. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் அலைவது. பின் முட்டி மோதி அழிவது. இருப்பதையும் அனுபவிக்காமல், ஓடி ஆடி சம்பாதித்தையும் அனுபவிக்காமல், வாழ்வை இழந்து நிற்பது. 


இராவணன் அடுத்தவன் மனைவியை ஆசைப்பட்டான். 


நாம் அடுத்தவன் வைத்திருக்கும் காருக்கு, அவன் போல் பெரிய வீட்டுக்கு, அவன் செல்வத்திற்கு, புகழுக்கு ஆசைப் படுகிறோம். 


இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித்தான் கூறும். அடிப்படை என்ன என்றால், இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழத் தெரியாதவன், மேலும் கொஞ்சம் வந்து விட்டால் மட்டும் இன்பமாக வாழ்ந்து விடுவானா? 


ஒருக்காலும் முடியாது. 


இராவணனின் அழிவு எங்கே ஆரம்பிக்கிறது என்று இராமாயணம் காட்டுகிறது. 


இராம அவதாரம் நிகழவில்லை. சீதை இன்னும் பிறக்கவில்லை. ஆனால், அவனின் அழிவு தீர்மானிக்கப் பட்டு விட்டது. 


எங்கே அறம் பிறழ ஆரம்பிக்கிறதோ, அன்றே அழிவின் விதை ஊன்றப் பட்டுவிட்டது என்று அர்த்தம். விதை வளரும். 


அதை நீங்கள் கடவுள் என்று நம்பினாலும் சரி, இயற்கை என்று கொண்டாலும் சரி, விதி என்று நினைத்தாலும் சரி, எப்படி என்றாலும் அறம் பிறழத் தலைப்பட்டால் அழிவின் தொடக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


அறம் ஒன்றும் அவசரப்படாது.  நின்று, நிதானமாக வேலை செய்யும். நமக்குத்தான் என்பது வருடம், நூறு வருடம் என்று ஆயுள் கணக்கு இருக்கிறது. அறத்திற்கு காலம் ஒரு பொருட்டு அல்ல. அது என்றும் நிலைத்து நிற்பது. அது தன் பாட்டுக்கு தன் வேலையைத் தொடரும். 






No comments:

Post a Comment