Saturday, June 25, 2022

கந்தரலங்காரம் - 60 - கிலேசம்

 கந்தரலங்காரம் - 60 - கிலேசம் 


நமக்கு எவ்வளவோ துன்பங்கள் வந்து இருக்கிறன்றன. இனியும் வரலாம். 


அருணகிரிநாதர் மனிதனுக்கு வரும் துன்பங்களை எல்லாம் இரண்டாகப் பிரிக்கிறார். மொத்தமே இரண்டு வகையான துன்பங்கள்தான் உண்டு. 


ஒன்று உடலுக்கு வரும் துன்பம். 


மற்றது மனதுக்கு வரும் துன்பம். 


இதில், மனதுக்கு வரும் துன்பம்தான் மிக மிக அதிகமானது. தலைவலி, கால்வலி, வயிற்று வலி போன்ற உடல் சார்ந்த துன்பங்கள் வரும் போகும். காய்ச்சல், சளி, போன்றவை வந்து போகும் தன்மை கொண்டவை. ஏதோ விபத்தில் கை கால் முறிந்து விட்டால் கூட கட்டுப் போட்டு சரியாகி விடும். 


மிக மிக சிறிய அளவிலான உடல் சார்ந்த துன்பங்கள்தான் தீர்க்க முடியாமல் நீண்ட நாள் இழுத்துக் கொண்டு இருக்கும். பெரும்பாலான உடல் சார்ந்த துன்பங்கள் அப்படி அல்ல.


ஆனால், இந்த மனம் சார்ந்த துன்பங்கள் இருக்கிறதே, அதற்கு ஒரு எல்லை கிடையாது. 


பயம், பொறாமை, வெறுமை, படபடப்பு, மன அழுத்தம், வெறுப்பு, கோபம், ஏக்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


எவ்வளவு செல்வம் இருந்தாலும், மற்றவன் என்னை விட அதிகம் வைத்து இருக்கிறானே என்ற எண்ணம் வந்து விட்டால், அந்த மனத் துயருக்கு ஏது மருந்து? 


கிலேசம் என்றால் துன்பம். 


உடல் கிலேசம், மனக் கிலேசம் என்கிறார் அருணகிரிநாதர். 


உடலை சரியாக வைத்துக் கொள்ள உடல் பயிற்சி, உணவு கட்டுப் பாடு, அதையும் மீறி ஏதாவது வந்து விட்டால் மருத்துவரை நாடி பரிசோதனைகள் செய்து, மருந்து உண்டு உடல் துன்பத்தைப் போக்கிக் கொள்கிறோம். 


மனத் துன்பத்தை என்ன செய்வது? சிக்கல் என்ன என்றால், பல நேரம், மன துன்பம் இருக்கிறது என்று கூடத் தெரியாது. 


அருணகிரிநாதர் இரண்டு துன்பங்களும் ஏன் வந்தன, அவை வராமல் எப்படி தடுப்பது என்று கூறுகிறார். 


பாடல் 


சிந்திக்கிலேனின்று சேவிக்கிலேன் றண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேனொன்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்

சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேனுண்மை சாதிக்கிலேன்

புந்திக்கிலேசமுங் காயக்கிலேசமும் போக்குதற்கே.


சீர் பிரித்த பின் 


சிந்திக்கிலேன் நின்று  சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேன் ஒன்றும்  வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்

சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்

புந்திக்கிலேசம்  காயக்கிலேசமும் போக்குதற்கே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/60.html



(click the above link to continue reading)



சிந்திக்கிலேன் = சிந்திக்க மாட்டேன், மனதில் நினைக்க மாட்டேன் 


நின்று  சேவிக்கிலேன் = நின்று வணங்க மாட்டேன் 


தண்டைச் சிற்றடியை =  தண்டை அணிந்த சிறிய திருவடியை 


வந்திக்கிலேன் = வணங்க மாட்டேன் 


ஒன்றும்  வாழ்த்துகிலேன் = ஒரு வாழ்த்தும் சொல்ல மாட்டேன் 


மயில்வாகனனைச் = மயில் வாகனனை, முருகனை 


சந்திக்கிலேன் = சந்திக்க மாட்டேன் 


பொய்யை நிந்திக்கிலேன் = பொய்யை வெறுக்க மாட்டேன் 


உண்மை சாதிக்கிலேன் = உண்மையை நிலை நிறுத்த முயல மாட்டேன் 


புந்திக்கிலேசம் = புத்தியில், ,மனதில் வரும் துன்பத்தையும் 


காயக்கிலேசமும் =உடலுக்கு வரும் துன்பத்தையும் 


போக்குதற்கே. = போக்குவதற்கு 


இவை ஒன்றும் செய்யாமல் "ஐயோ, எனக்கு உடல் துன்பம் வந்து விட்டதே, மன உளைச்சலில் கிடந்து உழல்கின்றேனே" என்று வருந்துவதில் பயன் இல்லை. 


இதில் ஓரிரண்டு செய்திகளை நாம் ஆழ்ந்து சிந்திக்கலாம்.



"பொய்யை நிந்திக்கிலேன்". பொய் என்றால் தவறானவை என்று பொருள் கொள்ள வேண்டும். இன்று என்ன நடக்கிறது? தவறுகள் போற்றப் படுகின்றன. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பவர்கள் பெரிய திறமைசாலிகள் என்று வியக்கப்படுகிரார்கள். 


"அவர் பணம் வாங்கிட்டார்ணா, எப்படியாவது காரியத்தை முடித்து கொடுத்து விடுவார் " என்று பணம் வாங்குபவரை புகழும் காலம் வந்து விட்டது. 


"சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து வெளியில் வந்து விடுவார்...பெரிய கில்லாடி" என்று சட்டத்தை மீறுபவர்களுக்கு புகழாரம். 


பணம் கொடுத்து பிள்ளைக்கு கல்லூரியில் இடம் வாங்கிய தகப்பன் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார். தலை குனிவதை விட்டு விட்டு. 


மனக் கிலேசம் வராமல் என்ன செய்யும் ?


"சிந்திக்கிலேன்". காலையில் எழுந்தவுடன் youtube இல்  அல்லது ஏதோ ஒரு mp3 இல் பக்திப் பாடலை ஓட விட்டுக் கொண்டு, அடுப்படி வேலை எல்லாம் நடக்கும். கேட்டால் பக்தி என்பது. அந்த ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்காமல் காப்பி கூட குடிப்பது இல்லை என்று பெருமை வேறு. தவறு இல்லை. ஆனால், அது பக்தி இல்லை. மனம் ஒன்ற வேண்டும். ஒரு வரி, ஒரு சொல் ...அது பற்றி சிந்திக்க வேண்டும். 


"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற ஒரு வாக்கியத்தைப் படித்த பட்டினத்தார் அத்தைனையும் துறந்தார். 


நாமும் இந்த வரியை எத்தனையோ முறை படித்து இருக்கிறோம். ஒன்றையும் விட முடியவில்லை. காரணம்,  "சிந்தனை இல்லை". ஏதோ இரண்டும் இரண்டும் நாலு என்று வாய்ப்பாடு போல படித்துவிட்டு மேலே போய் விடுகிறோம். 


சிந்தனை இல்லை, 

பணிவு இல்லை,

பொய்யின் மேல் வெறுப்பு இல்லை, 

உண்மை மேல் நாட்டம் இல்லை, 

இறை தேடல் இல்லை, 

வாழ்த்தும் மனம் இல்லை, 


துன்பம் எப்படிப் போகும் என்று கேட்கிறார். 










No comments:

Post a Comment