Monday, June 20, 2022

வில்லி பாரதம் - இராஜ சூய யாகம் - பாகம் 1 - முதற் பூசை

 வில்லி பாரதம் - இராஜ சூய யாகம் - பாகம் 1 - முதற் பூசை


கம்ப இராமாயணம் அளவுக்கு வில்லி பாரதம் நம் மக்களிடை பெரிதாகப் போய்ச் சேரவில்லை. 


இராமயணத்தை விட கதை அமைப்பில், திருப்பங்களில், மனித மனச் சிக்கல்களில் பாரதம் சுவாரசியமானது என்றாலும், அது இராமாயணம் அளவுக்கு பிரபலமாகவில்லை என்பதும் உண்மைதான். 


அதற்கு பெரியவர்கள் ஒரு காரணம் சொல்லுவார்கள். 


அறம் என்றால் வேதம் முதலான உயர் நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் என்பார்கள். 


இராமாயணம் அறத்தை நேர் முறையில் சொல்லத் தலைப்பட்டது. 


பாரதம் எதைச் செய்யக் கூடாது என்று சொல்லத் தலைப்பட்டது. 


இருந்தும், நேர்மறையான காப்பியத்துக்கு கிடைத்த பிரபலம் மறைமுகமாக கூறிய பாரதத்துக்கு கிடைக்கவில்லை என்பது யதார்த்தம். 


இருந்தும், வில்லி பாரதத்தில் பல சுவையான இடங்கள், அழகான கவிதைகள் இருக்கின்றன. 


அதில் சிலவற்றைப் பார்ப்போம். 


தர்மன் அசுவமேத யாகம் செய்து முடித்துவிட்டான். யாகம் முடித்த பின், யாருக்கு முதல் மரியாதை தருவது என்று தர்மன், பீஷமரை கேட்கிறான். 


யாரை எங்கே வைப்பது என்பதில் நம்மவர்கள் மிகுந்த முக்கியத்துவம் தந்து இருக்கிறார்கள். 


எதையும் ஒரு வரிசைப்படி செய்வது என்பது நம்மவர்கள் கலாசாரம். 


வீட்டில் ஒரு விழா, நிகழ்ச்சி என்றால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு முதலில் மரியாதை செய்ய வேண்டும். மரியாதை என்பதெல்லாம் குறைந்து கொண்டே வரும் இந்தக் காலத்தில் அதைப் பற்றி பேசுவது கூட சரி இல்லையோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. 


பொய் சொல்லி, ஊரை ஏமாற்றி, களவு எடுத்து, பணம் சேர்பவனுக்கு மாலை, மரியாதை என்று ஆகிவிட்ட காலத்தில் மரியாதை பற்றி என்ன சொல்லுவது?


இருந்தும், எப்படி இருந்த கலாசாரம் என்றாவது தெரிந்து கொள்ளலாமே?


பீஷ்மரையும், அங்கு இருந்த முனிவர்களையும், பெரியவர்களையும் நோக்கிக் கேட்கிறான் "யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும், கூறுங்கள்" என்று. 


பாடல் 



'பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகைக்

                                குலத்தும் உற்பவித்த

சுரபதி குழாத்தில் யாவரே பெறுவார், நவிலும் முற்பூசை,

                                மற்று'' என்ன,

கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன், கங்கையின்

                                திருமகன், தெய்வச்

சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி, தொல்

                                முனிவரையும் நோக்கி,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_20.html



(pl click the above link to continue reading)


பரிதியும் = சூரியனும் 

மதியும் = சந்திரனும் 

வன்னியும் = அக்கினியும் 


முதலாம் = முதலிய 


பல் வகைக் = பல வகை 


குலத்தும் = குலத்தில் (பலவிதமான அரச குலத்தில்) 


உற்பவித்த = தோன்றிய 


சுரபதி குழாத்தில் =  அரசர் குலத்தில் 


 யாவரே பெறுவார் = யார் பெறத் தகுதியானவர் 


நவிலும் = சொல்லுங்கள் 


முற்பூசை = முதல் மரியாதை 


மற்று'' என்ன, = என்று 


கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் = அட்ட வசுக்களில் ஒருவரும் 


கங்கையின்  திருமகன் = கங்கையின் மைந்தனுமான 


தெய்வச் = தெய்வத் தன்மை பொருந்திய 


சுருதி  = வேதம், வேதங்களில் கூறிய மாதிரி 


மா மகம் = பெரிய யாகத்தை 


செய் புனிதனை நோக்கி = செய்து தந்த புனிதனை நோக்கி  (வியாசர்) 


தொல் முனிவரையும் நோக்கி, = வயதில் மூத்த முனிவர்களையும் பார்த்து 


பீஷ்மன், வியாசர், மற்றும் உள்ள முனிவர்களை நோக்கி தர்மன் கேட்கிறான் "யாருக்கு நான் முதல் மரியாதை செய்ய வேண்டும் "  என்று 


இங்கே ஒரு கணம் நிறுத்துவோம். 


இராஜசூய யாகம் நடந்து முடிந்துவிட்டது. 


அத்தனை அரசர்களும் இருக்கிறார்கள். துரியோதனனும் இருக்கிறான். யாருக்கு முதல் மரியாதை செய்தாலும், மற்றவர்களுக்கு கோபம் வரும். 


யாகம் முடிந்தவுடன் சண்டை ஆரம்பித்து விடும். 


ஒரு சிக்கலான இடம். செய்தாலும் தப்பு, செய்யாவிட்டாலும் தப்பு என்ற ஒரு இடம். 


ஒரு படபடப்பு,  பதைபதைப்பு நம்மை பற்றிக் கொள்கிறது அல்லவா?  


ஒரு எதிர்பார்ப்பு, என்ன நடக்கப் போகிறதோ என்று ஒரு திகில், ஒரு சுவாரசியம் வருகிறதா இல்லையா?


அடுத்து என்ன ஆயிற்று என்று பார்ப்போம். 





No comments:

Post a Comment