Thursday, June 2, 2022

திருக்குறள் - வாயால் சொலல்

 திருக்குறள் - வாயால் சொலல் 


ஒழுக்கம் பற்றி, அதன் சிறப்பு பற்றி, அதில் இருந்து வழுவுவதால் வரும் தீமை பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லக் கேட்டோம். 


ஒருவன் ஒழுக்கம் உடையவனா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?


ஏதாவது கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி இருந்தால் அதை வைத்து தீர்மானிக்கலாம். அல்லது யாரிடமாவது நன்னடத்தை சான்றிதழ் வாங்கி வரச் சொல்லலாமா? 


அதெல்லாம் சரி வராது. மிக எளிய வழி இருக்கிறது. 


அவன் பேசுவதை கவனித்தாலே போதும். 


ஒருவன் வாயில் இருந்து தீய சொற்கள் வந்தால், அவன் ஒழுக்கம் இல்லாதவன் என்று அர்த்தம். 


காரணம், வள்ளுவர் சொல்கிறார், "ஒழுக்கம் உடையவர்களுக்கு தீய சொற்கள் தவறிக் கூட அவர்கள் வாயில் இருந்து வராதாம் "


பாடல் 


ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post.html


(pl click the above link to continue reading)


ஒழுக்கம் உடையவர்க்கு = ஒழுக்கம் உள்ளவர்களுக்கு 


ஒல்லாவே = முடியாதே, வராதே 


தீய = தீய சொற்கள் 


வழுக்கியும் = தவறியும் 


வாயால் சொலல் = வாயால் சொல்வது 


மற்றவர்களை விடுங்கள். 


நாம் நம்மைப் பற்றி சிந்திப்போம். 


எப்போதாவது பிள்ளைகளை கடிந்து திட்டி இருக்கிறீர்களா? கணவன்/மனைவி மனம் புண் படும்படி பேசி இருக்கீர்களா ? உடன் பிறப்பு,, நட்பு வருந்தும் படி ஏதேனும் சொல்லி இருக்கிறீர்களா? 


அப்படி என்றால் நீங்கள் ஒழுக்கம் இல்லாதவர் என்று அர்த்தம் என்று வள்ளுவர் சொல்கிறார். 


கோபத்தில் சொல்லி விட்டேன், 

தெரியாமல் சொல்லி விட்டேன், 

அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, 

அவன் தான் முதலில் சொன்னான் நான் பதிலுக்குச் சொன்னேன் 


என்றெல்லாம் சொல்லிப் பலன் இல்லை. 


இப்படி தவறி சொல் வரும் என்று வள்ளுவருக்குத் தெரியும். 


அதனால் தான் "வழுக்கியும்" என்று சொல்கிறார். 


தரை வழுக்கி விழுந்தால் நாம் என்ன சொல்வோம். ஒரே பாசி, ரொம்ப ஈரமாக இருந்தது, வழுக்கி விட்டது...விழுந்து விட்டேன் என்று சொல்லுவோம் அல்லவா? விழுந்தது என் பிழை அல்ல. தரை வழுக்கி விட்டது, நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுவோம். 


வள்ளுவர் சொல்கிறார், அது வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், தவறுதலாகக் கூட தீய சொற்கள் வராது, ஒழுக்கம் உடையவர்கள் வாயில் இருந்து என்கிறார். 


குறளில் "தீய" என்று மட்டும் தான் இருக்கிறது. அதை ஏன் தீய சொற்கள் என்று எடுக்க வேண்டும்? தீய செயல் என்று ஏன் எடுக்கக் கூடாது?


பின்னால், "வாயால் சொலல்" என்று வருவதை வைத்து, "தீய" என்பது "தீய சொல்லைக் குறிக்கும் என்கிறார் பரிமேலழகர்.


அது என்ன "வாயால் சொலல்". வாயால் தான் சொல்ல முடியும்? மூக்கால், காதால் சொல்ல முடியுமா? சொலல் என்று மட்டும் போட்டு இருக்கலாமே ?


இதை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். 


மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த காலனை சிவ பெருமான் காலால் உதைத்தார் என்று படித்து இருக்கிறோம். 


அது என்ன காலால் உதைப்பது? கையால் உதைப்பது என்று ஒன்று இருக்கிறதா என்ன? 


இறைவன் திருவடி என்றும் அருள் செய்யக் கூடியது. முதன் முறையாக அருள் செய்வதற்குப் பதில் தண்டனை தருகிறது.  எனவே தான் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு தொழிலைச் செய்ததால் அதை தனியாகக் கூறினார். 


வாய் என்றால் நல்ல சொற்களைத் தான் சொல்ல வேண்டும். அதை விடுத்து தீய சொற்களை சொல்வதால், அது வாய் செய்யாத வேலை அல்லது செய்யக் கூடாத வேலை என்பதால் அதை தனியே சுட்டிக் காட்டுகிறார். 


"வாயால் சொலல்" என்று இருக்கிறது.  சொல்லுதல் என்றால் ஒரு தரம் சொல்லுவது என்று தான் அர்த்தம். சொல்லிக் கொண்டே இருப்பது என்று அர்த்தம் அல்ல. 


தமிழிலே சாதி ஒருமை என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. 


நாய் குரைக்கும் என்றால் ஒரு நாய் தான் குரைக்கும் என்று இல்லை. எல்லா நாயும் குரைக்கும். நாய்கள் குரைக்கும் என்று சொல்லி இருக்க வேண்டும். எங்கே நாய் என்பது சாதி ஒருமை. நாய் என்ற சாதிக்கு அது நின்றது. மாம்பழம் இனிக்கும், பசு பால் தரும் என்று சொல்லுவதைப் போல. 


சொலல் என்றால் ஏதோ ஒரு முறை சொல்லுவது மட்டும் அல்ல. எப்போதெல்லாம் சொல்லப் படுகிறதோ அப்போதெல்லாம். 


அதெல்லாம் சரி, "தீய" என்று சொல்கிறாரே...அது என்ன தீய? 


தீமை என்றால் பிறருக்கு தீமை பயக்கும் சொற்கள். 


சிலர் இனிக்க இனிக்க பேசுவார்கள். அப்படி பேசி பேசியே ஆளை கவிழ்த்து விடுவார்கள்.  அது தீமை தரும் சொல்.


பொய் சொல்லுதல், புரணி பேசுதல்,  பயனில பேசுதல், எல்லாமே தீய சொற்கள் தான். 


நாம் பேசுவதால் யாருக்காவது நன்மை விளையுமா என்று எண்ணிப் பேச வேண்டும். யாருக்குமே நன்மை இல்லை என்றால் எதற்காகப் பேச வேண்டும்? 


தவறிக் கூட தீய சொற்கள் வரக் கூடாது என்றால் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? எவ்வளவு பழக்கம் வேண்டும்? 


ஒழுக்கம் இருந்தால் தான் அது கை கூடும். 


சிந்திப்போம். 






1 comment:

  1. இன்சொல் எப்போதும்

    ReplyDelete