Wednesday, June 15, 2022

நான்மணிக்கடிகை - 6 - அறிவார் யார்?

 நான்மணிக்கடிகை -  6 - அறிவார் யார்? 


நான்மணிக்கடிகை என்ற நூல், வாழ்க்கையின் அனுபவத்தை, சாரத்தை வடித்துத் தரும் நூல். தங்கள் அனுபவத்தில் கண்டதை, நமக்கு உதவும் பொருட்டு எழுதி அருளிய நூல். 


தவறுகள் செய்து, அடிபட்டு, அனுபவங்களை சேகரித்து நாம் அந்தத் தவறுகளை செய்யாமல் இருக்கவும், அந்தத் துன்பங்களை அடையாமல் இருக்கவும், நம் மீது கருணை கொண்டு எழுதித் தந்த நூல். 


வீட்டில், பிள்ளையிடம் அம்மா சொல்லுவாளே "மழையில நனையதடா, காய்ச்சல் வரும்" என்று. அந்த அன்போடு, கரிசனத்தோடு கூறும் நூல். அம்மா ஒன்றும் மருத்துவர் கிடையாது. அவள் அனுபவம் சொல்கிறது மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று. 


அது போல உலக இயல்பை கவனித்து, யாதார்த்தை முழுவதும் உள்வாங்கி, இந்த உலகம் இப்படித் தான் இருக்கிறது. இது தான் இந்த உலகின் வரைபடம். இதை வைத்துக் கொண்டு நீ விரும்பிய இடத்தை அடையலாம் என்று நமக்கு ஒரு வழிகாட்டும் ஓரூர் நூல். 


ஏறக்குறைய நூறு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு அனுபவத் தெளிவு. 


அதில் சில பாடல்களை பகிர்ந்து கொள்ள ஆசை.


நாம் சிலபேரை அவர்கள் தோற்றம், அவர்கள் பொருளாதார நிலை, அவர்கள் உடுத்தும் உடை, பேசும் பேச்சு, அவர்கள் நிறம், அவர்கள் பிறந்த குலம் இவற்றை வைத்து எடை போடுவோம். 


அது சரியல்ல. 


ஒருவரை சரியாக எடை போடவேண்டும் என்றால் அவரோடு பழகி, அவரின் அறிவு, குணம், ஒழுக்க, செயல் இவற்றை அறிந்து பின் முடிவு செய்ய வேண்டும். 


இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவன், இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்று முடிவு செய்யக் கூடாது. எதையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை. 


பாடல் 


கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று

ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்

பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,

நல் ஆள் பிறக்கும் குடி?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_15.html


(Pl click the above link to continue reading)




கள்ளி = கள்ளி மரத்தின் 


வயிற்று இன்  = உள்ளே 


அகில் பிறக்கும் = அகில் என்ற வாசனைப் பொருள் தோன்றும் 


மான் வயிற்று = மானின் வயிற்றில் 


ஒள் அரிதாரம் பிறக்கும்  = முகத்தில் பூசும் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும் 


பெருங் கடலுள் = குடிக்க முடியாத, ,உப்பு நிறைந்த கடலின் இடையே 


பல் விலைய முத்தம் பிறக்கும் = விலை மதிக்க முடியாத பல வித முத்துக்கள் பிறக்கும் 


அறிவார் யார், = யாருக்குத் தெரியும் ?


நல் ஆள் பிறக்கும் குடி? = நல்ல மனிதர்கள் பிறக்கும் இடம் 


நல்ல மனிதர்கள் எங்கும் தோன்றலாம். இங்குதான் தோன்ற வேண்டும், இங்கு தோன்ற முடியாது என்று நினைக்கக் கூடாது. நல்லது எங்கும் இருக்கலாம். ஒரு திறந்த மனத்தோடு உலகை அணுகினால் எல்லோரும் நட்பாவார்கள், பகை என்பது இருக்காது. யாரையும் உதாசீனம் செய்யும் எண்ணம் வராது, யாரையும் தவறாக நல்லவர்கள் என்று எடை போட்டு ஏமாற மாட்டோம். 


மிக எளிய, நடை முறையில் உள்ள உதாரணங்கள் மூலம், உயர்ந்த அனுபவத்தை சொல்லும் பாடல். 




No comments:

Post a Comment