Friday, June 10, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 1 - அறம் பொருள் கண்டார்

 

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 1 - அறம் பொருள் கண்டார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


)


இனி அதிகாரத்துக்குள் செல்வோம். 


இன்னொருவன் மனைவியை விரும்பவதில் என்ன தவறு. அவளுக்கும் பிடித்து இருக்கிறது. அவனுக்கும் பிடித்து இருக்கிறது. இருவர் மனமும் ஒத்துப் போகிறது என்றால் அதில் என்ன தவறு? 


ஒரு  வேளை அந்தப் பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அது தவறு. அவளும் அதற்கு உடன் படுகிறாள் என்றால் என்ன தவறு என்று கேள்வி கேட்கும் காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.


இப்படி எல்லாம் கேட்பார்கள் என்று அன்றே வள்ளுவருக்குத் தெரிந்து இருக்கிறது. அதற்கும் பதில் சொல்லி இருக்கிறார். 


அதை வள்ளுவர் சொல்லி இருக்கும் விதம் இருக்கிறதே, அது மிக அருமை. எப்படி ஒரு மனிதனால் சிந்திக்க முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது. 


"இன்னொருவன் மனைவியை விரும்பும் பேதைமை (மடத்தனம் அறம் பொருள் கண்டவர்களிடம் இருக்காது" 


என்று இரத்தின சுருக்கமாகச் சொல்கிறார். 


பாடல் 



பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


(pl click the above link to continue reading)


பிறன் = மற்றவன் 


பொருளாள் = உடைமையான பெண்ணை, மனைவியை 


பெட்டொழுகும் = காதலித்து வாழும் 


பேதைமை = அறிவீனம் 


ஞாலத்து = உலகில் 


அறம் பொருள் = அறம் பொருள் 


கண்டார்கண் = கண்டவர்களிடம்


இல் = இல்லை 



இதில் என்ன அவ்வளவு பெரிய ஆழமான கருத்து இருக்கிறது என்று கேட்கிறீர்களா. 


பரிமேலழகர் உரை செய்கிறார். 


"அறம் பொருள் கண்டார்" என்றால் என்ன. அறத்தையும், பொருளையும் போய் பார்த்து விட்டு வருவதா? "நேற்று வங்கியில் ஒரு கோடி ரூபாய் இருப்பதைக் கண்டேன்" என்றால் பொருளை கண்டுவிட்டேன் என்று அர்த்தமா?


இல்லை. 


அறம் பொருள் கண்டார் என்றால் அற நூல்களையும், பொருள் நூல்களையும் படித்து அறிந்தவர்கள் என்று அர்த்தம். 


சரி. 


ஆனால், வாழ்க்கை என்பது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று கூறுகளை உடையது. வள்ளுவர் அறம், பொருள் மட்டும்தானே சொல்லி இருக்கிறார். ஏன் இன்பம் பற்றிச் சொல்லவில்லை? 


ஏன் என்றால், இன்ப நூல்களில் இன்பம் அனுபவிப்பது மட்டும் தான் இருக்கும். அது யாரிடம் என்றெல்லாம் இருக்காது. அறம், பொருள், இன்பம் கண்டார் கண் இல் என்று போட்டிருந்தால், நான் படித்த பாலுணர்வு சார்ந்த புத்தகத்தில் விரும்பும் எந்தப் பெண்ணையும் அனுபவிக்கலாம் என்று போட்டு இருக்கிறதே என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். எனவே, வள்ளுவர் அறம் பொருள் கண்டார் இல் என்று இன்பத்தை சொல்லாமல் விட்டுவிட்டார். 


அவர் சொல்லாமல் விட்டதில் எவ்வளவு பொருள் இருக்கிறது பாருங்கள். 


இன்று பாலுணர்வு சார்ந்த (Pornography)  புத்தகங்கள், வீடியோக்கள், வலை தளங்கள் என்று எவ்வளவோ வந்துவிட்டன. அதில் அனைத்து வக்கிரங்களும் இருக்கின்றன. அதையெல்லாம் படித்து/பார்த்து விட்டு அதில் உள்ளது போல் நடக்கிறேன் என்று ஆரம்பித்து விடக் கூடாது. 


இன்னும் ஒரு படி மேலே போகிறார் பரிமேலழகர். 


"அறம் பொருள் கண்டார் கண் இல் " என்பதில், அற நூல்களையும், பொருள் நூல்களையும் அறிந்தவர்கள் என்று சொன்னார் அல்லவா. அதைப் படிக்காதவனுக்கு அறம் என்றால் என்ன என்று தெரியாது. பொருள் என்றால் என்ன என்று தெரியாது. அப்படிப்பட்டவனிடம் அறமும் பொருளும் நிற்காது. அறமும் பொருளும் நில்லாத இடத்தில் இன்பம் எப்படி நிற்கும்?


பிறன் மனை விழைந்து, அது எல்லோருக்கும் தெரிய வர, அவன் மனைவி அவனை வெறுத்து ஒதுக்குவாள். சட்ட சிக்கல்கள் பல வரும். பொருள் விரயம் ஆகும். வேலையை சரி வர செய்ய முடியாது. வருமான இழப்பு வரும். இருக்கின்ற சேமிப்பு குறையும். இறுதியில் துன்பம் வந்து சேரும். 


அறமும் பொருளும் இல்லாத இடத்தில் இன்பம் நில்லாது. இன்பம் வரலாம், ஆனால் அது எல்லாவற்றையும் கொண்டு போய் விடும். .


புகழ்,பொருள், உறவு, சுற்றம் என்று எதுவும் இருக்காது. .


ஒருவன் மற்றவனுடைய மனைவியை விரும்புகிறான் என்பது வெளியே தெரிய வந்தால், அவனை நம்பி யார் வீட்டினுள் விடுவார்கள். மற்றவன் மனைவியை விரும்பிய மாதிரி என் வீட்டு பெண்கள் மேலும் கை விட்டால் என்ன செய்வது என்று பயந்து அவனை சேர்க்க மாட்டார்கள். தனித்து விடப் படுவான். அவனுக்கு என்ன இன்பம் இருக்கும்? 


அது மட்டும் அல்ல, ஒழுக்கக் குறைவு ஏன் வருகிறது? கல்வி அறிவு இன்மையால். எது சரி, எது தவறு என்று அறியும் அறிவு இன்மையால். 


பரிமேலழகரில் இருந்து சற்று விலகி நாம் கொஞ்சம் வேறு கோணத்தில் சிந்திப்போம். 


"அறம் பொருள்" என்பதை அறத்தின் பொருளை என்று கொண்டால் வெறுமனே அற நூல்களை படித்தால் மட்டும் போதாது. அதன் பொருள் தெரிய வேண்டும். 


அப்படி உரை சொல்ல வழி இருக்கிறதா என்று கேட்டால்....


இன்று உலகில் தவறு செய்பவர்கள் பெரும்பாலானோர் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். படிக்காத பாமரன் "அது தவறு, பாவம்" என்று ஒதுங்கி ஒழுங்காக வாழ்கிறான். படித்தவன் எப்படி மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்வது என்று சிந்திக்கிறான். 


இராவணன் படிக்காத படிப்பா. "நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவை" உடையவன், பிறன் மனை விழைந்தான் அல்லவா? அற நூல்களை படித்து இருக்கிறான். திருப்பி அழகாக சொல்கிறான். ஆனால், அதன் பொருளை புரிந்து கொள்ளவில்லை. 


"அறம் என்று ஒன்று உண்டு, அது அமரர்க்கும் அறிய ஒண்ணாதது" என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். 


"ஈறில் அறம்" என்பான் கம்பன். எல்லை இல்லாது 


படித்தால் மட்டும் போதாது, அதன் பொருள் தெரிந்து நடக்க வேண்டும். 


"அறம் பொருள் கண்டார் கண் இல்" என்பதை அறத்தின் பொருளை கண்டவர்களிடம் இல்லை என்று கொள்ளல்லாம். 


இலக்கண முறைப்படி அது சரியா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். சரி இல்லை என்றால் விட்டுவிடலாம். 


மேலும் சிந்திப்போம். .





No comments:

Post a Comment