Friday, June 17, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 4 - எனைத்துணையர் ஆயினும் என்னாம்

 

திருக்குறள் - பிறனில் விழையாமை - 4 - எனைத்துணையர் ஆயினும் என்னாம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html



)


சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் எடுப்பது மிகக் கடினம். பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். கல்வி, அறிவு, வேலை, பதவி, மற்றவர்களுக்கு உதவுவது என்று பல செய்து ஒரு நற்பெயரை சம்பாதிக்க வேண்டும். 


ஆனால், அத்தனை உழைப்பு ஒரு நொடியில் வீணாகிவிடும். 


எப்போது என்றால், தன் நிலை மறந்து மற்றவன் வீட்டில் அவன் மனைவியை அடையும் நோக்கத்தில் சென்றால். 


அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அதனால் ஒரு  பயனும் இல்லை ,  எல்லாம் வீணாகிப் போய்விடும் என்கிறார் வள்ளுவர்.


பாடல் 


எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


(pl click the above link to continue reading)



எனைத்துணையர் = எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் 


 ஆயினும் = ஆனாலும் 


என்னாம்  = என்ன பலன் 


தினைத்துணையும் = ஒரு நொடியளவும் 


தேரான் = சிந்திக்காமல் 


பிறனில் புகல் = மற்றவன் வீட்டில் புகுந்தவன் 


வள்ளுவர் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து, தெரிந்து எடுத்துப் கையாள்கிறார். 


"எனைத்துணையர் ஆயினும் என்னாம்". ஒருவன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் என்ன என்று கேட்கிறார். அவன் பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம், செல்வம், படிப்பு எது ஒன்றாலும் பயன் இல்லை. எல்லாம் செல்லாக் காசாகிவிடும் என்கிறார். 


எல்லோருக்கும் தெரியும் இது. இருந்தும் காமம் கண்ணை மறைக்கும். 


இராவணன் தவறினான். 


இந்திரன் தவறினான். தேவர்களுக்கு எல்லாம் அதிபதி, கௌதமர் வந்துவிட்டார் என்று அறிந்து பூனை வடிவம் கொண்டு தப்பி ஓடினான். தேவ இராசா ஒரு சிறு விலங்காகிப் போனான். அவன் செய்த தவம், புகழ், சக்தி, ஒன்றும் அவனுக்கு கை கொடுக்கவில்லை. 


விஸ்வாமித்திரன் செய்த அத்தனை தவத்தையும் ஒரு நொடியில் இழந்தான். 


எவ்வளவு பெரிய ஆளையும் ஒரு நொடியில் புரட்டிப் போட்டு விடும் காமம். 


பெரிய ஆட்கள் கதியே இது என்றால், சிறியவர்கள் கதி என்ன ஆகும். பெரிய பெரிய கப்பலே மூழ்கும் என்றால், சிறு படகு எம்மாத்திரம். 


அடுத்தது, பிறனில் விழைந்தான் என்று கூட வள்ளுவர் சொல்லாவில்லை. 


"தேரான் பிறனில் புகல்" : எது சரி, எது தவறு என்று தெரியாமல் ஒருவன் வீட்டுக்குள் செல்பவன் என்கிறான். அப்படி ஒரு அறிவு இல்லாதவன் மற்றவன் இல்லத்துக்கு செல்வதே குற்றம் என்கிறார்.   


மற்றவன் இருப்பான். அவன் மனைவி இருப்பாள். நான் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். தவறு எதுவும் செய்து விடக் கூடாது. என் பார்வையோ, சொல்லோ, செயலோ தவறு இழைத்து விடக் கூடாது என்று அறிந்து, தெளிந்து செல்ல வேண்டும் என்கிறார். அந்த தெளிவு இல்லாவிட்டால் போகாதே என்கிறார். 


இன்னொரு நுணுக்கத்தை பரிமேலழகர் எடுத்துக் காட்டுகிறார். 


"எனைத்துணையர்" , "தேரான்" 


என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. 


முதலில் பன்மையில் ஆரம்பிக்கிறார். 


"எனைத்துணையன்" என்று போட்டு இருக்கலாம். துணையர் என்று மரியாதை காரணமாக பன்மையில் ஆரம்பிக்கிறார். 


அறிவு இல்லாமல் செல்பவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது என்று "தேரான்" என்று ஒரு ஒருமையில் குறிப்பிடுகிறார். தேரார் என்று வந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன மரியாதை என்று ஒருமையில் அழைக்கிறார் என்று பரிமேலழகர் குறிப்பிடுகிறார். 


(பரிமேல் அழகர் அப்படிச் சொல்லவில்லை. "ஒருமை பன்மை மயக்கம் மரியாதை நிமித்தம் மயங்கிற்று" என்பார். நான் சற்று விளக்கினேன்).


மற்றவர்கள் வீட்டுக்குச் செல்வதனால, மிகவும் ஆராய்ந்து, நேரம், ,காலம், எல்லாம் அறிந்து எதற்காகச் செல்கிறோம், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று அறிந்து,தெளிந்து செல்ல வேண்டும் என்கிறார். 


எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள். 




No comments:

Post a Comment