Tuesday, June 7, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 8

      

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 8


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


பாகம்  6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


பாகம்  7: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.


மூன்று பாடல்களில் பதில் தருகிறான். 


முதல் பாடலில் 


"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"


என்றான் என்ற செய்தியை முந்தைய பதிவில் சிந்தித்தோம். 


மேலும் அனுமன் தொடர்கிறான். 


இப்போதாவது "வீர நீ யார்" என்ற கேள்விக்கு தன்னைப் பற்றிக் கூறினானா ?


அனுமன் என்ன சொல்கிறான் என்று காண்போம்.


"அப்படிப்பட்ட சுக்ரீவனுக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் வாலி. அவன் மிகுந்த பலம் பொருந்தியவன். இந்த இராவணன் இருக்கிறானே அவனை இந்த வாலி தன் வாலில் கட்டி எட்டுத் திசையும் பாய்ந்து செல்லும் வலிமை மிக்கவன். அது மட்டும் அல்ல தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவர்கள் அமுதம் கடைந்த போது அவர்களுக்கு உதவி செய்தவன்"

என்கிறான். 


நீ யார் என்று கேட்ட கேள்விக்கு முதலில் சுக்ரீவன் பற்றிச் சொன்னான். இப்போது வாலி பற்றிச் சொல்கிறான். 



பாடல் 


மற்றவன் முன்னோன் வாலி,

    இராவணன் வலி தன் வாலின்

இற்று உகக் கட்டி, எட்டுத்

    திசையினும் எழுந்து பாய்ந்த

வெற்றியன், தேவர் வேண்ட,

    வேலையை விலங்கல் மத்தில்

சுற்றிய நாகம் தேய

    அமுது எழக் கடைந்த தோளான்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8.html


(pl click the above link to continue reading) 


மற்றவன் = மற்று + அவன் = சுக்ரீவன் 


முன்னோன் = முன் பிறந்தவன், அண்ணன், 


வாலி, = வாலி என்பவன் 


இராவணன் = இராவணனின் 


வலி = வலிமை எல்லாம் 


தன் வாலின் = தன்னுடைய (வாலியின் வாலில்) 


இற்று = நொறுங்கும் படி 


உகக் கட்டி = இறுகக் கட்டி 


எட்டுத்  திசையினும் = எட்டு திசையிலும் 


எழுந்து பாய்ந்த வெற்றியன் = எழுந்து, பாய்ந்து செல்லும் வெற்றி உடையவன் 


தேவர் வேண்ட = தேவர்கள் வேண்டிக் கொள்ள 


வேலையை = கடலை 


விலங்கல் = மலையை (மேரு மலையை) 


மத்தில்  = மத்தாக 


சுற்றிய நாகம் தேய = சுற்றய நாகம் வருந்த 


அமுது எழக் கடைந்த தோளான். = அமுது எழ கடைந்த தோள் வலிமை உடையவன் 


இங்கே இரண்டு வாலி பற்றிய  கதைகளை நாம் தெரிந்து கொள்வோம்.


முதலாவது, 


நாம் எல்லாம் இறைவனை எட்டு திக்கிலும் நோக்கித் தொழுவோம். வாலி அப்படி அல்ல, அவன் ஒவ்வொரு நாளும் எட்டு திசைக்கும் சென்று தொழுவான். ஒரு பாய்ச்சல் கிழக்கு. அங்கிருந்து ஒரு பாய்ச்சல் வட கிழக்குத் திசை. அங்கிருந்து ஒரு பாய்ச்சல் வட திசை என்று ஒவ்வொரு நாளும் எட்டு திசைக்கும் சென்று இறைவனை தொழுவான். அது கூட பெரிய காரியம் இல்லை. இப்படி எட்டு திசைக்கும் போய் கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் ஆகும். மத்த வேலைகளை யார் கவனிப்பது? எனவே அவன் என்ன செய்வான் என்றால், கிட்கிந்தாவில் இருந்து ஒரு தாவு, கிழக்கு திசை. பூசைகளை முடித்து விட்டு அங்கிருந்து ஒரு தாவல். கிட்கிந்தா. பின் வேறு ஒரு திசை. இப்படி ஒவ்வொரு திசைக்கும் செல்வானாம். அதற்கு நேரம் வேண்டாமா என்றால், யோசித்துக் கொள்ளுங்கள். எட்டு திசை என்றால் பதினாறு முறை பயணம் செய்ய வேண்டும். அப்புறம் பூஜை, அப்புறம் அரசை கவனிக்க வேண்டும். அப்படி என்றால் எவ்வளவு வேகமாக அவன் போய் இருக்க வேண்டும். ஒரு நொடியில் என்று செல்வோமே அது போல. அப்படி என்றால் எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும்.


அப்படி தாவி தாவிச் செல்லும் போது, தன் வாலில் இராவணனை கட்டிக் கொண்டு தாவுவானாம். இராவணனுக்கு எப்படி இருந்து இருக்கும். வாலில் கட்டிக் கொண்டு அவ்வளவு வேகமாக தாவும் போது இராவணன் என்ன பாடு பட்டிருப்பான். இராவணனே பெரிய பலம் வாய்ந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அந்த இராவணனை ஒரு பூச்சி மாதிரி வாலில் கட்டி வேடிக்கை காட்டும் வாலி எவ்வளவு பலசாலியாக இருக்க வேண்டும் 


அது மட்டும் அல்ல, 


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாக, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு கடைந்தார்கள். அவர்கள் கடையும் போது, அந்த பாம்புக்கு உடல் வலி ஏற்பட்டு அது தளர்ந்து போனது. அதனால், மேரு மலை சரியத் தொடங்கிவிட்டது. சரியும் மலையை யார் தூக்கிப் பிடித்து நிறுத்துவது?  அவ்வளவு பலம் யாரிடம் இருக்கிறது? தேவர்கள் எல்லாம் சென்று வாலியிடம் வேண்டினார்கள். அனைத்து தேவர்களும், அனைத்து அசுரர்களும் சேர்ந்து செய்ய முடியாத ஒன்றை வாலி ஒருவனால் செய்ய முடியும் என்று அவனிடம் வேண்டினார்கள். 


அவன், "நீங்கள் எல்லாம் விலகுங்கள்" என்று அவர்களை விலக்கி விட்டு, தான் ஒருவனே அந்த மலையை நிலை நிறுத்தி, தான் ஒருவனே கடைந்து, அமுதை எடுத்து அவர்களுக்கு கொடுத்தானாம். அப்படி என்றால் அவன் வலிமை எவ்வளவு இருக்கும். 


இதை கம்பன் இன்னொரு இடத்திலும் சொல்லுவான். 


வாலி இறந்து கிடக்கிறான். அவன் மேல் அவன் மனைவி விழுந்து அழுகிறாள். 


"ஐயா நீ அமுதம் தந்ததால் நாங்கள் எல்லாம் உயிர் பிழைத்தோம் என்று நீ செய்த உதவியை நினைத்து நீ இன்று வானுலகம் போகும் போது அவர்கள் எல்லாம் உன்னை வரவேற்க அன்று பூத்த மலர்களைத் வாசலில் வந்து நின்றார்களா" என்று புலம்புவாள்


‘எந்தாய்! நீ அமிழ்து ஈய யாம் எலாம்

உய்ந்தாம் “ என்று உபகாரம் உன்னுவார்

நந்தா நாள் மலர் சிந்தி நண்பொடும்

வந்தாரோ எதிர்? வான் உளார் எலாம்."


இனி நாம் தொடங்கிய பாடலுக்குப் போவோம். 


கேட்ட கேள்வி என்ன?  "வீரனே நீ யார்" என்று 


சொன்ன பதில் - முதலில் சுக்ரீவன் பற்றி, அடுத்தது வாலி பற்றி. 


இன்னும் தன்னைப் பற்றி அனுமன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 


காரணம் என்ன? 


நாளையும் சிந்திப்போம். 



No comments:

Post a Comment