Wednesday, June 1, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 5

   

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 5


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html

பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


பின் மனதுக்குள் நினைக்கிறாள் 


"சரி, இப்ப என்ன? ஒரு வேளை இவன் அரக்கனா இருப்பானோ என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. அரக்கனாகவே இருந்து விட்டுப் போகட்டும். அல்லது ஒரு தேவனாக இருக்கட்டும். இல்லை, பார்பதற்கு குரங்கு இனத்தை சார்ந்தவன் போல இருக்கிறான். அதில் ஒருவனாகவே இருந்து விட்டுப் போகட்டும். கொடுமை செய்பவனாக இருக்கட்டும் அல்லது இரக்கம் உள்ளவனாக இருக்கட்டும். யாராக இருந்தால் என்ன? இங்கு வந்து இராமனின் பேரைச் சொல்லி, என் மனத்தை உருக்கி விட்டான். எனக்கு ஒரு புது உணர்வைத் தந்தான். இதை விட வேறு என்ன வேண்டும்? "


என்று அவள் சிந்திக்கிறாள். 




பாடல் 


அரக்கனே ஆக : வேறு ஓர்

    அமரனே ஆக : அன்றிக்

குரக்கு இனத்து ஒருவனேதான்

    ஆகுக : கொடுமை ஆக :

இரக்கமே ஆக : வந்து இங்கு

    எம்பிரான் நாமம் சொல்லி

உருக்கினன் உணர்வைத், தந்தான்

    உயிர்; இதின் உதவி உண்டோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


(pl click the above link to continue reading) 



அரக்கனே ஆக = அரக்கனாகவே இருக்கட்டும் 


வேறு ஓர் = அல்லது வேறு ஒரு 


அமரனே ஆக = தேவனாகவே இருக்கட்டும் 


அன்றிக் = அல்லது 


குரக்கு இனத்து = குரங்கு இனத்தில் 


ஒருவனேதான் ஆகுக = ஒருவனாக இருக்கட்டும் 


கொடுமை ஆக = கொடுமை உள்ளம் உள்ளவனாக இருக்கட்டும் 


இரக்கமே ஆக = இரக்க குணம் உள்ளவனாக இருந்து விட்டுப் போகட்டும் 


வந்து இங்கு = இங்கு வந்து 


எம்பிரான் நாமம் சொல்லி = என் நாயகன் இராமனின் பெயரைச் சொல்லி 


உருக்கினன் உணர்வைத் = உள்ளத்தை உருக்கி விட்டான் 


தந்தான்  உயிர் =  போக இருந்த உயிரை போகாமல் தடுத்து நிறுத்தி அதை எனக்கு மீண்டும் தந்தான் 


இதின் உதவி உண்டோ? = இதை விட பெரிய உதவி வேறு என்ன இருக்க முடியும் ?


யாராக இருந்தால் என்ன? இராமன் பேரைச் சொன்னான். அது போதும் என்கிறாள் சீதை. 


பிரான் = பிரியான் என்பதன் மருவூ 


எம்பிரான் = என்னை விட்டு எப்போதும் பிரியாதவன் 


அவன் யார் என்று இன்னமும் சீதைக்கு புரியவில்லை. இவனாக இருக்குமோ, ,அவனாக இருக்குமோ என்று ஐயுறுகிறாள். .


இருந்தும், யாரா இருந்தா என்ன, இராமன் பேரைச் சொல்லிவிட்டான், அது போதும் என்று இருக்கிறாள். 


உள்ளம் உருகியது, உயிர் மீண்டு வந்தது ...எதனால்?


அனுமனின் பேச்சால். 


பேச்சுக்கு அவ்வளவு வலிமை உண்டு. உள்ளதை உருக்கும். உயிரை நனைக்கும். 


நம்மிடம் ஒரு உயர்ந்த பொருள் இருந்தால் அதை எவ்வளவு பாதுகாப்பாக வைத்து இருப்போம்?


பல அருங்காட்சி நிலையங்களில் பல விலை மதிக்க முடியாத ஓவியங்கள், பொருள்கள் இருக்கும். அதை எல்லா நேரத்திலும் எல்லோரும் பார்க்கும் படி வைக்க மாட்டார்கள். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தினங்களில் மட்டும் காட்சிக்கு வைப்பார்கள். 


எல்லா நேரமும் வைத்து இருந்தால் அதன் மதிப்பு போய் விடும். எப்போதோ ஒரு தரம் என்றால் அதை பார்க்க ஆவல் வரும். 


நமது சொற்களும் அப்படித்தான். அவை விலை மதிக்க முடியாதவை. அதை வீணடிக்கக் கூடாது. மிகக் குறைவாக பேச வேண்டும். அளந்து பேச வேண்டும். சிறந்த வார்த்தைகளை தெரிந்து எடுத்து பேச வேண்டும். 


ஒவ்வொரு சொல்லும் மந்திரம் போல. 


அவ்வளவு வலிமை மிக்கவை. அதன் மதிப்பு தெரியமால் வீணடித்திடக் கூடாது. 


பொட்டலம் நிறைய சுண்டல் இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். 


அதுவே வைரக் கற்களாக இருந்தால்?  


நம் சொற்கள் சுண்டலா, வைரமா என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். 


இன்னும் சீதை பேசவில்லை. 


அதுவும் ஒரு செய்திதான். மற்றவர் பேசும் போது இடையிடாமல் அமைதியாக முழுவதும் கேட்பதும் ஒரு கலை தான். .


பாத்திரங்களின் ஊடாக இவற்றை எல்லாம் நாம் கவனித்தால், உயர்ந்த பண்புகள் விளங்கும். நாளடைவில் அவை நம்மிடையே நம்மையும் அறியாமல் வந்து சேர்ந்து விடும். 





1 comment:

  1. “ நமது சொற்களும் அப்படித்தான். அவை விலை மதிக்க முடியாதவை. அதை வீணடிக்கக் கூடாது. மிகக் குறைவாக பேச வேண்டும். அளந்து பேச வேண்டும். சிறந்த வார்த்தைகளை தெரிந்து எடுத்து பேச வேண்டும்.” இது ஒன்றே போறும்.
    இதை கடைப் பிடித்தால் வாழ்க்கை செவ்வனே ஓடும்
    பார்த்தசாரதி

    ReplyDelete