Wednesday, June 8, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - ஒரு முன்னுரை

 திருக்குறள் - பிறனில் விழையாமை - ஒரு முன்னுரை 


இல்லறம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 


இல்வாழ்க்கை - வாழ்க்கைத் துணைநலம் - புதல்வர்களைப் பெறுதல் - அன்புடைமை - விருந்தோம்பல் - இனியவை கூறல் -  செய்நன்றி அறிதல் - நடுவு நிலைமை - அடக்கமுடைமை - ஒழுக்கமுடைமை 


என்பது வரை ஒரு ஆற்றொழுக்காக சிந்தித்து வந்தோம்.


அடுத்த அதிகாரமாக 'பிறனில் விழையாமை' பற்றிக் கூறுகிறார். 


அதாவது ஒருவனுக்கு  சொந்தமான மனைவியை மற்றவன் விரும்பும் தீமை பற்றிக் கூறுகிறார். 


பிறனில் விழையாமை = பிறன் + இல் + விழையாமை. பிறருடைய இல்லத்தை விரும்பாமை. இல்லம் என்பது மனைவியை குறித்து நின்றது. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


(Pl click the above link to continue reading)


ஒரு சமுதாயம், ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால் வீடு சிறக்க வேண்டும். வீடுதான் அடிப்படை. வீட்டைச் சிதைத்தால் நாடு சிதைந்து போகும். 


கணவன் மனனவி உறவு என்பது வீட்டுக்கு அடிப்படை. அது சிதியுமானால் வீடு பிளவு படும். வீடு பிளவு பட்டால் குழந்தைகள் தவிக்க விடப்படுவார்கள். இப்படி பல சிக்கல்கள் வந்து சேரும். 


கணவன் மனைவி உறவுக்குள் இன்னொரு சக்தி நுழையுமானால் அந்த உறவு பலவீனப்படும். 


இந்த உறவுக்குள் பல சக்திகள் உள்ளே நுழைய முற்படுகின்றன. 


முதலாவது பெரிய சக்தி, அரசாங்கம். குடும்பத்துக்குள் அரசாங்கம் நுழைந்தால் அது பலவீனப்படும். 


அது எப்படி ஒரு குடும்பத்துக்குள் அரசு நுழைய முடியும்? என்று கேட்டால் நேரடியாக நுழைய முடியாது. சட்டங்கள் மூலம் அரசு நுழையும். .


கணவன் மனைவிக்குள் ஏதோ சண்டை. பேச்சு முற்றிப் போய் கணவன் கோபத்தில் கை நீட்டி விடுகிறான். அது தவறுதான். மன்னிக்க முடியாத குற்றம்தான். அந்தத் தவறை உணர்ந்து, அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு, அவளை சமாதனப்படுத்த எவ்வளவு கீழே வர முடியுமோ அவ்வளவு வருவான். அதுதான் குடும்பம். இப்போது என்ன ஆகிறது என்றால், கணவன் அடித்து விட்டால் உடனே காவல் துறைக்கு தெரிவித்து, Domestic Violence, Human Rights Violence, Dowry Harassment, என்று பல சட்ட்டங்களில் அவனை கைது செய்து உள்ளே தள்ளி அவனை தண்டிக்க அரசு வழி செய்கிறது. பெண்களை பாதுகாக்க இப்படி பல வழிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்ன ஆகும். அவன் சிறை செல்வான். வெளியே வந்து ?


பெற்றோர் பிள்ளைகளை அடித்தால் பெற்றோரை சிறை செய்யும் சட்டங்கள் வந்து விட்டன.


ஆசிரியர் பிள்ளைகளை தண்டித்தால் ஆசிரியரை கைது செய்ய சிறையில் தள்ளும் சட்டங்கள் வந்துவிட்டன. 


இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். வள்ளுவர் இதைப் பற்றி பேசவில்லை. 


வள்ளுவர் சொல்லுவது இன்னொரு தீமை பற்றி. 


ஒருவனின் மனைவியை இன்னொருவன் விரும்பும் தீய ஒழுக்கம் பற்றி இங்கே கூறுகிறார். 


ஒரு கணவன் அழகு இல்லாதவனாக இருக்கலாம், வீரம் இல்லாதவனாக இருக்கலாம், நிறைய சம்பாதிக்கும் திறன் இல்லாதவனாக இருக்கலாம், அல்லது அவனிடம் கோபம் போன்ற தீய குணங்கள் இருக்கலாம்...


அவற்றை சாக்காக வைத்துக் கொண்டு இன்னொருவன் அவனுடைய மனைவியை அடைய நினைப்பது தவறு என்று சொல்ல வருகிறார். 


ஒருவன் பலசாலியாக இருக்கிறன் என்பதற்காக பலவீனமாக உள்ள ஒருவனின் மனைவியை பறிக்க நினைத்தால் சமுதாயம் வலுவிழந்து போய்விடும். 


"உன் கணவன் சரியான முரடன். அன்பு செலுத்த தெரியாதவன், நீயும் பாவம் எத்தனை நாள் தான் அவனை சகித்துக் கொண்டு இருப்பாய் " என்று ஒரு பெண்ணின் மனதை மயக்கி அவளை அடைய நினைக்கும் தீய ஒழுக்கத்தை இந்த அதிகாரத்தில் கண்டிக்கிறார். .


ஒவ்வொரு ஆடவனும் மாற்றான் மனைவி மேல் ஆசை வைத்தால் ஒரு சமுதாயம், ஒரு நாடு என்ன ஆகும்? 


இது ஒரு மிகப் பெரிய தீமை என்பதால், அதற்காக ஒரு அதிகாரமே செய்கிறார் வள்ளுவர். 


தகாத காமம் ஒரு மனிதனை மிக எளிதாக தவறு செய்யத் தூண்டும். புத்தியை மயக்கும். காமம் சாம்ராஜியங்களை புரட்டிப் போட்டு இருக்கிறது. நாட்டை மண்ணோடு மண்ணாக்கி இருக்கிறது. குலத்தை வேரறுத்து இருக்கிறது. 


அப்படி காம வசப்பட்டு இன்னொருவன் மனைவியை விரும்பும் தீ ஒழுக்கம் பற்றி இந்த அதிகாரத்தில் கூற இருக்கிறார். 


என்ன என்று சிந்திப்போம். 




No comments:

Post a Comment