Sunday, June 12, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 2 - அறம் பொருள் கண்டார்

  

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 2 - அறம் பொருள் கண்டார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


)


பிறன் மனைவியை காதலித்து வாழும் பேதைமை அறம் பொருள் கண்டாருள் இல்லை என்றார் முதல் குறளில். 


அடுத்த குறளில் அது எவ்வளவு பெரிய பேதைமை என்று சொல்கிறார். 


காமவயப்ட்டு எவ்வளவோ பேர் எவ்வளவோ தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் வகைப் படுத்தினால், இந்த பிறன் மனை நோக்கியவன் இருக்கிறானே அவன் எல்லோருளும் கடைசியாக இருப்பான் என்கிறான். அதாவது உள்ளதுக்குள் மோசமானவன் என்கிறார். 




பாடல் 


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


(pl click the above link to continue reading)


அறன்கடை = அறத்தின் எல்லையில், அதாவது வெளியில் 


நின்றாருள்  = நின்றவர்களுள் 


எல்லாம் = அனைவரிலும் 


பிறன்கடை = மற்றவன் வீட்டு வாசலில் 


நின்றாரின் = நின்றவனைப் போல 


பேதையார் இல் = பேதை வேறு யாரும் இருக்க மாட்டார்கள் 




அற நெறி விலகியவர்கள் ஏதோ பெரிய வரிசை (queue) நிற்பது போலவும், அதில் கடைசியாக நிற்பவன் இந்த பிறன் மனை விரும்பியவன் என்றும் கூறுகிறார். 


இன்னொருவன் மனைவி மேல் ஒருவன் ஏன் ஆசை கொள்கிறான்? அவளிடம் ஏதோ இன்பம் கிடைக்கும் என்பதால் தானே? சமுதாயம் சீரழியும் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீ தேடிய இன்பமும் உனக்குக் கிடைக்காது என்கிறார் வள்ளுவர். 


அப்புறம் எதற்கு அதைச் செய்வானேன்? 


வள்ளுவர் "நின்றாருள் எல்லாம்" என்று சொல்லி விட்டார். நின்றவர்கள் எல்லாம் யார் யார் என்று சொல்லவில்லை. பரிமேலழகர் சொல்கிறார். 


காம வயப்பட்டவர்கள் பலவிதமான குற்றங்களைச் செய்வார்கள். அவை என்னென்ன என்று பரிமேலழகர் சொல்கிறார். 


காமவயப்படவன் 


பெண்வழிச் சேறல் 

வரைவின் மகளிரைச் சேறல் 

இழிகுல மகளிரைச் சேறல் 

பிறன்மனை சேறல் 


என்ற நான்கு விதமான குற்றங்களைச் செய்வார்கள் என்கிறார். 


அவை என்னென்ன என்று பார்ப்போம். 


சற்று நெருடலான விடயம்தான். என்ன செய்வது? 


பெண்வழிச் சேறல் என்றால் பெண்ணின் பேச்சைக் கேட்டு நடப்பது. "ஆஹா ஆணாதிக்க சிந்தனை, பெண்ணடிமை" என்று கொடி பிடிக்கும் முன் சற்று பொறுப்பது நல்லது. 


ஒரு பெண்ணிடம் காமவசப்பட்டு அவள் சொல்வதைக் கேட்டு வீட்டு மற்றும் நாட்டு நிர்வாகத்தை நடத்துவது குற்றம் என்கிறார். அன்போடு மனைவி சொல்கிறாள், அம்மா சொல்கிறாள் என்றால் அதைக் கேட்பதில் தவறில்லை.  காமவசதில்  ஒரு பெண் சொல்கிறாள் என்பதற்காக ஒரு நாட்டிலோ, நிர்வாகத்திலோ ஒருவன் ஒரு முடிவை எடுப்பான் என்றால் அது தவறு என்கிறார்.  


நாம் செய்தித் தாள்களில் பார்கிறோமே. பெரிய அதிகாரிகளை, இராணுவ இரகசியம் தெரிந்தவர்களை, அரசியல்வாதிகளை பெண்களை அனுப்பி மயக்கி, பின் அதைக் கொண்டு அவர்களை மிரட்டி தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  இதை ஆங்கிலத்தில் Honey Trap என்று சொல்லுவார்கள். 


அது முதல் குற்றம். 


இரண்டாவது  வரைவின் மகளிரைச் சேறல்.   இப்படிதான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை செய்து கொண்டு வாழ்வது ஒரு முறை. அப்படியெல்லாம் இல்லை, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பது இன்னொரு முறை. வரைவு இல்லாமல் வாழும் பெண்களை வரைவின் மகளிர் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு கூட்டம் இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. விலைமகளிர் என்று சொல்லுவார்களே. நாகரீகம் கருதி, மேலும் விவரிக்காமல் விட்டு விடுவோம். 


மூன்றாவது, இழிகுல மகளிர் என்கிறார். அதாவது தன்னை விட தாழ்ந்த, பொருத்தம் இல்லாத பெண்ணிடம் காமம் கொண்டு செல்வது. இதை எப்படி விவரிப்பது ? அப்படியே விட்டுவிடுகிறேன். இது குலம் பற்றியது அல்ல, பொருந்தா காமம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 


அடுத்ததாக பிறன் மனை நயத்தல். 


ஏன் இந்த பிறன் மனை நயத்தலை எல்லோரிலும் கீழாக வள்ளுவர் சொன்னார் என்றால்....


முதல் சொன்ன மூவர்க்கும் அறமும், பொருளும் நட்டப்படும். ஆனால் இன்பம் கிடைக்கும். 


ஆனால், பிறன் மனை நயந்தவனுக்கு இன்பமும் கிடைக்காது.  எப்போது அந்தப் பெண்ணின் கணவன் வந்து விடுவானோ, வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து தான் இன்பம் அனுபவிக்கப் போக முடியும். அப்படி ஒரு பயத்தில் இன்பம் அனுபவிக்க முடியுமா? 


அறமும் போய், பொருளும் போய், இன்பமும் கிடைக்காமல் போவதால் அவனை வடி கட்டின முட்டாள் என்கிறார் வள்ளுவர். 


எல்லாவற்றையும் இழந்து, ஒன்றும் கிடைக்காமல் நிற்பவனை என்ன என்று சொல்லுவது?


அது மட்டும் அல்ல, பழி, அவமானம், தலை குனிவு எல்லாம்வரும் அல்லவா?


என்னதான் கிடைக்கும் என்று இன்னொருவன் மனைவியை விரும்பி ஒருவன் போகிறான் என்று  வள்ளுவர் அவனை கண்டிக்கிறார். 


சற்று சங்கடமான குறள்தான். அறம் சொல்ல வந்துவிட்டால் எல்லாம் கூறித்தான் ஆகவேண்டும் என்று வள்ளுவர் அதையும் வெளிபாடையாக கூறினார். 
















No comments:

Post a Comment