கம்ப இராமாயணம் - பெண்கள் காட்டிய வழி
இராமாயணம் என்றால் இராமன் காட்டிய வழி. அல்லது இராமனின் வழி என்று சொல்லலாம்.
உண்மையிலேயே இராமாயணம் முழுவதும் பெண்களால் நடத்தப்பட்ட ஒரு காப்பியமாகவே தெரிகிறது.
எப்படி என்று பார்ப்போம்.
முதல் காய் நகர்த்தல் கூனி என்ற பெண்ணால் நிகழ்கிறது. அதுவரை ஆற்றோட்டமாக சென்று கொண்டிருந்த கதை கூனியால் மடை மாற்றம் செய்யப்படுகிறது. நமக்குத் தெரியும் கூனியின் பேச்சு சாதுரியம், அவள் எப்படி கைகேயின் மனதை மாற்றினாள் என்று.
அடுத்த நகர்வு, கைகேயி என்ற பெண். கூனியால் மனம் மாற்றம் செய்யப்பட்ட கைகேயி ஒரு படி மேலே போய் தசரதனின் மனதை மாற்றுகிறாள். இராமனை காட்டுக்கு அனுப்பி, பரதனை முடி சூட வைக்கிறாள்.
சரி. இராமன் கானகம் போனான். போன இடத்தில் என்ன நடந்தது?
சூர்பனகை என்ற பெண்ணால் பகை மூண்டது. அவள் இராமன் மற்றும் இலக்குவர்கள் மேல் ஆசைப்பட்டது, மூக்கு அறுபட்டது வரை சரி. காப்பியம் அங்கேயே நின்றிருக்கும். ஆனால், சூர்பனகை , அவளுடைய அண்ணனான இராவணனிடம் சென்று அவனுக்கு சீதை மேல் ஆசையை ஏற்றுகிறாள். இராவணன் தடுமாறுகிறான். கதையை மேலே நகர்த்துகிறாள் சூர்பனகை.
சரி, அப்புறம் என்ன நடந்தது? இராவணன் நேரே வந்து இராமனிடம் சண்டை போட்டானா என்றால் இல்லை. பொன் மான் வந்தது. அங்கே சீதை என்ற பெண் காப்பியத்தை நகர்த்துகிறாள். "நீயே எனக்கு அந்த பொன் மானை பிடித்துத் தர மாட்டாயா" என்று கொஞ்சுகிறாள். இராமன் மான் பின் போகிறான். இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போகிறான்.
இராமன் நேரே வாலியைப் பார்த்து அவன் உதவியை நாடி இருந்தால், வாலியின் பலத்துக்கு பயந்து இராவணன் சீதையை விடுவித்து இருக்கலாம். அதற்கு முன் சபரி என்ற பெண் வருகிறாள். அவள், இராமனை சுக்ரீவன் பால் போ என்று இராமனின் போக்கை மாற்றுகிறாள்.
இராமன், சுக்ரீவனை பார்த்து, நட்பு கொண்டு, சீதையைத் தேடத் தொடங்குகிறான்.
அசோகவனத்தில் சீதை தனிமையில் வாடுகிறாள். அவள் மனம் சோர்ந்த போதெல்லாம் அவளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி அவளை திரிசடை என்ற பெண் தேற்றுகிறாள். அவள் இல்லை என்றால் சீதையின் கதி என்ன என்று அனுமானிப்பது கடினம்.
அனுமன் இலங்கைக்கு வருகிறான். இலங்கையை இலங்கினி என்ற பெண் பாதுகாவல் செய்கிறாள். அனுமன் அவளை சண்டையில் வெல்கிறான். அவள் அவனுக்கு வழி விடுகிறாள்.
சண்டை நடக்கிறது, இராமன் வென்று சீதையை சிறை மீட்கிறான்.
இந்த மொத்த காப்பியத்தில் தோற்றுப் போன பெண் என்று சொல்லுவது என்றால் வாலியின் மனைவி தாரையைச் சொல்லலாம். வாலி சண்டைக்கு செல்வதை தடுக்க நினைத்து தோல்வியுருகிறாள்.
அவளைத் தவிர்த்து, இராமாணயம் முழுக்க முழுக்க பெண்களாலேயே நடத்தப்பட்டு இருக்கிறது.
இராமனின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனை முன்னோக்கி செலுத்தியதில் ஒரு பெண்ணின் பங்கு இருந்து இருக்கிறது.
கதையின் நாயகன், திருமாலின் அவதாரம், சக்ரவர்த்தித் திருமகன் ...பெண் சொல்லி நான் கேட்பதா என்று சொல்லாமல், ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்களால் நடத்தப்படுவதை அனுமதிக்கிறான் இராமன்.
அவன் நினைத்து இருந்தால் கைகேயி சொன்னதை கேட்க மாட்டேன் என்று சொல்லி இருக்கலாம். சீதை பொன் மான் வேண்டும் என்றபோது, அதெல்லாம் முடியாது என்று மறுத்து இருக்கலாம்.
தாய், தாரம், பக்தை என்ற அனைத்து பெண்களின் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கிறான். அதனால் துன்பம் வரும், சிக்கல் வரும் என்று தெரிந்து இருந்தாலும் அவர்கள் கருத்தை அவன் உதாசீனம் செய்யவில்லை.
Excellent!
ReplyDeletechittanandam
இப்படிப் பெண் சொல் கேட்டதனால்தான் பல துன்பங்கள் நேர்ந்தன என்றும் சொல்லலாமே!
ReplyDelete