Friday, September 6, 2024

திருக்குறள் - கூடாவொழுக்கம் - மனத்தது மாசாக

 திருக்குறள் - கூடாவொழுக்கம் - மனத்தது மாசாக 


வள்ளுவர் கூடாவொழுக்கம் என்பது மனதளவில் துறவறம் கொள்ளாமல், வெளி வேடம் போடும் போலிச் சாமியார்களைப் பற்றித்தான் கூறுகிறார் என்றாலும், அதை சாதாரண மக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். 


சாதாரண மக்கள் என்ன செய்கிறார்கள்?  கோவில், பூஜை, வீட்டில் தினம் இரண்டு வேளை சாமி கும்பிடுவது, நாள் கிழமை என்றால் அந்தந்த கடவுளுக்கு சிறப்பான பூஜை செய்வது, பலகாரம் செய்து படைப்பது என்று இருக்கிறார்கள். தினம் குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டுதான் ஒரு வாய் காப்பி கூட குடிப்பேன் என்று சொல்லுவார்கள். 


இதெல்லாம் வெளி வேடம். 


உள்ளுக்குள் பொறாமை, பேராசை, அழுக்காறு, பொய் , வஞ்சனை, பயம், வெறுப்பு, கோபம், தகாத காமம், புறம் சொல்லுதல் என்று எல்லாம் இருக்கும். 


இதை எல்லாம் உள்ளே வைத்துக் கொண்டு, சாமி கும்பிடுகிறேன், கோவிலுக்குப் போகிறேன், பூஜை செய்கிறேன் என்று கூறுவதால் ஏதாவது பயன் உண்டா?


"மனதுக்குள் ஆயிரம் அழுக்கை வைத்துக் கொண்டு, பெரிய பக்திமான் போல் வேடம் போடுபவர்கள் பலர்" 


என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி

மறைந்தொழுகும் மாந்தர் பலர்


பொருள் 


மனத்தது = மனதுக்குள் 


மாசாக = அழுக்குகள் மண்டி கிடக்க 


மாண்டார் = மாட்சிமை பொருந்தியவர்களைப் போல 


நீர்  ஆடி = குளித்து, சமய சின்னங்களை உடல் எல்லாம் பூசிக் கொண்டு, வித விதமாக உடை உடுத்து....


மறைந்தொழுகும் = தங்கள் உள்ளத்தில் உள்ள மலங்களை மறைத்து வாழும் 


மாந்தர் பலர் - மக்கள் பலர் 


"புறம் சுவர் கோலம் செய்து" என்ன பயன்?  


வீட்டுக்கு வெளியே வெள்ளை அடித்து விட்டு, உள்ளே குப்பையும் கூளமுமாக இருந்தால் நன்றாகவா இருக்கும்?  


மறைந்தொழுகும் - ஏன் மறைக்க வேண்டும்? வெளியே தெரிந்தால் அசிங்கம். எனவே, அதை மூடி மறைக்க வேண்டும். 



"பலர்" - ஏதோ ஒரு சில பேர் அல்ல. பெரும்பாலானோர் அப்படித்தான் என்கிறார் வள்ளுவர். அவர் காலத்திலேயே அப்படி என்றால், இன்று எப்படி இருக்கும்?


போலிச் சாமியார்களை விட்டு விடுவோம். போலியான நம் வாழ்வை சரி செய்ய முயல்வோம். 



1 comment:

  1. சரியான செய்திதான். நன்றி

    ReplyDelete