Thursday, July 31, 2025

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பசி தீராக் குழந்தை

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - பசி தீராக்  குழந்தை 

https://interestingtamilpoems.blogspot.com/2025/07/blog-post_31.html



சில வீடுகளில் ஆண் பிள்ளைகள் மிகுந்த பசியோடு இருக்கும். எதை வைத்தாலும் சில நிமிடங்களில் காலி பண்ணி விடுவார்கள். அம்மாக்களுக்கு பிள்ளை நன்றாக சாப்பிடுகிறானே என்று ஒரு மகிழ்ச்சி இருந்தாலும், "ஒண்ணு செஞ்சா ஒரு நாலு நாளைக்கு வைக்க விட மாட்டான்...அது காலி ஆகிற வரையில் அவனுக்கு தூக்கம் வராது" என்றும் அலுத்துக் கொள்வார்கள். 


தோசை செய்து போட்டால் நாலு, அஞ்சு, ஆறு என்று போய்க் கொண்டே இருக்கும். வளரும் பிள்ளைகள். ஓடி ஆடி வந்திருப்பான். என்ன போட்டாலும் பசி எளிதில் அடங்காது. 


இந்த உள்ளூரில் இந்த ஆட்டம் பாட்டத்துக்கே இவ்வளவு பசிக்கும் என்றால், உலகையே  படைத்து, காத்து அருளும் பெருமாளுக்கு எவ்வளவு பசிக்கும் என்று நினைக்கிறார் பேயாழ்வார். 


"மண்ணை உண்டு, அரக்கியின் முலைப் பால் உண்டு, அதுவும் போதாது என்று ஆயர் பாடியில் உள்ள வீடுகள் எல்லாம் சென்று வெண்ணையை திருடி உண்டான். இப்படி தன் பிள்ளை திருடித் தின்கிறானே என்று போபம் கொண்டு அவனை சின்ன கையிற்றால் யசோதை கட்டிப் போட்டாள்"


என்கிறார். 


பாடல் 


மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,


வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக்


கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,


வயிற்றினோ டாற்றா மகன்.


பொருள் 



மண்ணுண்டும் = மண்ணைச் சாப்பிட்டு. இந்த உலகையே உண்டு. 


பேய்ச்சி முலையுண்டு = பூதனை என்ற அரக்கியின் முலைப் பாலைக் குடித்து  


மாற்றாதாய் = பசி அடங்காமல் 


வெண்ணெய் விழுங்க = ஆயர்பாடியில் உள்ள வீடுகளில் வெண்ணையை திருடி உண்டதால் 


வெகுண்டு = கோபம் கொண்டு 


ஆய்ச்சி = யசோதை 


கண்ணிக் கயிற்றினால் = சிறு சிறு கயிறுகள் கொண்டு முடி போட்ட கையிற்றால் 


கட்ட = கட்டிப் போட 


தான் = அவனே 


கட்டுண் டிருந்தான் = கட்டுக்குள் இருந்தான் 


வயிற்றினோ டாற்றா மகன் = வயிறு ஒரு போதும் திருப்தி அடையாத மகனான கண்ணபிரான். 


அது என்ன "கண்ணிக் கயிற்றினால்" ?  


கயிறு இருந்தால் தானே கட்டிப் போடுவார்கள் என்று ஊரில் உள்ள கயிறை எல்லாம் துண்டு துண்டாய் வெட்டிப் போட்டு விடுவானாம் கண்ணன். 


அவனைக் கட்டிப் போட கயிறு எங்கே என்று தேடி, எதுவும் கிடைக்காமல், இருக்கிற துண்டு துண்டு கயிறுகளை எல்லாம் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு நீண்ட கயிறை உருவாக்கினாள் யசோதை. எனவே "கண்ணிக் கயிறு" க். கண்ணி என்றால் சிறு துண்டு. 


உலகையே உண்ட அவனுக்கு இந்த முடிச்சுப் போட்ட கயிறு எம்மாத்திரம். 


இருந்தாலும் கட்டுண்டு கிடந்தான். 


காரணம், 


இறைவனை நமது பலத்தால் பற்ற முடியாது. அது உடல் பலம் என்றாலும் சரி, மூளைப் பலம் என்றாலும் சரி. படித்து, ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடித்து விடுகிறேன் என்றால் முடியாது. ஆனால், அன்புக்கு அவன் கட்டுப் படுவான். அன்பால் அவனை எளிதாக கட்டி விடலாம். அதுவும், துண்டு துண்டு கயிற்றுக்கு அவன் கட்டுண்டு நிற்பான். 


இரண்டாவது,  வினை, இறைவனையும் விடாது. வெண்ணையை திருடி உண்டது குற்றம் தானே. அதற்கு தண்டனை கையிற்றால் கட்டப்பட்டு இருப்பது. ஒரு குறியீடு. ஒரு அடையாளம். வினை  யாரையும் விடாது. விளையாட்டாகச் செய்தேன், தெரியாமல் செய்தேன், அதுக்குக் கூட எனக்கு உரிமை இல்லையா என்றெல்லாம் வாதம் பண்ணி பலன் இல்லை. 


சிறு பிள்ளையாக இருந்த போது, விளையாட்டாக கூனி முதுகில் களி மண் உருண்டையை அம்பில் சொருகி அவள் முதுகில் அடித்ததன் பலன் நமக்குத் தெரியும். 


எல்லாவற்றையும் விட்டு விடுவோம். பாசுரத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தெரியும். பொருள் தெரிந்து படிக்கும் போது அதன் இனிமை மேலும் கூடும். 



No comments:

Post a Comment