Tuesday, October 27, 2026

திருக்குறள் - செல்லாது உயிருண்ணும் கூற்று

 திருக்குறள் - செல்லாது உயிருண்ணும் கூற்று



ஒரு வேலை நிமித்தமாக வெளியூர் போகிறோம். போன இடத்தில் வேலை முடிக்க நாம் நினைத்ததை விட மேலும் சில நாள் வேண்டி இருக்கும் போல இருக்கிறது. இருந்து முடித்துவிட்டு வந்தால் நமக்கு சந்தோஷமாக இருக்கும். அல்லாமல், வந்த வேலையை முடிக்காமல் திரும்ப வேண்டும் என்றால், எப்படி இருக்கும் ? 



இந்த உயிர், நம்முடைய உடல் என்ற ஊருக்கு வந்து இருக்கிறது. வந்த நோக்கம் என்ன?  நல்லபடியாக வாழ்ந்து, இறைவனை மீண்டும் சென்று அடைவது. அந்த வேலையை முடிக்காமல் திரும்பினால் என்ன ஆகும்? திரும்பியும் வர வேண்டி இருக்கும். எத்தனை தடவை வருவது? 


வள்ளுவர் சொல்கிறார், 

"நீ கொல்லாமை என்ற அறத்தை மேற் கொண்டு வாழ்ந்தால், உன் உயிரை எடுக்கும் எமன் உன்னிடம் வர மாட்டான்" என்று. 


பாடல் 


கொல்லாமை மேல்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணும் கூற்று


பொருள் 



கொல்லாமை = பிற உயிர்களை கொல்லாத அறத்தை 


மேல்கொண்டு = கடைப் பிடித்து 


 ஒழுகுவான் = வாழ்வான் 


வாழ்நாள்மேல் = அவனுடைய வாழ்நாளில் 


செல்லாது = வராது 


 உயிருண்ணும் கூற்று = உயிரை உண்ணும் கூற்றுவன் 


அது எப்படி, நான் பிற உயிர்களை கொல்லமால் இருந்தால், என் உயிர் போகவே போகாதா? அப்படி யாரும் இருந்த மாதிரி தெரியலியே என்று நாம் நினைக்கலாம். 


பரிமேல் அழகர் விளக்கம் செய்கிறார். 


நாம் வாழ்வதற்கு ஒரு குறிக்கோள் இருக்கிறது. அதாவது, வாழ்வாங்கு வாழ்ந்து, பின் இறைவன் திருவடிகளை அடைவது. 


கொல்லாமல்  இருந்தால், வாழ்நாள் நீடிக்கும், நீடித்தால், இறை சிந்தனை வரும், ஆன்மா பக்குவப்படும், துறவறம் சாத்தியப் படும். உயிர் இறைவனை சென்று அடையும். அதற்குள், கூற்றுவன் வந்து உயிரை கொண்டு போக மாட்டான்.  ஆன்மா பக்குவ நிலை அடையும் வரை காத்து இருப்பான். பின் உயிரை இறைவனிடம் சேர்ப்பான். 


நீ மற்ற உயிர்களை அவை முழு வாழ்நாள் வாழ விடாமல் பாதியிலேயே கொன்று தின்கிறாய் அல்லவா. அதே போல், உன் உயிர் பக்குவம் அடையும் முன்பே நான் அதை தின்று விடுகிறேன் என்று கூற்றுவன் சொல்வானாம்.


"உயிர் உண்ணும் கூற்று" என்றார். 


நீ மற்ற உயிர்களை கொல்லாமல், அவை வாழ்நாள் முழுவதும் வாழ விட்டால், கூற்றுவனும், நீ உன் வாழ்வின் நோக்கம் அடையும் வரை, உன் உயிரை விட்டு வைப்பான். 


வள்ளுவருக்கு ஒரு பூ. பரிமேலழகருக்கு ஒரு பூ.





No comments:

Post a Comment