கம்ப இராமாயணம் - தீரும் என் சிறுமை
https://interestingtamilpoems.blogspot.com/2026/10/blog-post.html
இலங்கை எங்கும் தேடித் பார்த்து விட்டு, இறுதியில் , அனுமன் அசோகவனத்தை அடைகிறான். அங்கும் சீதை இருப்பாளா என்று தெரியாது. அனுமன் சோர்ந்து விட்டான். இங்கும் இல்லை என்றால் என்ன செய்வது ? இராமனிடம் சென்று என்ன சொல்லுவது? சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று எப்படிச சொல்வது? அதை விட இங்கேயே உயிரை விடுவதே மேல் என்று நினைக்கிறான்.
இராமன் மேல் அவ்வளவு காதல், பக்தி. அவன் துன்பத்தை அனுமனால் சகிக்க முடியவில்லை.
பாடல்
மாடு நின்றஅம் மணி மலர்ச் சோலையை மருவி,
'தேடி, அவ்வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;
ஊடுகண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;
வீடுவேன், மற்றுஇவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி'.
பொருள்
மாடு நின்ற = அருகில் உள்ள
அம் = அந்த
மணி மலர்ச் சோலையை மருவி = மணி போல் ஒளி விடும் மலர்கள் நிறைந்த அந்தச் சோலையை அடைந்து
'தேடி, = அங்கு தேடி
அவ்வழிக் காண்பெனேல் = அங்கே பிராட்டியை கண்டால்
தீரும் என் சிறுமை = என் துன்பம் அனைத்தும் தீரும்
ஊடுகண்டிலென்என்னின் = சோலையின் உள்ளே காணவில்லை என்றால்
பின், உரியது ஒன்று இல்லை = அப்புறம் செய்வதற்கு ஒன்றும் இல்லை
வீடுவேன் = உயிரை விடுவேன்
மற்று = மேலும்
இவ் விலங்கல்மேல்= இந்த திரிகூட மலையின் மேல் உள்ள
இலங்கையை வீட்டி = இலங்கையை அழித்து
விரக்தியின் உச்சம். தன்னையும் அழித்துக் கொண்டு, இலங்கையையும் அழித்து விடுவேன் என்று நினைக்கிறான்.
ஒரு வேலை சொன்னால், அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும். ஏன் முடிக்கவில்லை என்று காரணம் தேடிக் கொண்டு இருக்கக் கூடாது.
இராமன் சொன்னால் அதைச் செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று நினைக்கிறான் அனுமன்.