திருக்குறள் - கொல்லாமை சூழ்வான் தலை
இந்தப் பிறப்பு இன்பமானதா? துன்பம் நிறைந்ததா? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள்.
இரண்டும் கலந்ததுதான் என்று சொல்லுவீர்கள். சில சமயம் இன்பம், சில சமயம் துன்பம் இரண்டும் இருக்கிறது என்று தான் பெரும்பாலானோர் சொல்லுவார்கள்.
வள்ளுவரும், அவருக்கு உரை செய்த பரிமேல் அழகரும், அது அப்படி அல்ல. இந்தப் பிறவியானது துன்பமே ஆனது என்கிறார்.
அது எப்படி? மனைவி/கணவன்/பிள்ளைகள், நட்பு, சுற்றம், உணவு, உடை, ஊர் சுற்றல், இசை, கலை, என்று எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. எப்படி துன்பமே என்று சொல்ல முடியும் என்று கேட்கலாம்.
ஒவ்வொரு இன்பத்தின் கருவிலும், துன்பம் இருக்கிறது. ஒவ்வொரு இன்பமும் துன்பத்தை கூடவே கொண்டு வருகிறது.
நல்ல உணவு இன்பம்தானே? இன்பம் தான். ஆனால், அது கூடவே சர்க்கரை வியாதி, உடல் பருமன், என்று பல உபாதைகள் வரும். உடனே வருமா என்றால் இல்லை. ஆனால், வரும். கட்டாயம் வரும். உடல் அத்தனை இன்பத்தையும் அனுபவிக்கிறது. அனுபவிக்க அனுபவிக்க அது தேய்கிறது. நோய் வருகிறது. மூப்பு வருகிறது. வரும் போது தெரியும் அதன் வலி.
ஆண் பெண் உறவு இன்பம்தான். ஆனால், அதில் உள்ள சிக்கல்கள் எவ்வளவு?
அதெல்லாம் இருக்கட்டும். இன்பம் இருக்கிறதே என்று வாதம் செய்தால், அவர்களிடம் ஒரு கேள்வி. பிறவி இன்பமானதுதானே, இன்னும் பல பிறவிகள் தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? இன்பமானதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? இன்னும் ஒரு நூறு பிறவி எடுத்து இன்பங்களை அனுபவிக்கலாமே?
யாரும் மேலும் மேலும் பிறவி வேண்டும் என்று சொல்லுவது இல்லை.
பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள், இல்லறத்தை விடுத்து துறவறம் மேற்கொள்கிறார்கள். அப்படி துறவறம் பூண்டோர்களில், கொல்லாமை என்ற அறத்தை கடை பிடிப்பவர்கள், அவர்களுள் தலை சிறந்தவர் என்கிறார் வள்ளுவர்.
பாடல்
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
பொருள்
நிலைஅஞ்சி = பிறப்பு என்ற நிலையை அஞ்சி
நீத்தாருள் = மனை அறத்தை விட்டு நீங்கியவர்களில்
எல்லாம் = அவர்களுக்குள்
கொலைஅஞ்சிக் = பிற உயிர்களை கொல்லுவதை அஞ்சி
கொல்லாமை = கொல்லாமை என்ற அறத்தை
சூழ்வான்= கடைபிடிப்பவன்
தலை = தலையானவன், சிறந்தவன்
அது என்ன துறவிகளில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று உண்டா என்று கேட்டால், "துறவு என்பது ஒன்றுதான் என்றாலும், சமயங்கள் பலவாகலின் அவற்றுள் எல்லாம் தலை" என்று உரை செய்கிறார்.
முதலில் பிறவி துன்பம் நிறைந்தது என்று அறிய வேண்டும்.
அதில் இருந்து விடுபட எண்ண வேண்டும்.
அதற்கு துறவு வழி என்று அறிய வேண்டும்.
துறந்த பின்னும், பிற உயிர்களை கொல்லாமல் இருக்கும் அருள் மனதில் சுரக்க வேண்டும்.
எல்லாம் நடக்கட்டும்.
No comments:
Post a Comment