Pages

▼

Sunday, October 25, 2026

கம்ப இராமாயணம் - மயில் இயல் குயில் மழலையாள்

 கம்ப இராமாயணம் - மயில் இயல் குயில் மழலையாள்

https://interestingtamilpoems.blogspot.com/2026/10/blog-post_25.html


"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" 


என்றார் வள்ளுவர். அன்பை அளப்பது கண்ணீர் மட்டும் அல்ல, பிரிவுத் துயரும் தான். அந்தக் கண்ணீருக்கும் அடிப்படை பிரிவுதான். 


அந்தப் பிரிவு தற்காலிகமானதாக இருக்கலாம், அல்லது நிரந்தரமாக இருக்கலாம். பிரிவின் துயரம் அன்பின் ஆழம். 


சீதைக்கு, இராமன் மேல் உள்ள காதலை எப்படிச் சொல்வது?


அவனைப் பிரிந்து அவள் பட்ட வேதனை அவளின், காதலைச் சொல்லும். 


இருபத்தி ஐந்து பாடல்களில் இராமனைப் பிரிந்த சீதையின் சோகத்தைப் பிழிகிறார் கம்பர். 



பாடல் 


துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்;

வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்;

மயில் இயல்,குயில் மழலையாள், மான் இளம் பேடை

அயில் எயிற்றுவெம் புலிக் குழாத்து  அகப்பட்டதன்னாள்.


பொருள் 



துயில் எனக் = தூக்கம் என்பதை 


கண்கள் = கண்கள் 


இமைத்தலும் = மூடுவதும் 


முகிழ்த்தலும் = திறப்பதும் 


துறந்தாள் = விட்டு விட்டாள் 


வெயிலிடைத்தந்த = பகல் வெளிச்சத்தில் ஏற்றிய 


விளக்கு என = விளக்கு போல 


ஒளி இலா மெய்யாள்; = ஒளி மங்கிய மேனியாள் 


மயில் இயல் = மயில் போன்ற சாயலும் 


குயில் மழலையாள் = குயில் போல மழலைச் சொல் பேசும் 


 மான் இளம் பேடை = இளமையான பெண் மான் போன்ற சீதை 


அயில் எயிற்று = கூரிய பற்களை உடைய 


வெம் புலிக் குழாத்து = கோபமான புலிக் கூட்டத்தில் 


அகப்பட்டதன்னாள் = அகப்பட்டு கொன்ட மாதிரி இருந்தாள் 


புலிக் கூட்டத்தில் அகப்பட்ட இளைய பெண் மானைப் போல இருந்தாள்.


எவ்வளவு பயம், எவ்வளவு தவிப்பு இருக்கும். 


அந்த நிலையில் உள்ள ஒரு பெண் என்ன நினைப்பாள்?  தன்னைப் பற்றி, தன் கணவனைப் பற்றி என்னவெல்லாம் நினைப்பாள் ?


யோசிப்போம்...பின்னால் சீதை என்ன நினைத்தாள் என்றும் பார்ப்போம். 




1 comment: