இராமாயணம் - விராதன் வதை - என்னையே நுகர்தி
இராமன், இலக்குவன் மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவனைத் துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் சென்று அவனோடு போர் புரிகிறார்கள்.
விராதனால் இராம இலக்குவனர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சுகிறாள்.
என்னால் தானே இந்த சண்டை என்று வருந்துகிறாள். தவிக்கிறாள். சொல்லி அழக் கூட ஆள் யாரும் இல்லை. துணை இல்லை.
"தாயைப் போல கருணை உள்ள இராமனையும் இலக்குவனையும் விட்டு விடு, என்னை அனுபவித்துக் கொள் என்று அவன் காலில் விழுந்து கெஞ்சுகிறாள்"
பாடல்
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள்;
உரை பெறாள்;
மின்னை ஏய் இடை நுடங்கிட
விரைந்து தொடர்வாள்;
‘அன்னையே அனைய அன்பின்
அறவோர்கள்தமை விட்டு
என்னையே நுகர்தி’ என்றனள்-
எழுந்து விழுவாள்.
பொருள்
பின்னை = அப்புறம்
ஏதும் = வேறு எந்த
உதவும் = உதவி செய்யும்
துணை பெறாள் = துணை ஒன்றையும் பெறாதவள்
உரை பெறாள் = ஆறுதல் உரை சொல்லக் கூட யாரும் இல்லாதவள்
மின்னை ஏய் = மின்னல் போன்ற
இடை = இடுப்பு
நுடங்கிட = வாட
விரைந்து தொடர்வாள் = வேகமாக அரக்கன் பின்னால் சென்று
‘அன்னையே அனைய = தாயைப் போன்ற
அன்பின் = அன்பு கொண்ட
அறவோர்கள்தமை விட்டு = அறவழியில் நடக்கும் இராம இலக்குவர்களை விட்டு விட்டு
என்னையே நுகர்தி’ = என்னை நுகர்ந்து கொள் , அனுபவித்துக் கொள்
என்றனள் = என்றாள்
எழுந்து விழுவாள் = எழுந்து பின் விழுவாள்
கொடுமையில் பெரிய கொடுமை, தண்டனையில் பெரிய தண்டனை பேசக் கூட ஆள் இல்லாமல், துன்பம் வந்த போது ஆறுதல் சொல்லக் கூட ஆள் இல்லாமல் தனித்துப் போவதுதான். பெரிய தவறு செய்தவர்களை தனிமைச் சிறையில் ஏன் அடைக்கிறார்கள். யாருமில்லாத தனிமை பெரிய தண்டனை. துன்பம்.
சீதை அவ்வாறு ஆகிப் போனாள்.
நட்பும், உறவும் தேவை. நாம் நன்றாக இருக்கும் போது அதன் தேவை, முக்கியத்துவம் புரியாது. நாம் நன்றாக இருக்கும் போது நாம் நட்பையும், உறவையும் உதாசீனப் படுத்தி விடுகிறோம். நமக்குத் தேவையான போது அது கிடைக்காது.
எனவே, நன்றாக இருக்கும் போது நட்புக்கும், உறவுக்கும் நேரம் செலவிட வேண்டும்.
அது மட்டும் அல்ல, நாம் சுகமாக இருக்கும் போது வேறு யாருக்காவது நமது உதவி தேவைப் படலாம். ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு நம்பிக்கையான வார்த்தை தேவைப் படலாம். ஓடிச் சென்று உதவ வேண்டும். நேரம் இல்லை, எனக்கே ஆயிரம் பிரச்சனை இதில் ஊர் பிரச்சனையை நான் எங்கு போய் தீர்ப்பது என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. ஆயிரம் பிரச்சனையில், ஆயிரத்து ஓராவது பிரச்சனையாக மற்றவர்களுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், நமக்கு ஒரு தேவை வரும்போது யாராவது உதவுவார்கள்.
"நுகர்தி " என்ற சொல்லுக்கு அனுபவித்தல் என்பது நேரடியான பொருளாக இருக்கலாம். உரை எழுதிய பெரியவர்கள், "என்னை வேண்டுமானால் தின்று கொள் , அவர்களை விட்டு விடு " என்று கூறுவதாக உரை எழுதி இருக்கிறார்கள். உங்கள் மனதுக்குப் பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள்.
"‘அன்பின்அறவோர்கள் " என்கிறாள் இராம இலக்குவனர்களை.
ஏன் ?
அன்பிற்கும் இடத்தில் அறம் தானே இருக்கும்.
அறம் என்றால் என்ன என்று யாராலும் அறுதியிட்டு கூற முடியாது.
"ஈரில் அறம்" என்பான் கம்பன். அறத்திற்கு இதுதான் எல்லை என்று யாரும் சொல்ல முடியாது.
"அறம் என்று ஒன்று உண்டு, அது அமரர்கும் அறிய ஒண்ணாதது " என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார் , கந்த புராணத்தில்
தேவர்களாலும் அறிய முடியாதென்றால் நாம் எம் மாத்திரம் ? பின் அறியாத ஒன்றை எப்படி கடை பிடிப்பது ?
ரொம்ப சுலபம். அன்பிருந்தால் அறம் தானே வரும்.
"என்பிலதனை வெயில் போல் காயுமே அன்பிலதனை அறம் " என்பார் வள்ளுவர்.
எலும்பு இல்லாத புழுவை வெயில் எப்படி காய்ந்து கொல்கிறதோ அது போல அன்பில்லாதவனை அறம் அழிக்கும் என்கிறார்.
அன்பிருந்தால் அறம் வரும்.
"அன்னையே அனைய அன்பின்"
அது என்ன அன்னை போன்ற அன்பு ?
நமக்கு தீமை செய்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு.
ஒரு பெண்ணுக்கு அவளின் அழகு மிகப் பெரிய சொத்து.
பிள்ளை பெறுவது என்றால் அழகு அழியும். உடலின் கட்டுக் கோப்பு தளரும். தூக்கம் போகும். எடை கூடும். உடல் பெருக்கும். அழகு கட்டாயம் குறையும். தன் அழகை குறைத்த தன் பிள்ளையின் மேல் அந்த தாய் கோபம் கொள்ள மாட்டாள். என் ராசா, என் ராசாத்தி என்று தன பிள்ளையை கொஞ்சுவாள். கொஞ்சுவது மட்டும் அல்ல, தன் உதிரத்தை பாலாக்கித் தருவாள்.
அது போல, தனக்கு துன்பம் செய்தவர்களையும் பொறுத்து அவர்களுக்கு நல்லது செய்யும் அன்புள்ளம் கொண்டவர்கள் இராமனும் இலக்குவனும் என்று கூறுகிறார்கள்.
போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகும் பாடல் தான். இருந்தும் அதிலும் ஆயிரம் அர்த்தங்கள் கம்பனில்.
நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டும்.
அத்தனையும் வாழ்க்கைக்கு நலம் செய்யும் பாடல்கள். பாடங்கள்.